ஸ்வீட்டி நாட்டி கிரேசி - விமர்சனம்

13 Feb 2026

‘A'  சான்றிதழ் பெற்ற ஒரு திரைப்படம்...

 

இன்றைய இளைஞர்களின் ரசனைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட அடல்ட் காமெடி படங்களில் 'ஸ்வீட்டி நாட்டி கிரேஸி' ஒரு தனித்துவமான முயற்சி. ராஜசேகர்.ஜி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்தத் திரைப்படம், காதல், காமம், குடும்ப உறவுகள் எனும் தலைப்புகளை சுற்றி சில்மிஷமான கதையை நகைச்சுவையுடன் பின்னியிருக்கிறது. த்ரிகுண், ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா, ராதா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படம், ஆபாசத்தின் எல்லையைத் தொட்டாலும் காமெடி போர்வையில் இளசுகளை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் வெற்றி, பார்வையாளர்களின் தைரியத்தையும் சோதிக்கும் ஒரு அனுபவமாக இருக்கிறது.

நாயகன் த்ரிகுணும், நாயகி ஸ்ரீ ஜீத்தா கோஷும் ஒரே கல்லூரியில் பயில்கின்றனர். இருவருக்கும் இடையே உருவாகும் நட்பு, விரைவில் காதலாக உருமாறுகிறது. இந்தக் காதல் உறவு உடலரீதியான நெருக்கத்தில் உச்சம் அடையும் போது, நாயகன் தான் ஏற்கனவே தன் அக்கா வயதுடைய ஒரு பெண்ணுடனும், ஆண்டி போன்ற ஒரு பெண்ணுடனும் உறவு கொண்டிருந்த ரகசியத்தை தன் காதலியிடம் வெளிப்படுத்துகிறார். இதனால் ஆத்திரமடையும் காதலி, இவனை இப்படியே விட்டால் அவன் தன் காம விளையாட்டுகளைத் தொடர்ந்து கொண்டே இருப்பான் என நினைத்து, அவனைத் திருமணம் செய்து கொண்டு கணவனாக்குகிறார்.

தன் அன்புக் கணவருடன் கோத்தகிரியில் உள்ள தன் இல்லத்திற்கு நாயகி செல்கிறார். குடும்பம் இல்லாத தனக்கு, மனைவி வழியாகக் கிடைக்கும் புதிய குடும்பத்தை எதிர்பார்த்து உற்சாகமாகச் செல்லும் த்ரிகுண், அங்கு தன் மனைவியின் அக்கா இனியாவையும், அம்மா ராதாவையும் கண்டு பெரும் அதிர்ச்சியில் உறைகிறார். அவரது இந்த அதிர்ச்சிக்கான காரணம் என்ன? அந்த அதிர்ச்சியிலிருந்து அவர் தப்பித்தாரா? அல்லது அவர்கள் மூலம் மீண்டும் மீண்டும் அதிர்ச்சிகளைச் சந்தித்தாரா? என்பதை அடல்ட் நகைச்சுவை வடிவில் சித்தரிப்பதே 'ஸ்வீட்டி நாட்டி கிரேஸி'.

இத்தகைய ஒரு கதையில் நாயகனாகப் பொறுப்பேற்றிருக்கும் த்ரிகுணின் துணிச்சலை நிச்சயம் புகழ்ந்தே ஆக வேண்டும். அடல்ட் காமெடி திரைப்படத்தில் நடிப்பது பெரிய விஷயமல்ல, ஆனால் இவ்வளவு சில்மிஷமான யோசனையுடன் உருவாக்கப்பட்ட கதையில் பயணிப்பது மட்டுமல்லாமல், அது நாயகனை மூச்சுத்திணறச் செய்திருக்கும் என்பது உண்மை.

நாயகியாகத் தோன்றியிருக்கும் ஸ்ரீ ஜீத்தா கோஷ், தோழிகளின் ஆலோசனையால் காதலனை படுக்கையில் இழுத்துச் செல்வதும், அவன் செய்த பிழையை மன்னித்து மறுபடியும் அவனுடன் இணைவதும் என, இப்படியான ஒரு பெண் காதலியாகவும் மனைவியாகவும் அமைவது இறைவனின் அருள் என்று பார்வையாளர்களை ஏங்க வைக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பின் திரையில் தோன்றியிருக்கும் இனியா, தன் முகத்தை மட்டுமின்றி உடல் அழகுகளையும் வெளிப்படுத்தி ரசிகர்களை மயக்குகிறார். உதடுகளை இணைத்து முத்தமிட்டு, "பாடம் கற்றுக்கொடு" என நாயகனிடம் கோரும் டியூஷன் ஆசிரியராக நடித்து, கவர்ச்சியின் உச்சமாகத் திகழ்கிறார்.

'சுந்தரா டிராவல்ஸ்' படத்தில் இளமையில் இருந்தபோது கூட ராதாவை இவ்வளவு ரசித்திருக்க மாட்டார்கள் எனத் தோன்றுகிறது. இந்தப் படத்தில் ஆண்டி வேடத்தில் வந்து அவர் காட்டியிருக்கும் அதிரடி நடிப்பு அசத்தல்.

தம்பி ராமையா, சத்யன், ஆலி, ரவி மரியா, ஜாவா சுந்தரேசன், மதன் பாபு, விஜய் டிவி தனசேகர், வினோத் போன்ற ஏராளமான நகைச்சுவை நட்சத்திரங்கள் படத்தில் இருந்தாலும், காம அம்சங்கள் அதிகமிருப்பதால் அவர்களின் நகைச்சுவை சற்று மங்கலாகவே தெரிகிறது.

சி.விஜயின் ஒளிப்பதிவில் மூன்று நாயகிகளும் பிரகாசமாகத் தோன்றுகின்றனர். அவர்களின் ஒளிர்வு காட்சிகளுக்கும் பரவியிருப்பதால், படம் முழுவதும் ஒரே வசீகரமான தோற்றத்தில் இருக்கிறது.

அருணகிரியின் இசையில் பாடல்கள் அனைத்தும் வணிக ரீதியான அம்சங்களுடன் நடனமாட வைக்கின்றன. பின்னணி இசை காம காட்சிகளை உயர்த்தி காட்டியிருக்கிறது.

படத்தொகுப்பாளர் கே.குமார் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி. பார்வையாளர்களுக்கே இவ்வளவு காட்டியிருக்கிறார் என்றால், அவர் எத்தனை பார்த்திருப்பார்...!

எழுத்தும் இயக்கமும் செய்திருக்கும் ராஜசேகர்.ஜி, அடல்ட் காமெடி என்ற பெயரில் அருவருப்பான எண்ணங்களை ஆபாசமாக விவரித்தாலும், அதை மறைமுகமாகவும் நகைச்சுவை பின்னணியிலும் சொல்லி இளைஞர்களை மகிழ்வித்திருக்கிறார்.

யார் என்று அறியாமல் நாயகன் செய்ததை ஏற்றுக்கொண்டாலும், உண்மை தெரிந்தபின் விலக முயலும் நாயகனுடன் தொடர்ந்து இணைந்திருக்க விரும்பும் பெண் கதாபாத்திரங்கள், காமத்தைத் தாண்டிய விபரீதத்தை வெளிப்படுத்துவதாகவும், உறவுகளை இழிவுபடுத்துவதாகவும் இருந்தாலும், அதற்கு நகைச்சுவை என்ற உறையைப் போர்த்தி, மேலோட்டமாகச் சொல்லி சமாளித்திருக்கும் அணுகுமுறை, படத்தை வெறுப்பின்றி பார்க்கச் செய்கிறது.

படத்தில் வரும் இரட்டை அர்த்த உரையாடல்களும், சில நேரடி வசனங்களும் இளைஞர்களை சிரிக்க வைத்து உற்சாகப்படுத்துகின்றன. படத்தின் மையம் அதிர்ச்சியூட்டும் வகையில் இருந்தாலும், அதை வணிக ரீதியில் இளசுகள் கொண்டாடும் அளவுக்கு வடிவமைத்திருப்பதோடு, கவர்ச்சியும் ஆபாசமும் இடையேயான வரம்பைத் துல்லியமாகக் கண்டறிந்து காட்சிகளை உருவாக்கியிருக்கும் இயக்குநர் ராஜசேகர்.ஜி, படம் தொடங்கியது முதல் இறுதி வரை திரையரங்கில் சிரிப்பு மற்றும் கைதட்டல் ஒலிகளை எழுப்பியிருக்கிறார்.

Tags: sweety naughty crazy

Share via: