சரத்குமார் நடிக்கும் ‘ஆழி’ , இசை வெளியீட்டு விழா

09 Feb 2026

மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் இயக்கத்தில், ஜாஸி கிப்ட் இசையமைப்பில்  சரத்குமார், இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ், வையாபுரி, தாமரைச்செல்வி, ஸ்ரீ ஜித் ரவி உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் ‘ஆழி’.

888 புரொடக்ஷன்ஸ் மற்றும் செல்லுலாய்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சஜித் கிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். இத்திரைப்படத்தை தமிழகம் முழுவதும் உத்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்தப் படம் பிப்ரவரி 27ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவரான ரவி கொட்டரக்கரா, இயக்குநர் உதய சங்கரன், விநியோகஸ்தர்கள் அப்பாஸ் ஏ. ஜெ, ஹரி உத்ரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ரவி கொட்டரக்கரா படத்தின் இசையை வெளியிட, வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் விநியோகஸ்தர் ஹரி உத்ரா பேசுகையில்,

''இன்றைய தேதியில் நல்ல படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு பல சவால்கள் இருக்கின்றன. நல்ல கன்டென்ட் கிடைப்பதும் பெரிய விஷயமாக இருக்கிறது. அந்த வகையில் ஆழி மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என நம்புகிறேன். நான் சின்ன வயதில் இருந்தே சரத்குமாரின் ரசிகர். அவருடைய படங்களை பார்த்து வளர்ந்திருக்கிறேன். அவர் நடித்த இந்த திரைப்படத்தை விநியோகம் செய்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன். குறைந்த பட்ஜெட்டிலான படங்கள் வெளியாவதிலும் அவற்றை விற்பனை செய்வதிலும் பெரும் போராட்டம் இருக்கிறது. தமிழ் திரையுலக நலனுக்காக போராடும் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து வியாபார வழிமுறையை முன்வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.

நடிகை தாமரை செல்வி பேசுகையில்,

''இது எனக்கு முதல் மேடை. இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. நான் மேடை நாடகத்தில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது சரத்குமாரை சந்தித்தேன். அதன் பிறகு இப்போது தான் அவரை சந்திக்கிறேன். அவருடைய படத்தில் நடித்திருக்கிறேன் என்பது சந்தோஷமாக இருக்கிறது. என்னை படபிடிப்பு தளத்தில் மலையாளத்தில் பேச வைத்த இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி," என்றார்.

நடிகர் வையாபுரி பேசுகையில்,

''சரத்குமாருடன் 2001ம் ஆண்டிற்கு முன்னர் நடித்துள்ளேன். அதன் பிறகு இப்போது தான் அவருடன் மீண்டும் இணைந்து நடித்திருக்கிறேன். இது மகிழ்ச்சியாக இருக்கிறது.‌ இந்த படத்தில் அப்பா வேடத்தில் நடித்திருக்கிறேன். இந்த வேடத்தில் நடிப்பதற்காக இயக்குநர் என்னிடம் இரண்டு நாள் கால்ஷீட் கேட்டார். ஆனால் ஒரே நாளில் அனைத்து படப்பிடிப்பையும் நிறைவு செய்துவிட்டார். மலையாள இயக்குநர்கள் தமிழில் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று என ஆசைப்படுகிறார்கள். அதற்காக இயக்குநர் உருவாக்கிய கதைதான் 'ஆழி' . இப்படம் பிப்ரவரி 27ம் தேதி அன்று வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.

நடிகை தேவிகா சதீஷ் பேசுகையில்,

''தமிழில் நான் நடிக்கும் மூன்றாவது படம் 'ஆழி'. நான் இந்தப் படத்தில் சரத்குமாரின் மகளாக நடித்திருக்கிறேன். நான் சின்ன வயதில் இருந்தே சரத் குமார் சார் நடித்த படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். படத்தில் மட்டுமல்லாமல் படப்பிடிப்பு தளத்திலும் ஒரு அப்பாவை போல் அறிவுரை கூறி அன்பாக அக்கறையுடன் நடத்தினார். என்னுடைய ஆசிரியர்களுக்கும் இயக்குநர் மாதவ் ரமா தாஸ் இயக்கிய படங்கள் பிடிக்கும். இந்தப் படத்தில் ஆஸ்கார் விருதை வென்ற ரசூல் பூக்குட்டி சவுண்ட் டிசைனிங் செய்திருக்கிறார். அதனால் படத்தின் தரம் அனைவருக்கும் பிடிக்கும்.‌‌ படத்தின் பணியாற்றிய சக நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர் அனைவருக்கும் நன்றி,'' என்றார்.

நடிகர் இந்திரஜித் ஜெகன் பேசுகையில்,

'' இப்படத்தில் வாய்ப்பளித்ததற்காக இயக்குநருக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் சரத்குமார் உடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. திரைக்கு முன்னாலும்... திரைக்குப் பின்னாலும்... அவர் என்னுடைய மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். குறிப்பாக படப்பிடிப்பு தளத்தில் நேரம் தவறாமையை கடைப்பிடிப்பதில் அவருடைய அர்ப்பணிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. பின்னணி இசையில் ரசூல் பூக்குட்டியின் பங்களிப்பு பிரம்மாண்டமானதாக இருக்கும். ஆழி படக்குழுவில் நானும் இடம் பிடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது," என்றார்.

தயாரிப்பாளர் ரவி கொட்டாரக்கரா பேசுகையில்,

''படத்தின் டைட்டில் ஆழி. ஆழி என்றால் கடல். உங்களில் யாருக்காவது கடலின் ஆழம் என்ன என தெரியுமா? தெரியாது. அதேபோலத்தான் என்னுடைய நண்பர் சரத்குமாரின் நடிப்பின் ஆழம். இன்னும் அவர் புதிதாய் நடித்துக் கொண்டே இருப்பார். அவர் முதலில் ஏற்று நடித்த கேரக்டர்கள் வேறு. வில்லன், ஹீரோ, லவ்வர் பாய், ஃபாதர்- ஃபேமிலி மேன் டு எவரிதிங். ஆனால் இதில் அவர் ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறார். இன்றைய இளம் கலைஞர்கள் அவரிடம் இருந்து ஏராளமான விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அவர் கதையைக் கேட்கும் போது அவரது கதாபாத்திரத்தை நன்றாக உள்வாங்கிக் கொள்வார். இதனை இன்றைய 85 சதவீத நடிகர்கள் செய்வதில்லை. அவர் இன்று வரை படித்துக் கொண்டிருக்கிறார் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பற்றியும் சிந்திக்கிறார். அண்மை காலமாக அவர் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படத்திலும் அவர் ஏற்று நடித்திருக்கும் கேரக்டர் வித்தியாசமானதாக இருக்கும். இதே போல் தான் இந்த படத்தில் ஒரு வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

கடல் அலையின் ஓசையை கேட்டிருப்பீர்கள். கடல் - ஆழியின் ஒலியை கேட்டிருக்கிறீர்களா?  அதனை இந்த படத்தில் ரசூல் பூக்குட்டி கேட்க வைத்திருக்கிறார். இந்தப் படத்தில் இயக்குநர் மாதவ் ரமா தாசன் வித்தியாசமான திரைக்கதையில் கதையை சொல்லி இருக்கிறார். தயாரிப்பாளர் சஜித் கிருஷ்ணன் எனது தயாரிப்பில் வெளியான மலையாள படத்தை 26 ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் வெளியிட்ட விநியோகஸ்தர். சிறந்த அனுபவசாலி. அவர் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். அவருக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜூன் மாதத்திற்கு பிறகு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் கட்டிடம் திறக்கப்பட்டு செயல்பட தொடங்கும். அனைவரும் வருகை தாருங்கள். சினிமாவை மேலும் வளப்படுத்துவோம்," என்றார்.

இயக்குநர் மாதவ் ரமா தாசன் பேசுகையில்,

"நான் தமிழில் இயக்கியிருக்கும் முதல் படம் இது. இதற்கு முன் மலையாளத்தில் 'மேல் விலாசம்', 'அப்போதகேரி ', 'இளையராஜா ' என மூன்று திரைப்படங்களை இயக்கியிருக்கிறேன். இதில் 'இளையராஜா' படத்தை தமிழில் உருவாக்க எண்ணினேன். தமிழில் படத்தை இயக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் விருப்பம்.  அதற்கான நேரம் இப்போது அமைந்து ஆழி  உருவாகியுள்ளது.  70 சதவீதம் கடலில் நடைபெறும் இந்த கதைக்கு சவுண்ட் அவசியம். இதற்காக சர்வதேச அளவில் அனுபவம் உள்ள ரசூல் பூக்குட்டியிடம் கேட்டோம்.  அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு தற்போது வரை படத்தின் தரமான ஒலி அமைப்பிற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்தப் படத்தில் நாய் ஒன்றும் நடித்திருக்கிறது. அதனுடைய ஒலிக்காக கஷ்டப்பட்டு உழைத்தார். நாயின் குரைப்பு ஒலியை துல்லியமாக பதிவு செய்யும்போது அவருடைய மைக் ஒன்றும் சேதமடைந்தது. அந்த அளவிற்கு நேர்த்தியாக உழைத்திருக்கிறார். இந்த படத்தில் நாயின் கதாபாத்திரமும், அதனுடைய ஒலி அமைப்பும் ரசிகர்களை கவரும். இந்தப் படத்தை பார்த்த பிறகு அனைவருக்கும் கடலுக்குள் நிஜமாகவே சென்று வந்த ஒரு உணர்வு ஏற்படும்.

இந்தக் கதையை முதலில் சரத்குமாரிடம் சொன்னேன். அவர்தான் அவருடைய கதாபாத்திரத்தில் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து நடிக்க ஒப்புக்கொண்டார். அவருடைய கேரக்டரில் நிறைய வேரியேஷன்ஸ் இருக்கிறது. படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கும் தருணத்தில்  அதிகாலை 3 மணி அளவில் கூட என்னை தொடர்பு கொண்டு அவரது கதாபாத்திரம் குறித்த கேள்விகளை கேட்பார். அதற்கு நான் விளக்கம் அளிப்பேன். இந்த அளவிற்கு அந்த கதாபாத்திரத்தின் மீது ஈடுபாடு காட்டி நடித்திருக்கிறார் சரத்குமார்.‌ இப்படத்தில் அவர் நெகட்டிவ் ஷேடிலும் நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் நடித்த வையாபுரி, இந்திரஜித், தேவிகா மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் நிகில் முருகனும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்,'' என்றார்.

சவுண்ட் என்ஜீனியர் ரசூல் பூக்குட்டி பேசுகையில்,

''சரத்குமார் நடித்த பல படங்களை என்னுடைய கல்லூரி காலங்களில் பார்த்து ரசித்து கொண்டாடி இருக்கிறேன்.  அவரை மீண்டும் இந்த படத்திற்காக திரையில் பார்த்தபோது அவர் அதே இளமையுடன் இருப்பதை பார்த்து வியந்து போனேன். இவர் எப்படி இளமைக் குன்றாமல், வயதே ஆகாமல் தோன்றுகிறார் என ஆச்சரியப்படுகிறேன். நடிகர், பாசமுள்ள தந்தை, நிறுவனத்தின் தலைவர் என அவர் எப்போதும் இயல்பாக சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டே இருக்கிறார். அவர் எதையும் 'டேக் இட் ஈஸி'யாக எடுத்துக் கொள்கிறார். இதைத்தான் அபிஷேக் பச்சன், ஷாருக்கான், கமல்ஹாசன் ஆகியோரும் பின்பற்றுகிறார்கள்.

சரத்குமாரை பற்றி இந்திரஜித் குறிப்பிட்டது போல் அவரிடம் இருக்கும் ஒழுக்கத்தை இன்றைய இளம் தலைமுறையை சேர்ந்த கலைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். சரியான உணவு, உடற்பயிற்சி, அர்ப்பணிப்பு, உழைப்பு, மரியாதை, நேரம் தவறாமை, கேமரா முன்னால் நடிப்பு என ஒரு தவத்தை போல் தன்னுடைய பணியை செய்கிறார். அவர் இந்தப் படத்தில் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் மூலம் கதையை வழி நடத்துகிறார்.

நான் இதுவரை வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு மனிதர்களிடத்தில் பழகி பணியாற்றி இருக்கிறேன். இந்தி சினிமாவிலும் பணியாற்றி இருக்கிறேன், தென்னிந்திய சினிமாவிலும் பணியாற்றியிருக்கிறேன். இரண்டிலும் உள்ள முக்கியமான வித்தியாசம் என்னவென்றால் தென்னிந்திய சினிமாவில் ஒவ்வொரு காட்சிக்கும் அக்கறை எடுத்துக் கொள்வார்கள். சினிமாவைப் பற்றி அக்கறையுடன் இருப்பார்கள். நான் இந்தப் படத்தை மூன்று முறை மிக்ஸ் செய்திருக்கிறேன். இது போன்ற துணிச்சலான அணுகுமுறை தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் , இயக்குதர்களுக்கும் தான் இருக்கிறது. இங்குள்ள தயாரிப்பாளர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் இயக்குநரை கொண்டாடுகிறார்கள். இயக்குநருக்கு ஆதரவு தருகிறார்கள்.

அத்துடன் இவர்கள்தான் மெயின் ஸ்ட்ரீம் ரசிகர்களின் மனநிலையை கணிக்கிறார்கள். தொழில்நுட்பம், கலை அழகு, கதை, கதாசிரியர், இயக்குநர், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் மீது நம்பிக்கை கொள்கிறார்கள்.  இந்த காரணத்தினால் தான் தமிழ் சினிமா, மலையாள சினிமா, மராத்தி சினிமா,.வங்காள சினிமா ஆகியவை வளர்ச்சி அடைந்து வருகின்றன.  இதற்கு நானே மிகச் சிறந்த உதாரணம்.

இந்த படத்தில் நடித்திருக்கும் நடிகை தேவிகாவின் புன்னகை நன்றாக இருக்கிறது. படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்,'' என்றார்.

நடிகர் சரத்குமார் பேசுகையில்,

''இந்தப் படத்தின் இயக்குநர் மாதவ் ரமா தாசன் கதை சொல்ல வந்தார். அவர் வருவதற்கு முன் அவர் இயக்கத்தில் வெளியான 'மேல் விலாசம்' படத்தை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அவர் கதை முழுவதும் சொன்னார். அது வித்தியாசமான கதை . பெரும்பாலும் மீன்பிடி படகு ஒன்றில் நடைபெறும் கதை. பெரும்பாலும் கடல் தான் திரைக்கதையில் இருக்கிறது. இதை எப்படி நீங்கள் திரையில் காட்சிப்படுத்துவீர்கள் என கேட்டேன். அது குறித்து நாங்கள் முழுமையாக திட்டமிட்டிருக்கிறோம் என சொன்னவுடன் அதிலேயே அவருடைய அர்ப்பணிப்பு எனக்குத் தெரிந்தது. ஒரு மீன்பிடி கப்பல் அளவிற்கான கப்பல் ஒன்றை அரங்கத்திற்குள் உருவாக்கி, அதனை இயக்குவதற்காக ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தினார். அதனால் இந்த படத்தை நான் ஒரு வித்தியாசமான படமாக தான் பார்க்கிறேன்.

பல படங்கள் ஆடல், பாடல், பிரம்மாண்டம் என கமர்ஷியல் அம்சங்களுடன் இருக்கும். ஆனால் இதில் ஆடல் பாடல் போன்ற பிரம்மாண்டங்கள் இல்லை. ஆனால் கதை பிரம்மாண்டமானதாக இருக்கும்.

இன்றுள்ள ரசிகர்கள் பலவிதமான படங்களை பார்த்து ரசிக்கிறார்கள். செல்போனில் வெளியாகும் ஷார்ட்ஸ், ரீல்ஸ் இதிலெல்லாம் நடிக்கிறார்கள். இதனால் நடிகர்களுக்கு ரீல்சில் நடிப்பதா, ஷார்ட்ஸில் நடிப்பதா, வெப்சீரிஸில் நடிப்பதா, டெலிவிஷனில் நடிப்பதா, பெரிய ஸ்கிரீனில் நடிப்பதா என்ற குழப்பம் இருக்கிறது. ஆனால் இந்த வகையான குழப்பம் எந்த நடிகர்களுக்கும் தேவையில்லை. ஏனெனில் எதில் நடித்தாலும் நடிப்பு நடிப்புதான். அதனால் எதில் வேண்டுமானாலும் நடிக்கலாம். ஏந்த குழப்பமும் தேவையில்லை. காலத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப நாம் மாறிக்கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால் மாற்றம் ஒன்றே மாறாதது.

மாதவ் ரமா தாஸின் வித்தியாசமான படம் என்று தான் இதை சொல்வேன். அதனால் இந்த படம் வெற்றி பெறும். இதற்கு ரசிகர்களும், ஊடகங்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.

இந்தப் படத்திற்கு என்னுடைய நண்பர் ரசூல் பூக்குட்டியின் பங்களிப்பு வலிமையானது என்றே சொல்லலாம். இது சவுண்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம். அவருடைய அர்ப்பணிப்பு உணர்விற்காக அவருக்கு மேலும் பல ஆஸ்கார் விருதுகள் கிடைக்க வேண்டும் என்ற வாழ்த்துகிறேன். இந்தப் படத்தில் பெல்ஜியம் மலினாய்ஸ் வகையை சேர்ந்த நாய் ஒன்று நடித்திருக்கிறது. நாயின் குரலை துல்லியமாக பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக இரண்டு நாள் அவரது குழுவினருடன் ரசூல் பணியாற்றினார். இந்தப் படத்தில் நாயுடனும் ஒரு சண்டைக் காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் சிறப்பானதாக இருக்கும்.

தயாரிப்பாளர் சஜித் கிருஷ்ணன், விநியோகஸ்தர் ஹரி உத்ரா, பாடலாசிரியர் நவீன், வையாபுரி, தாமரைச்செல்வி, தேவிகா சதீஷ், இந்திரஜித் ஜெகன், நடிகர் நிகில் முருகன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

இந்தப் படத்தின் கிளிம்ப்ஸை பார்க்கும் போது நான் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருப்பது தெரியும். இன்று நெகட்டிவ் கேரக்டருக்கு தான் வரவேற்பு இருக்கிறது. இன்று கதாநாயகன் என்று சொன்னால் நல்லவனாக இருந்தால் மட்டும் கதாநாயகன் ஆக முடியாது. தப்பு செய்பவர்கள் தான் கதாநாயகன்.‌ புஷ்பா 2 படத்தில் ஹீரோ செம்மரம் கடத்துகிறார். ஆனால் அவர் தானே ஹீரோ. அதனால் இன்றைக்கு காலங்கள் மாறிவிட்டன. இன்றைக்கு வித்தியாசம் தேவைப்படுகிறது. வித்தியாசத்திற்கு தேவைப்படும் நெகடிவ் ஷேடு - தவறு என்றும் உணர்த்தப்படுகிறது. அதனால் தவறாமல் டிஸ்க்ளைமரும் இடம் பிடிக்கிறது.

என்னைப் பொறுத்தவரை இந்த படம் நல்ல கதை. சிறந்த இயக்குநர். மீன்பிடி படகிற்குள் இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையே நடைபெறும் உணர்வுபூர்வமான விஷயங்கள் தான் முக்கியமானது. ரசிகர்கள் அனைவரும் இந்தப் படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பாருங்கள். வித்தியாசமான அனுபவமாக இருக்கும்,'' என்றார்.

Tags: aazhi, sarathkumar

Share via: