நெற்றிக்கண் - விமர்சனம்

15 Aug 2021

கொரிய மொழியில் 2011ம் ஆண்டு வெளிவந்த ‘பிளைன்ட்’ என்ற படத்தை ரீமேக் உரிமை வாங்கி ‘நெற்றிக்கண்’ என தயாரித்து வெளியிட்டுள்ளார்கள். ஆனால், இந்த அதிகாரப்பூர்வ ரீமேக்கிற்கு முன்னதாகவே ‘பிளைன்ட்’ படத்தின் கதைக்கருவை எடுத்துக் கொண்டு, கதாநாயகி என்பதை கதாநாயகன் என மாற்றி, சில பல மாற்றங்களைச் செய்து ‘சைக்கோ’ என்ற ஒரு படத்தை இயக்கிவிட்டார் இயக்குனர் மிஷ்கின்.

சிபிஐ ஆபீசரான நயன்தாராவிற்கு ஒரு கார் விபத்தில் கண் பார்வை பறி போய்விடுகிறது. மிக மிக மங்கலாகவே உருவங்கள் மட்டும் கருப்பு வெள்ளையில் தெரியும் (படத்தில் அப்படித்தான் காட்டுகிறார்கள்). பார்வையற்றவர்கள் எடுக்கும் பயிற்சிகளை எடுத்துக் கொண்டு தன் வீட்டில் தனது நாயுடன் தனித்து வாழ்கிறார். ஒரு நாள் கால் டாக்சி என நினைத்து தவறுதலாக, அஜ்மல் காரில் ஏறிவிடுகிறார். வழியில் யாரோ ஒரு பெண்ணை இடித்து விபத்து ஏற்படுததுகிறார் அஜ்மல். சில விஷயங்களில் சந்தேகம் வரை அஜ்மலிடமிருந்து தப்பித்து ஓடி விடுகிறார். போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் அளிக்கிறார். அதே ஸ்டேஷனில் சில பெண்கள் காணாமல் போன புகாரும் வந்திருக்கிறது. நயன்தாரா சொல்லும் தகவல்களை வைத்து பெண்களைக் கடத்துவதையும் அஜ்மல்தான் செய்திருப்பாரோ என சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் விசாரணையை ஆரம்பிக்கிறார். தனக்கு உதவி செய்யுமாறு நயன்தாராவிடமும் கேட்கிறார். இதனிடையே, அஜ்மல் நயன்தாராவைக் கொலை செய்ய முயற்சிக்கிறார். அதிலிருந்தும் தப்பிக்கும் நயன்தாரா அஜ்மலை, மணிகண்டன் உதவியுடன் பிடிக்க நினைக்கிறார். அவர்கள் முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

பெண்கள் கடத்தல், ஏதோ ஓரு விஷயத்தல் பாதிக்கப்பட்டு சைக்கோவா நடந்து கொள்ளும் வில்லன், சப் இன்ஸ்பெக்டர் விசாரிப்பதை தடுத்து நிறுத்தும் சக சப் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், வில்லனைப் பார்த்து அடையாளம் சொல்லி அவனது உருவத்தை வரைய உதவும் ஒரு இளைஞன், நாயகிக்கு உதவும் நாயைக் கூட கொல்லும் வில்லன், திருட்டுத்தனமாக அபார்ஷன் செய்து கொள்ளும் சில இளம்பெண்கள் என பல படங்களில பல விதங்களில் நாம் ஏற்கெனவே பார்த்த காட்சிகள், கதாபாத்திரங்கள் என பலவும் படத்தில் இருக்கிறது. புதிதாக எதையாவது சொல்லியிருந்தால் த்ரில்லர் படத்திற்குரிய பரபரப்பு நம்மை தொற்றிக் கொண்டிருக்கும். ஆனால், அப்படி எதுவும் படத்தில் இல்லை.

பார்வையற்ற பெண்ணாக நயன்தாரா. மாற்றுத் திறனாளி கதாபாத்திரம் என்றால் நம் கண்முன் ‘நானும் ரௌடிதான்’ காதும்மா தான் வந்து நிற்கிறார். இந்த ‘நெற்றிக்கண்’ துர்கா, அந்த காதும்மா நடிப்பில் கால்வாசி கூட நடிக்கவில்லை என்பது வருத்தமே. ஏதோ ஒரு காட்சியிலாவது நயன்தாரா மீது நமக்கு பரிதாபம் வருவது போலிருந்தால் பரவாயில்லை. படம் முழுவதுமே அப்படி எதுவும் வரவில்லை. இந்தப் படத்தில் எது பிடித்தது என நயன்தாரா நடிக்க சம்மதித்தார் என்பது ஆச்சரியமே.

மேலதிகாரிகளால் அவமானப்படுத்தப்படும் சப் இன்ஸ்பெக்டர், எப்படியாவது இந்த வழக்கில் குற்றவாளியைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என துடிக்கிறார். யோசித்து செயல்பட தனக்கு மூளை இல்லை என அவரே சொல்லிக் கொள்கிறார். பார்க்கப் பாவமாய் இருக்கிறது. 

சைக்கோ வில்லன் என்பது தமிழ் சினிமாவுக்கு புதிதில்லை. எவ்வளவோ பேர் எப்படி எப்படியோ நடித்து பெயர் வாங்கியிருக்கிறார்கள். அஜ்மல் எப்படி வில்லத்தனத்தைக் காட்டுவது என்று நிறையவே தடுமாறுகிறார். நயன்தராவுக்கு உதவும் புட் டெலிவரி பாயாக சரண், இவர்தான் கொஞ்சம் யதார்த்தமாய் நடித்திருக்கிறார்.

கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் ‘இதுவும் கடந்து போகும்’ பாடல் ஏற்கெனவே கேட்டது போல இருந்தாலும் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையில் இவர்தான் ஏதோ கொஞ்சம் பரபரப்பூட்டுகிறார்.

படத்தின் ஆரம்பத்திலேயே சில பல கேள்விகள் எழுந்து விடுகிறது. நயன்தாரா ஏறியது கால் டாக்சி கார்தானா இல்லையா என்பதை அந்த நிறுவனத்திற்கே போன் செய்து கேட்டிருக்கலாம். அதைவிட்டுவிட்டு யார் யாரிடமோ போய் விசாரிக்கிறார்கள். இந்தக் காலத்தில் தெருக்குத் தெரு சிசிடிவி வந்துவிட்டது, பல கடைகளில் செக்யூரிட்டிகள் இருக்கிறார்கள். ஆனாலும், அஜ்மல் சர்வ சாதாரணமாக சுற்றிக் கொண்டிருக்கிறார். ஒரு வேளை பத்து வருடங்களுக்கு முன்பு வந்த படத்தின் கதையை அப்படியே எடுக்க வேண்டும் என்று எடுத்துவிட்டார்களோ ?.

நெற்றிக்கண் - ஒரிஜனல் பிளைன்ட்-ஐ நன்றாக மாற்றியிருக்கலாம்.

Tags: netrikkann, nayanthara, Vignesh Shivan, Milind Rau, Girishh Gopalakrishnan

Share via: