இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், தனுஷ் முதன் முறையாக இணைந்திருக்கும் படம் என்பதால் இப்படத்திற்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

கடந்த வருடமே தியேட்டர்களில் வெளியாக வேண்டிய படம், கொரானோ தொற்றால் தியேட்டர்கள் திறக்கப்படாத நிலையில் சில மாதங்களுக்கு முன்பே ஓடிடி வெளியீடு என அறிவித்தார்கள்.

உலக அளவில் முன்னணி ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் தளம் முதல் முறையாக ஒரு பெரிய நடிகரின் படத்தை நேரடியாக தனது தளத்தில் வெளியிடுவதால் படம் நிச்சயம் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அனைவரின் எதிர்பார்ப்பையும் இப்படம் பொய்யாக்கி இருக்கிறது என்பதே உண்மை.

தமிழ் சினிமாவில் ரவுடிகள், தாதாக்கள் சம்பந்தப்பட்ட கதைகளாக நமது மண் சார்ந்த கதைகளைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். ரஜினிகாந்த் முதல் ஜி.வி.பிரகாஷ்குமார் வரையிலும் அப்படியான படங்களில் நடித்துவிட்டார்கள். ஏன், தனுஷே ‘மாரி, அனேகன், வட சென்னை,’ என சில படங்களில் நடித்துவிட்டார்.

அப்படியிருக்க, இந்த ‘ஜகமே தந்திரம்’ படத்தின் கதையை ஜகத்திலேயே புதிய கதையாக அல்லவா கொடுத்திருக்க வேண்டும். படத்தில், எந்த ஒரு தந்திரமும், மந்திரமும் இல்லாமல் கொடுத்துவிட்டாரே கார்த்திக் சுப்பராஜ்.

சுருளி (தனுஷ்) மதுரையில் பரோட்டா கடை நடத்தி வருகிறார். அதோடு, காசு கொடுத்தால் கொலையும் செய்வார். தனது திருமண நிச்சயதார்த்தத்திற்குப் போகும் போது கூட கொலை செய்துவிட்டுத்தான் போகிறார். அதைப் பற்றித் தெரிய வந்ததால் திருமணமும் நின்றுவிடுகிறது. தனுஷ் செய்த கொலையின் காரணமாக அவரையும் ஒரு கும்பல் கொலை செய்யத் துரத்துகிறது. அந்த சமயத்தில் லண்டனிலிருந்து ஒரு வெள்ளைக்காரர் வந்து தனுஷை தங்களுக்கு உதவி செய்ய வாருங்கள் என லண்டனுக்கே அழைத்துச் செல்கிறார். 

லண்டனில் இனவெறி கொண்ட தாதாவான பீட்டர் (ஜேம்ஸ் காஸ்மோ), தங்களது நாட்டில் அந்நியர் வந்து குடியேறுவதை எதிர்க்கிறார். அவரிடமிருந்து அந்நியர்களைக் காப்பாற்றுகிறார் மற்றொரு தாதாவான சிவதாஸ் (ஜோஜு ஜார்ஜ்). சுருளியை லண்டனுக்கு வரவழைத்ததே பீட்டர் தான். அவருடன் சேர்ந்து சிவதாஸைக் கொலை செய்யக் காரணமாக இருக்கிறார் சுருளி. ஒரு கட்டத்தில் தான் காதலிக்கும் இலங்கை அகதியான அட்டிலா (ஐஸ்வர்ய லட்சுமி) மூலம் சிவதாஸ் பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்கிறார். அதன்பின் பீட்டரை அவர் எப்படி பழி தீர்த்து சிவதாஸைக் கொன்ற தன் பாவத்தைக் கழுவிக் கொள்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

மதுரை பரோட்டா மாஸ்டர் ‘சுருளி’யாக தனுஷ், சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதாவாக மாறி தன் நடிப்பில் முடிந்த வரை மிரட்டுகிறார். ஆனாலும், லண்டனில் அடிதடி வேலைகளுக்கு ஆள் கிடைப்பது அவ்வளவு சிரமமாகவா இருக்கிறது. மதுரையிலிருந்து ஒருவர் லண்டன் செல்வதெல்லாம் ரொம்பவே ஓவர் கார்த்திக் சுப்பராஜ். இவர் இயக்கிய ‘பேட்டை’ படத்தைப் பார்த்து பிரமித்துப் போய் இப்படத்தில் நடிக்க தனுஷ் சம்மதித்தாரா என்பது ஆச்சரியம்தான். தனியாளாக தனுஷ் மட்டுமே எப்படி இரண்டே முக்கால் மணி நேரப் படத்தைக் காப்பாற்ற முடியும்.

ஜேம்ஸ் காஸ்மோ படம் முழுவதுமே ஆங்கிலத்தில்தான் பேசுகிறார், அப்படித்தான் பேச வேண்டும். ஓடிடி தளத்தில் படம் என்பதால் சப்டைட்டில் பார்த்துதான் என்ன பேசுகிறார் என அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டும். இவர்தான் லண்டனில் பெரிய தாதா, அரசாங்கத்தையும் மிரட்டும் அளவிற்கு இருக்கிறார் என்று காட்டுகிறார்கள். ஆனால், இவருடைய நடிப்பில் அப்படி ஒன்றும் மிரட்டல் இல்லை.

ஜோஜு ஜார்ஜ், மக்களுக்கு நல்லது செய்யும் ஒரு தாதா. அவரை ஆரம்பத்தில் தங்கம், ஆயுதம் கடத்துபவர் எனக் காட்டிவிட்டு பின்னர்தான் அவர் அகதிகளுக்கும், அந்நியர்களுக்கும் ஆபத்பாந்தவனாக இருப்பவர் என்கிறார்கள். 

இலங்கையிலிருந்து அகதியாகப் பயணித்து லண்டனில் தஞ்சம் புகுந்தவராக கதாநாயகி ஐஸ்வர்ய லட்சுமி. கதையின் பிளாஷ்பேக்கிற்கும், தனுஷின் மனமாற்றத்திற்கும் பயன்படும் ஒரு கதாபாத்திரம். அத்துடன் அவர் வேலை முடிகிறது.

படத்தில் எங்கும் நகைச்சுவை இல்லை. தனுஷுக்கு டிரான்சிலேட்டர் ஆக இருக்கும் ஷக்தி ரவி மட்டும் அவ்வப்போது சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். 

‘டெம்போவே’ இல்லாத காட்சிகளை முடிந்த அளவிற்கு தன் பின்னணி இசை மூலம் சந்தோஷ் நாராயணன் ‘டெம்போ’ ஏற்ற முயற்சிக்கிறார். பாடல்களில் ‘ரகிட ரகிட…’ மட்டும் துள்ள வைக்கிறது. தாதா கதையில் லண்டனை எல்லாம் அழகாகக் காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் என சொல்ல முடியாது. ஏனென்றால் லண்டனை படத்தில் அதிகம் காட்டவில்லை. மெதுவாகச் செல்லும் காட்சிகளை எடிட்டர் நறுக்கியிருக்கலாம்.

தமிழ் சினிமாவில் இதுவரை மாறாத க்ளிஷேவான பல காட்சிகள் இந்தப் படத்திலும் உண்டு. ஒரு துப்பாக்கிச் சுட்டில் நான்கைந்து குண்டு பாய்ந்த பின்னும் உயிர் பிழைத்து வருகிறார் தனுஷ். 

இலங்கைத் தமிழர்களை பற்றி படத்திற்குள் கொண்டு வந்துவிட்டால் உலகம் முழுவதும் உள்ள அவர்கள் தங்களது படங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்ற ‘கமர்ஷியல் சினிமா’ எண்ணத்தை தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். 

மற்ற இளம் நடிகர்களைக் காட்டிலும் தனுஷ் தமிழ் சினிமாவில் வேறு ஒரு தளத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார். இரண்டு தேசிய விருதுகளை வாங்கியுள்ளவர், இம்மாதிரியான படங்களில் நடிப்பதைத் தவிர்த்தால் அவரது திரையுலகப் பயணத்திற்கு நல்லது. 

- Vetrivel