ஒரு டெடி பொம்மையை வைத்து குழந்தைகளையும் கவரும் விதத்தில் ஒரு பரபரப்பான த்ரில்லர் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன்.

அதிபுத்திசாலியானவர் ஆர்யா. எதையும் குறுகிய காலத்தில் கற்றுக் கொள்ளும் திறமை படைத்தவர். அவரைத் தேடி பேசும் சக்தி கொண்ட ஒரு டெடி பொம்மை வந்து உதவி கேட்கிறது. உடல் உறுப்புகளுக்காக சிலரால் கடத்தப்பட்டு மருத்துவ ரீதியாக கோமாவில் தள்ளப்பட்ட சாயிஷாவின் ஆன்மாதான் அந்த டெடி பொம்மைக்குள் புகுந்திருக்கிறது. டெடியின் கதையைக் கேட்ட ஆர்யா, அதற்கு உதவி செய்ய முன் வருகிறார். உலகத்தில் எங்கு இருக்கிறார் என்றே தெரியாத சாயிஷாவின் உடலைத் தேடிப் புறப்படுகிறார் ஆர்யா. அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

தமிழ் சினிமாவில் இதுவரை காட்டப்படாத  வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஆர்யா. மிகவும் திறமைசாலி, அதிபுத்திசாலி, மற்றவர்கள் வருடக்கணக்கில் படிப்பதை இவர் சில மாதங்களிலேயே படித்து முடித்துவிடுவார். அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நம்பகத்தன்மை முக்கியம் வர வேண்டும். அதை அப்படியே தனது கதாபாத்திரத்தில் பிரபதிலித்திருக்கிறார் ஆர்யா. படத்தின் ஆரம்பத்திலும், கடைசியிலும் மட்டும்தான் சாயிஷா வருகிறார். டெடி பொம்மை வரும் காட்சிகள் குழந்தைகளை நன்றாகவே ரசிக்க வைக்கும். இயக்குனர் மகிழ்திருமேனி வில்லனாக நடித்திருக்கிறார். குறைவான காட்சிகளாக இருந்தாலும் அவரது குரலிலேயே மிரட்டல் வெளிப்பட்டு விடுகிறது. சதீஷ், கருணாகரன் இருவரும் ஆர்யாவின் நண்பர்கள்.

இமான் இசையில் பின்னணி இசையும், சித் ஸ்ரீராம் பாடிய பாடலும் இனிமையாக உள்ளன. படத்தின் ஒளிப்பதிவு ஏன் மங்கலாக இருந்தது என்பதற்குத்தான் விடை இல்லை. வேண்டுமென்றே அப்படி எடுத்தார்களா என்பது ஆச்சரியம்தான்.

சில காட்சிகளில் பொறுமையைச் சோதித்தாலும் ஓடிடி தளத்தில் வீட்டில் பார்க்க உகந்தபடமாக உள்ளது