தக் லைப் – விமர்னம்
05 Jun 2025
மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணி 37 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் படம், சிலம்பரசன், த்ரிஷா, நாசர், அசோக் செல்வன், ஐஸ்வர்ய லெட்சுமி, ஜோஜு ஜார்ஜ் என பெரிய நட்சத்திரக் கூட்டம் வேறு. வெளியீட்டிற்கு முன்பே ரசிகர்களைக் கவர்ந்த ஏஆர் ரகுமான் இசை என படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.
டெல்லியில் டான் ஆக இருக்கும் அப்பாவின் இடத்தைப் பிடிக்க ஆசைப்படும் வளர்ப்பு மகனின் அரசியல் தான் படத்தின் ஒரு வரிக் கதை. அதை மணிரத்னமும், கமல்ஹாசனும் இணைந்து திரைக்கதை அமைத்து நம்மை பழைய டெல்லி, கோவா, காத்மாண்டு, காயல்பட்டணம் என எங்கெங்கோ கொண்டு செல்கிறார்கள்.
டெல்லியை ஆட்டிப் படைக்கும் தமிழ் டான் கமல்ஹாசன். ஒரு என்கவுண்டர் சமயத்தில் தப்பிப்பதற்காக பேப்பர் போட வந்த ஒருவரைக் கொலை செய்கிறார் கமல்ஹாசன். அங்கிருந்து தப்பிக்கும் போது, அந்த பேப்பர்காரரின் சிறு வயது மகனை தன்னுடன் அழைத்துச் செல்கிறார். அவரே வளர்த்து தன் வாரிசாக ஆளாக்குகிறார். அந்த சிறுவன்தான் சிலம்பரசன். ஒரு கட்டத்தில் கமல்ஹாசனின் அண்ணன் நாசர், அவருடன் இருக்கும் சிலர் சிலம்பரசனை ‘ப்ரைன் வாஷ்’ செய்து, கமல்ஹாசனை நோபாளத்திற்கு அழைத்துச் சென்று கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். உயிர் பிழைக்கும் கமல்ஹாசன் இரண்டு வருடங்களுக்குப் பிறகு திரும்பி வருகிறார். தன்னைக் கொல்ல நினைத்தவர்களை அவர் என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
‘நாயகன்’ இரண்டாம் பாகத்தை அந்தப் படம் வெளிவந்த சில வருடங்களிலேயே மணிரத்னம், கமல்ஹாசன் எடுக்க ஆசைப்பட்டிருக்கிறார்கள் என்பது இந்தப் படத்தைப் பார்க்கும் போது புரிகிறது. அதை இத்தனை வருடங்களுக்குப் பிறகு சற்றே மாற்றி எடுத்திருக்கிறார்கள். அப்பா, மகன், கொலை முயற்சி, பழி வாங்கல் எனத் தெரிந்த ஒரு பார்முலாவில் படம் நகர்ந்தாலும் மணிரத்னம் படம், கமல்ஹாசன் படம், சிலம்பரசன் படம், ரகுமான் படம் என பலரும் அவரவர் திறமையை அழுத்தமாய் பதிய வைத்திருப்பதால் நம்மை ரசிக்க வைக்கிறது.
ரங்கராய சக்திவேல் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன். அவருடைய நடிப்பைப் பற்றி என்ன சொல்வது, இத்தனை வருட அனுபவமும், இளம் நடிகர்களுடன் நடிக்கும் போதும் தன்னுடைய நடிப்பும் தனித்துத் தெரிய வேண்டும் என்ற ஆர்வமும் காட்சிக்குக் காட்சி அற்புதமாய் வெளிப்பட்டுள்ளது. மனைவி மீது காதல், ஆசை நாயகி மீது கள்ளக் காதல், மகள் மீதும், வளர்ப்பு மகன் மீதும், அண்ணன் மீதும் காட்டும் பாசம், எதிரியைத் துவம்சம் செய்யும் வீரம், வளர்த்தவர்களே மார்பில் பாயும் துரோகம் என இப்போது மட்டுமல்ல எப்போதும் பேசப்படும் நடிப்பு.
வளர்ப்பு மகனாக சிலம்பரசன். வழக்கமான அலட்டல், ஆர்பாட்டம் காட்டாமல் வேறு ஒரு சிம்புவாக படம் முழுவதும் தெரிகிறார். தனது அப்பாவை, வளர்த்த அப்பாதான் கொன்றார் என வளர்த்தவரையே எதிர்த்து நிற்கிறார். இவருக்கும் த்ரிஷாவுக்குமான காதல் மட்டும் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறது.
மணிரத்னம் தவிர வேறு யார் கேட்டிருந்தாலும் இந்திராணி கதாபாத்திரத்தில் நடிக்க த்ரிஷா நிச்சயம் சம்மதித்திருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. அதிகமான காட்சிகள் இல்லை என்றாலும் வரும் சில காட்சிகளில் அவர் மீது ஒரு பரிதாபம் ஏற்படும் அளவில் நடித்துள்ளார்.
டெல்லி என்றாலே துரோகம்தான், முகலாயர் காலத்திலிருந்து என்று வரும் வசனத்திற்கேற்ப சொந்த அண்ணன், துரோகம் செய்யும் அண்ணன் ஆக நாசர். கமல் கூட்டாளிகளாக துரோகம் செய்யும் ஜோஜு ஜார்ஜ், பக்ஸ், அர்ஜுன் சிதம்பரம்.
கமல்ஹாசன் மனைவியாக சில காட்சிகளில் நடித்திருந்தாலும் அபிராமியின் நடிப்பு அம்சம். த்ரிஷா கூடவே இருக்கும் வடிவுக்கரசி, கமல் மகளாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, டிரைவர் வையாபுரி, கமல் எதிரியாக மகேஷ் மஞ்ச்ரேக்கர் என சில காட்சிகளில் வருபவர்களும் நாங்களும் இருக்கிறோம் என பதிய வைத்துள்ளார்கள்.
ஏஆர் ரகுமான் இசையில் ஒவ்வொரு பாடலுமே சூழ்நிலைக்குத் தகுந்தவாறு வந்து செல்கிறது. ‘முத்த மழை’ இல்லாமல் போனது பெரும் ஏமாற்றம். பின்னணி இசையும் உணர்வுகளின் ஊடாகப் பயணிக்கிறது. ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவில் குளோசப் காட்சிகள் அதிகமாக இடம் பெற்றுள்ளது. டெல்லி ரயில் நிலைய சண்டைக் காட்சியில் அன்பறிவு பயிற்சிகள் அசத்தல்.
மணிரத்னம், கமல்ஹாசன் இணைந்த ஒரே படமான ‘நாயகன்’ இத்தனை காலம் கடந்தும் பேசப்படும் படமாக இருக்கிறது. அது போல இந்த ‘தக் லைப்’ படமும் காலம் கடந்தும் பேசப்படும் ஒரு படமாக இருக்கும்.
தக் லைப் – நாயகன் லைப்.
Tags: thug life, kamalhaasan, maniratnam, trisha, silambarasan, ar rahman