தமிழ் சினிமாவில் அபூர்வமாய் வியக்க வைக்கும் சில படங்கள் வருவதுண்டு. அப்படி ஒரு படமாய் வந்துள்ள படம்தான் இந்த ‘மண்டேலா’.

ஒரு படத்தில் சமூக அக்கறையுள்ள விஷயங்களை எவ்வளவு சொல்ல முடியுமோ அவ்வளவையும் சேர்த்து சொல்லியிருக்கிறார் படத்தின் இயக்குனர் மடோன் அஷ்வின்.

டிவியில் நேரடியாக வெளியாகி பின்னர் ஓடிடியில் வெளிவந்துளள இப்படத்திற்கான விமர்சனத்தை ஒவ்வொரு காட்சியாக நிறுத்தி நிறுத்தி பொறுமையாகப் பார்த்து காட்சிக்குக் காட்சி சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை எழுத பக்கங்கள் போதாது. அந்த அளவிற்கு பல விஷயங்களை படம் முழுவதும் சேர்த்திருக்கிறார் இயக்குனர்.

அஷ்வின் போன்ற இயக்குனர்கள் தமிழ் சினிமாவிற்கு வருவது தமிழ் சினிமாவை இன்னும் பெருமைப்படுத்தும் விதமாக எதிர்காலத்தில் அமையும் என்ற நம்பிக்கை வருகிறது.

தென்மாவட்டத்தில் இருக்கும் சூரங்குடி என்ற ஊராட்சியில் வடக்கூர், தெக்கூர் என இரண்டு ஊர் மக்களும் சாதி உள்ளிட்ட சில காரணங்களால் மோதிக் கொண்டு நிற்கிறார்கள். இரண்டு ஊர்களிலிருந்தும் வெவ்வேறு சாதியில் இரண்டு பெண்களைத் திருமணம் செய்து கொண்டுள்ளவர் சங்கிலி முருகன். இரண்டு ஊர் மக்களாலும் பெரிதும் மதிக்கப்படும் பெரிய மனிதர்.

ஊராட்சி மன்றத் தேர்தலில் அவருடைய இரண்டு மனைவிகளுக்குப் பிறந்த மகன்களான சுந்தர், கண்ணா ரவி ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுகிறார்கள். இருவரது கணக்குப்படியும் இருவருக்கும் சமமான ஓட்டுக்கள்தான் கிடைக்கும் போல உள்ளது. இன்னும் ஒரு ஓட்டு கிடைத்தால் யாராவது ஒருவர் வெற்றி பெற்றுவிடுவார். அந்த ஓரு ஓட்டாக ஊரில் முடி திருத்தும் தொழிலாளியான யோகிபாபு ஓட்டு இருக்கிறது. அவருக்கு அப்போதுதான் புதிதாக வாக்காளர் அட்டை வந்துள்ளது. அவருடைய ஓட்டை எப்படியாவது பெற அண்ணன், தம்பி இருவருமே அவருக்கு வேண்டியதைச் செய்து கொடுக்கிறார்கள். அதனால் நடக்கும் பிரச்சினைகள், அவர் யாருக்கு ஓட்டு போட்டார், யார் வெற்றி பெற்றது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இப்படி ஒரு கதையை யோசித்து அதை சுவாரசியமாகவும் கொடுத்த இயக்குனரைப் பாராட்டியே ஆக வேண்டும். ஒரு படத்தின் தரத்திற்கும், அது சொல்ல வரும் கருத்திற்கும் நட்சத்திரங்களை விட, பிரம்மாண்டத்தை விட கதையும், கதாபாத்திரங்களும்தான் முக்கியம் என்பதை ஆணித்தரமாய் உணர்த்தியிருக்கிறார் இயக்குனர்.

இந்தப் படத்தில் நடித்தன் மூலம் நகைச்சுவை நடிகர்களாக இருந்து நாயகர்களாக உயர்ந்தவர்களுக்கு கடும் சவாலை விடுத்திருக்கிறார் யோகிபாபு என்றுதான் சொல்ல வேண்டும். மலையாள சினிமாவில்தான் இப்படியான படங்களையும், கதாபாத்திரங்களையும் நாம் அதிகம் பார்க்க முடியும். அப்படியான ஒரு கதையைத் தேர்வு செய்து, அதில் நடிக்கலாம் என்று முடிவு செய்த யோகிபாபுவின் எண்ணத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது. இந்த வருடத்திற்கான சில பல விருதுகள் யோகிபாபுவுக்கு விருதுக்குழுவினர் கொடுத்தே ஆக வேண்டும் என உறுதியாகச் சொல்லலாம்.

தமிழ் சினிமாவில் இன்னும் அதிகம் கவனிக்கப்படாத ஒரு நடிகையாக இருக்கிறார் ஷீலா ராஜ்குமார். நம் வீட்டுப் பெண் போன்ற பாந்தமான தோற்றம், இயல்பான நடிப்பு, யார் கதாநாயகன், இவருடன் நடிக்க வேண்டுமா என்றெல்லாம் கேள்வி கேட்காமல் யோகி பாபு ஜோடியாக நடிக்க அவர் சம்மதம் சொன்னதில் இருந்தே நல்ல சினிமா மீதுள்ள அவருடைய காதலைக் காட்டுகிறது. இப்படி உள்ள நடிகைகளை நல்ல சினிமா எடுக்கத் துடிக்கும் இயக்குனர்கள் நிச்சயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வெவ்வேறு தாய் வயிற்றில் பிறந்த அண்ணன், தம்பிகளாக சுந்தர், கண்ணா ரவி. ஒருவருக்கொருவர் படத்தில் ஏட்டிக்குப் போட்டியாக நடக்கும் அளவிற்கு நடிப்பிலும் ஏட்டிக்குப் போட்டியாக அசத்தியுள்ளார்கள். இவர்கள் இருவரின் தேர்வையும் அவரவர் கதாபாத்திரங்களில் நியாயப்படுத்தியுள்ளார்கள்.

இவர்களின் அப்பாவாக சங்கிலி முருகன், வரும் காட்சிகளில் எல்லாம் ஒரு அதிரடியைச் செய்துவிட்டுச் செல்கிறார். யோகிபாபுவின் உதவியாளராக ‘கலக்கப் போவது யாரு ஜுனியர்’ முகேஷ். தம்பிக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.

இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, கலை என படத்தில் உள்ள ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞர்களும் இப்படத்தை ஒரு தரமான படமாகக் கொடுக்க வேண்டும் என முனைப்புடன் உழைத்திருக்கிறார்கள் என்பது காட்சிக்குக் காட்சி தெரிகிறது.

தமிழ் சினிமாவில் சில முன்னணி ஹீரோக்களின் படங்களைப் பார்த்தே ஆக வேண்டும் என சினிமா ரசிகர்கள் துடிப்பார்கள். நல்ல சினிமாவைப் பார்க்க வேண்டும் எனத் துடிப்பவர்கள் நிச்சயம் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்.

வேறு மொழிகளில் வந்த சில படங்களைப் பார்த்து ‘என்னமா எடுத்திருக்காங்க’ எனப் பாராட்டும் சில ரசிகர்கள் இந்தப் படத்தைப் பாருங்கள், இன்னும் கூடுதலாகப் பாராட்டுவீர்கள்.

மண்டேலா - மறக்க முடியாதவர்