கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஒரு படம். அதைச் சுற்றி ஊர் மோதல், காதல், பழிக்குப் பழி என திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.

கிராமத்துப் பின்னணியில் சென்டிமென்ட்டான குடும்பப் படங்களை யதார்த்தமாய் கொடுப்பவரான சுசீந்திரன், இந்தப் படத்திலும் அதே பாணியைக் கையாண்டிருக்கிறார்.

ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் இருவரும் கோயிலில் திருமணம் செய்து கொள்ளும் நேரத்தில் திருமணத்தை நிறுத்துகிறார் ஜெய். மீனாட்சியின் பெற்றோர் முன்னிலையில்தான் திருமணம் நடக்க வேண்டும் எனச் சொல்லி மீனாட்சி பெற்றோரைப் பார்க்கச் செல்கிறார். ஜெய்யின் நல்ல குணத்தைக் கண்ட மீனாட்சியின் அப்பா சரத் லோகிதாஸ் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க சம்மதிக்கிறார். ஆனால், தனது தம்பிகளிடம் திருமணத்தன்று ஜெய்யைக் கொலை செய்யச் சொல்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஆரம்பம் முதல் கடைசி வரை படத்தில் சஸ்பென்ஸையும் அப்படியே மெயின்டைன் செய்திருக்கிறார் சுசீந்திரன். ஜெய் யார், அவரது பின்னணியாக ஏதோ ஒன்று இருக்கும் என யூகிக்க முடியாத அளவிற்கு கதையை நகர்த்தி இடைவேளையின் போது சரியான திருப்புமுனையை வைத்திருக்கிறார். 

சிவா கதாபாத்திரத்தில் கிராமத்து  இளைஞனராக அப்படியே பொருந்திப் போகிறார் ஜெய். மீனாட்சியிடம் தான் அனாதை என்று சொல்லி தன்னை முழுதாக நம்ப வைக்கும் அப்பாவி கதாபாத்திரம். ஆனால், ஜெய்க்குள் ஒரு பின்னணிக் கதை இருக்கிறது என்பது தெரிய வரும் போது நமக்கு அதிர்ச்சிதான். 

மீனாட்சிக்கு அதிக வேலையில்லை, இருப்பினும் வரும் காட்சிகளில் முடிந்தவரையில் தன்னுடைய அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சரத் லோகிதாஸ் தான் முக்கிய வில்லன், ஆனால், அவர் இடைவேளை வரைதான் வருகிறார். அதன்பின் அவரது தம்பி முத்துக்குமார் வில்லனாக பொறுப்பேற்றுக் கொள்கிறார். பாலசரவணன் சில காட்சிகளில் மட்டும் சிரிக்க வைக்கிறார். ஜெயப்பிரகாஷ், ஹரிஷ் உத்தமன் ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள்.

இசையமைப்பாளராக ஜெய்யின் முதல் படம். ‘காடை முட்டை’ பாடலில் கவனம் ஈர்க்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவில் கிராமத்துப் பின்னணி அதன் இயல்புடன் இருக்கிறது.  

தன்னுடைய கிராமமும், கிராமத்து மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக பாடுபடும் ஒரு இளைஞனின் கதை. இன்னும் கொஞ்சம் அழுத்தமான காட்சிகள் இருந்திருந்தால் இந்த ‘வீரபாண்டியபுரம்’  வேறு மாதிரி வந்திருக்கும்.