தமிழில் விளையாட்டை மையப்படுத்திய படங்கள் அபூர்வமாகத்தான் வரும். சில பல இடைவெளிக்குப் பிறகு ஓடிடியில் வந்துள்ள ஒரு படம்.

சாதிக்கத் துடிப்பதற்கு எதுவும் தடையல்ல, முயற்சி போதும் என்று உணர்த்தும் ஒரு உணர்வுபூர்வமான படம். அதை பரபரப்பில்லாமல் மெதுவாக சொல்லியிருப்பதுதான் படத்தின் சுவாரசியக் குறைவு.

ஓட்டப்பந்தய வீரரான ஆதி ஒரு விபத்தில் தனது காலையும், தந்தையையும் இழக்கிறார். அப்பா வேலை செய்த விளையாட்டு ஆணையத்தில் அக்கவுண்டட் வேலையில் இருக்கும் ஆதிக்கு முடங்கிப் போய் உட்காருவது பிடிக்கவில்லை. மாநில அளவில் ஓட்டப்பந்தயத்தில் சாதனை படைத்த க்ரிஷா குரூப்பிற்கு பயிற்சி அளித்து அவரை தேசிய அளவில் சாதனை செய்ய வைக்க நினைக்கிறார். யாரும் பயிற்சி கொடுக்க முன்வராத நிலையில் அவரே பயிற்சியாளராக களத்தில் இறங்குகிறார். அவர் நினைத்தபடி சாதித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

படத்தின் திரைக்கதை மெதுவாக நகர்ந்தாலும் படத்தில் நடித்திருப்பவர்கள் யதார்த்தமாய் நடித்திருப்பது படத்தை ரசிக்க வைக்கிறது. வாழ்க்கையில் ஓடி சாதிக்க வேண்டும் என நினைக்கும் ஆதி காலை இழந்த பின் படும் அவஸ்தைகள் கலங்க வைக்கிறது. பயிற்சியாளராக மாறிய பின் அவருக்கு வரும் தன்னம்பிக்கை படம் பார்க்கும் நமக்கும் உற்சாகத்தைக் கொடுக்கிறது.

கிராமத்திலிருந்து வந்து சாதிக்கத் துடிக்கும் இளம் பெண்ணாக க்ரிஷா குரூப்பும் யதார்த்தமாக நடித்திருக்கிறார். ஆதிக்கு உதவி செய்யும் முனிஷ்காந்த் கதாபாத்திரமும் ரசிக்க வைக்கிறது. நாசரின் வில்லத்தனம் வழக்கமான ஒரு கதாபாத்திரம். ஆதியின் மனைவியாக வரும் ஆகான்ஷா சிங்கிற்கு அதிகவேலையில்லை. 

இளையராஜாவின் பின்னணி இசை பல இடங்களில் காட்சிகளுடன் உருக வைக்கிறது. மேக்கிங்கில் இன்னும் பிரம்மாண்டத்தைக் காட்டியிருக்கலாம்.

ஒரு விளையாட்டுப் படத்தில் என்னவெல்லாம் நடக்குமோ அது அனைத்தையும் முன்கூட்டியே நாம் யூகிக்கும்படி திரைக்கதை அமைத்திருப்பதுதான் விறுவிறுப்பைக் குறைத்துள்ளது.