எதற்கும் துணிந்தவன் - விமர்சனம்

10 Mar 2022

‘எதற்கும் துணிந்தவன்’ படம் மூலம் இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தியேட்டர்கள் பக்கம் வந்துள்ளார் சூர்யா.

இதற்கு முன்பு ஓடிடி தளங்களில் சூர்யா நடித்து வெளிவந்த ‘சூரரைப் போற்று, ஜெய் பீம்’ மாறுபட்ட படங்களாக இருக்க, இதில் பக்கா கமர்ஷியல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள ‘காவலன் எஸ்ஓஎஸ்’ மொபைல் ஆப்பைப் பயன்படுத்த வேண்டும் என்ற ஒரு மெசேஜ் போதும் இந்தப் படத்தைப் பாராட்ட...

கிராமத்தில் வசிக்கும் ஒரு வக்கீல் சூர்யா. அவரது கிராமத்தைச் சேர்ந்த சில பெண்கள் கொல்லப்பட அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அவர்களது எதிரி கிராமத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சரின் மகன் வினய் தான் அதற்குக் காரணம் எனத் தெரிய வருகிறது. வினய்யை சட்டத்தின் முன் நிறுத்துகிறாரா வக்கீல் சூர்யா என்பதுதான் படத்தின் கதை.

கிராமத்து இளைஞர் கதாபாத்திரத்தில் துறு துறு, பரபரவென நடித்திருக்கிறார் சூர்யா. அப்பா சத்யராஜ், அம்மா சரண்யா ஆகியோருடனான ஜாலி மோதல்கள் சுவாரசியம். பிரியங்கா மோகனுடனான காதல் காட்சிகள் அதைவிட சுவாரசியம். ஆக்ஷனுக்கு படம் மாறிய பின் அதிரடி காட்ட ஆரம்பிக்கிறார் சூர்யா.

பிரியங்கா மோகன் தனது இரண்டாவது படத்திலும் ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்துவிட்டார். அவரது பார்வையும், நடிப்பும் இன்னும் கண்முன்னே நிற்கிறது. 

வினய் தான் படத்தின் வில்லன். கடந்த வருடம் ‘டாக்டர்’ படத்தில் வினய் நடித்த அதே வில்லத்தனமான கதாபாத்திரம். இதுதான் படத்தின் மைனஸ் ஆகவும் இருக்கிறது. வேறு யாரையாவது நடிக்க வைத்திருக்கலாமோ என்று கேட்கத் தோன்றுகிறது.

சத்யராஜ், சரண்யா, இளவரசு, தேவதர்ஷினி மற்ற கதாபாத்திரங்களில் ரசிக்க வைக்கிறார்கள். சூரி, புகழ் ஆகியோருக்கு அதிக வேலையில்லை. 

இமான் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான், பின்னணி இசையில் பரபரப்பை கூட்டுகிறார்.

‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துடன் ஒப்பிடும் போது இந்தப் படத்தில் எமோஷனும், ஆக்ஷனும் குறைவுதான் என்றாலும் இரண்டரை மணி நேரம் படத்தை தொய்வில்லாமல் நகர்த்திவிடுகிறார் இயக்குனர் பாண்டிராஜ். சூர்யா, பிரியங்கா பேசும் சில வசனங்கள் அழுத்தமானவை, வலிமையானவை.   

Tags: Etharkkum Thunindhavan, Pandiraj, Suriya, Priyanka Arul Mohan, Vinay Rai, Soori, Rajkiran, Sathyaraj, D Imman

Share via: