கர்ணன் - விமர்சனம்

10 Apr 2021

கர்ணன் - விமர்சனம்

தமிழ் சினிமாவில் காலம் காலமாக சில குறிப்பிட்ட சாதியினரை மட்டுமே மையமாக வைத்து பல படங்கள் வந்துள்ளன.

தங்களை தமிழ் சினிமாவின் முதன்மையான இயக்குனர்கள் என காட்டிக் கொண்டவர்கள் கூட அவர்களது படங்களில் அவர்களது சாதிப்பற்றை வெளிப்படுத்தத் தவறியில்லை.

ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகள், வாழ்க்கையைப் பற்றிய படங்கள் சமீப காலமாகத்தான் தமிழ் சினிமாவில் வர ஆரம்பித்துள்ளன. அவற்றை ஒரு அற்புதமான படைப்பாகப் பார்க்காமல் சிலர் அதையும் சாதிய வன்மத்துடன் பார்ப்பது அவர்களது நடுநிலைமையைக் கேலிக்குள்ளாக்குகிறது.

இந்த ‘கர்ணன்’ படம் தமிழ் சினிமாவில் ஒரு அழுத்தமான பதிவு. ஒரு காலத்தில் தங்களுக்கான சில முக்கிய தேவைகளைக் கூட ஒடுக்கப்பட்ட மக்கள் பலமாகப் போராடித்தான் பெற்றார்கள் என்பது இன்று எத்தனை பேருக்குத் தெரியும்.

அப்படி ஒரு வலியை, அந்த மக்களின் போராட்டத்தை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். இந்தப் படம் இப்போது பலத்த விவாதத்திற்கு வித்திட்டாலும் எதிர்காலத்தில் கொண்டாடப்படும் ஒரு படமாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம். அதற்கு உழைத்திட்ட இந்தப் படக்குழுவினருக்கு நமது வாழ்த்துகள்.

பொடியன்குளம் என்ற கிராமத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியத் தேவையாக ஊரில் பஸ் நிறுத்தம் தேவைப்படுகிறது. ஆனால், அதிகார வர்க்கமும், சாதிய வர்க்கமும் அந்த ஊருக்கு பஸ் நிற்கவே கூடாது என்பதற்காக என்னவெல்லாமோ செய்கிறது. தங்கள் ஊருக்கு பஸ்கள் நின்றாக வேண்டும் என தனுஷ் முன்னெடுக்கிறார். அதற்காக போராட ஆரம்பிக்கிறார். அவர் பின் ஊரே திரண்டு நிற்கிறது. தனுஷையும், அவரது ஊராரையும் அதிகார வர்க்கம் கடுமையாக எதிர்க்கிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் இப்படத்தின் கதை.

‘பொல்லாதவன், ஆடுகளம், அசுரன்’ வரிசையில் தனுஷுக்கு இந்தப் படமும் ஒரு சிறப்பான படம். கர்ணன் கதாபாத்திரத்திற்குள் அப்படியே புகுந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். நெல்லை வட்டாரத் தமிழ் பேச்சு, எளிய உடை, அசாத்திய உடல் மொழி, தேவையான இடத்தில் நிமிர்ந்து நின்று பேசுவது, குடும்பத்திற்குள் பாசமாக அடங்கிப் போவது என ‘கர்ணன்’ கதாபாத்திரத்தில் காட்சிக்குக் காட்சி அவரது நடிப்பிற்கு கைத்தட்டல் வாங்குகிறார். மீண்டும் ஒரு தேசிய விருதுக்குரிய படமாக அவருக்கு இந்தப் படம் அமையும் என எதிர்பார்க்கலாம்.

நம் மண்ணின் இயல்பான மைந்தர்கள் எப்படி இருப்பார்கள் என்பது சிட்டியில் வாழும் சிலருக்குக் கூடத் தெரியாது. அப்படியிருக்க, மலையாளத்திலிருந்து வந்த லால், ரெஜிஷா விஜயன் ஆகியோர் இந்தப் படத்தில் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரங்களும், அதில் அவர்களது நடிப்பும் அவர்களை வெகுவாகப் பாராட்ட வைக்கிறது. அதிலும் படம் முழுவதும் வரும் லால் ஒவ்வொரு காட்சியிலும் கலக்குகிறார் என்றால் கடைசியில் கண் கலங்கவும் வைத்துவிடுகிறார். இந்தப் படத்தைப் புரிந்து கொண்டு அதில் நடிக்க சம்மதம் சொன்னதற்கே ரெஜிஷாவின் சினிமா ஆர்வம் புரிந்துவிடும். அப்படியிருக்கும் போது அவரும் அசத்தியிக்கிறார் என்பதை சொல்லவும் வேண்டுமோ ?.

சின்னச் சின்னக் கதாபாத்திரங்களில் கொஞ்ச நேரமே வந்து போகிறவர்கள் கூட அந்த பொடியன்குளத்தின் மனிதர்களாகவே ஒன்றிப் போயிருக்கிறார்கள். தனுஷின் அப்பா பூ ராம், அம்மா ஜானகி, குறிப்பாக தனுஷின் அக்காவாக நடித்துள்ள லட்சுமிப்ரியா. அக்காக்கள் தம்பிகள் மீது எந்த மாதிரியான பாசத்தை வைத்திருப்பார்கள் என்பதற்கு இந்தப் படமும் லட்சுமிப்ரியாவின் கதாபாத்திரமும் சிறந்த உதாரணம்.  கொஞ்ச நேரமே வந்தாலும் தனது அதிரடியாலும், அதிகாரத்தாலும் மிரட்டியிருக்கிறார் நட்ராஜ். நகைச்சுவை மட்டுமா குணச்சித்திர கதாபாத்திரத்திலும் தன்னால் அழுத்தமாக நடிக்க முடியும் என நிரூபித்திருக்கிறார் ய

சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள், பின்னணி இசை இந்தப் படத்தை மேலும் தாங்கிப் பிடிக்கின்றன. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு, ராமலிங்கம் கலை இயக்கம் இந்தப் படத்தின் பெரும் பலம். பொடியன்குளம் கிராமத்தை நிஜமான கிராமம் போல காட்டிவிட்டார்கள்.

யாரை எதிர்த்து, யாரைக் குற்றம் சாட்டி, எதற்காக இந்தப் படம் என்பதை விஷுவலாக அதிகம் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர். அதற்காக பல குறியீடுகளைப் பயன்படுத்தி இருக்கிறார். அவற்றை நேருக்கு நேராக போட்டு உடைத்திருக்கலாமோ என்று மட்டும் எண்ண வைக்கிறது.

கர்ணன் - கர்ணனைப் பார்க்க எல்லாரையும் கூட்டிப் போங்க.

 

Tags: karnan, dhanush, mari selvaraj, santhosh narayanan, rajisha vijayan

Share via: