தயாரிப்பு - ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்
இயக்கம் - பாக்யராஜ் கண்ணன்
இசை - விவேக் மெர்வின் 
நடிப்பு - கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, கேஜிஎப் ராம்
வெளியான தேதி - 2 ஏப்ரல் 2021

ஒரு வித்தியாசமான படம் அடுத்து ஒரு கமர்ஷியல் படம் என மாறி மாறி நடித்து வரும் கார்த்தி, இந்த ‘சுல்தான்’ படத்தில் கமர்ஷியலைக் கையிலெடுத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் மார்க்கெட் வைத்திருக்கும் கார்த்தி, இந்தப் படத்தில் தெலுங்கு ரசிகர்களை கூடுதலாகத் திருப்திப்படுத்தி இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன், ரவுடிகளைக் கூட விவசாயம் செய்ய வைத்து மாற்ற முடியும் என்ற கருத்தை வலியுறுத்தி இருக்கிறார். வேறு எந்த தொழிலையும் விட அடுத்தவருக்கு பசியாற்றும் விவசாயத் தொழிலின் உயர்வை தரமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் கண்ணன்.

சென்னையின் பெரிய தாதாவான நெப்போலியன் சேலம் பக்கத்து கிராமத்து மக்களை ஒரு ரவுடியிடமிருந்து காப்பாற்ற சத்தியம் செய்கிறார். அந்த சத்தியத்தை நிறைவேற்றுவதற்கு முன்பே கொல்லப்படுகிறார். அப்பாவின் சத்தியத்தைக் காப்பாற்ற மகன் அந்த கிராமத்திற்குச் செல்கிறார். கூடவே, அப்பாவிடம் ஒரே குடும்பமாய் இருந்த 100 ரவுடிகளையும் அழைத்துச் செல்கிறார். அப்பாவின் சத்தியத்தை அவர் காப்பாற்றினாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இந்தக் கதைக்குத் தேவையான திருப்புமுனை, நெகிழ்ச்சியான காட்சிகள் என என்னென்ன தேவையோ அதை அனைத்தையும் சரியாகச் சேர்த்திருக்கிறார் இயக்குனர். சில காட்சிகள் மட்டும் சில படங்களை ஞாபகப்படுத்துவதைத் தவிர்த்திருக்கலாம்.

‘கைதி’ போன்ற வித்தியாசமான படங்களிலேயே சர்வ சாதாரணமாய் நடிக்கும் கார்த்தி, இந்த ‘சுல்தான்’ கதாபாத்திரத்தில் சுலபமாய் நடித்துவிட மாட்டாரா ?. ஆக்ஷன், காதல், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கதாபாத்திரம். அப்பாவை இழந்ததைப் போல தன்னை வளர்த்த அந்த 100 ரவுடிகளில் ஒருவரைக் கூட இழக்கக் கூடாது என்பதில் அவரது கதாபாத்திரம் உயர்ந்து நிற்கிறது.

ராஷ்மிகா மந்தனா தமிழ் சினிமாவிற்கு வந்துள்ள அழகான அறிமுகம். கிராமத்துக் கதாபாத்திரம் என்பதால் கொஞ்சம் கிளாமர் குறைவாக காட்டிவிட்டார்களோ என எண்ணத் தோன்றுகிறது. இருந்தாலும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் எல்லை மீறாமல் நடித்திருக்கிறார் ராஷ்மிகா.

கேஜிஎப் ராம் ஒரு வில்லன், நவாப் ஷா மற்றொரு வில்லன். வழக்கமான வில்லன்களைப் போல நாயகனை எதிர்க்க முடியாமல் வீழ்ந்து போகிறார்கள். நகைச்சுவைக்கு யோகி பாபு, ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார், இவரது கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தி இருக்கலாம். கார்த்தியின் வளர்ப்பு அப்பாவாக லால், பெற்றோர்களாக நெப்போலியன், அபிராமி மனதில் இடம் பிடிக்கிறார்கள்.

யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு சரியான பக்கபலம். பல ஹீரோயிசக் காட்சிகளை அவரது பின்னணி இசை உயர்த்தி நிறுத்துகிறது. விவேக் மெர்வின் இசையில் பாடல்கள் கமர்ஷியர் பால்முலாவில் உள்ளன. சண்டைக் காட்சிகள் அசத்தல், படத்திற்கு ஹைலைட்டே அவைதான். 100 ரவுடிகள் வேறு அடிக்கடி மிரட்டுகிறார்கள்.  

‘கைதி’ போன்ற படமாக இருக்கும் என எதிர்பார்க்காமல் போனால் ‘சுல்தான்’ஐ ரசிக்கலாம்.