தமிழ் சினிமாவிலும், தமிழ்நாட்டின் அரசியலிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர் ஜெயலலிதா. அவரது வாழ்க்கை வரலாற்றைத் தழுவிய படம் இது என்று சொல்லப்பட்டாலும், படத்தின் ஆரம்பத்திலேயே ‘அனைத்தும் கற்பனையே’ என்று டைட்டில் கார்டில் போட்டு எந்த விதமான சர்ச்சைகளும் வருவதை தவிர்த்துவிட்டார்கள்.

கற்பனைக் கதை என்பதால் இதை ஒரு சினிமாவாகப் பார்ப்பதே பொருத்தமானது. 16 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகி, முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து சினிமாவில் உச்சத்தைத் தொட்ட நடிகை, அதன்பின் அரசியலிலும் இறங்கி சீனியர் அரசியல்வாதிகளை எதிர்த்து அரசியல் செய்து மக்கள் ஆதரவுடன் முதல்வர் ஆகப் பதவியேற்பதுதான் இந்த ‘தலைவி’ படத்தின் கதை.

சினிமாவாகப் பார்த்தால் ஒரு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்பது படத்தின் தலைப்பிலிருந்தே புரிந்துவிடும். அவருடைய போராட்டம், புகழ், சர்ச்சை என ஒரு வாழ்க்கை வரலாற்றை இரண்டரை மணி நேரப் படத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.

ஜெயா என்ற முதன்மைக் கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ரனவத். தமிழ் ரசிகர்களுக்கு அதிக பரிச்சயமில்லாத நடிகை, ஆனால், ஹிந்தியில் சிறந்த படங்களில், கதாபாத்திரங்களில் நடித்து தேசிய விருதுகளும் பெற்ற நடிகை. இந்தப் படத்திலும் தனக்கு தேசிய விருது நிச்சயம் என்று சொல்லுமளவிற்கு நடித்திருக்கிறார். ஜெயா என்ற கதாபாத்திரமாக தன்னை மாற்றிக் கொள்ள அவர் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது காட்சிக்குக் காட்சி தெரிகிறது. ஆணவம், காதல், பாசம், அன்பு, கனிவு, கோபம், அதிகாரம், புத்திசாலித்தனம் என ஒரு படத்தில் பல விதமான பாவங்களைப் பிரதிபலிக்கும்படியான ஒரு கதாபாத்திரம் சமீப கால வருடங்களில் ஒரு கதாநாயகிக்கு இந்த அளவிற்குக் கிடைக்க வாய்ப்பில்லை. ஒரு சில கேள்விகள் எழுந்தாலும் அதைப் பற்றியெல்லாம் யோசிக்க வைக்காமல் தனது நடிப்பால் இதை ஈடுசெய்து விடுகிறார் கங்கனா.

எம்ஜெஆர் என்ற சீனியர் ஹீரோவாக அரவிந்த்சாமி. அவரது தோற்றமும், நடிப்பும் எந்தக் குறையும் இல்லாமல் இருக்கிறது. ஆனால், உடல்மொழியில் இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாமே என்று எண்ணத் தோன்றுகிறது. அவருக்கான சில முக்கியத்துவமான காட்சிகள் இருந்தும் அதை ஆர்என்வி கதாபாத்திரத்திற்குத் தடம் மாற்றிவிட்டிருக்கிறார்கள்.

அரவிந்த்சாமியின் எம்ஜெஆர் கதாபாத்திரத்தை விடவும் தனது ஆர்என்வி கதாபாத்திரம் மூலம் தனி முத்திரை பதிக்கிறார் சமுத்திரக்கனி. அந்தக் கோபமான பார்வை ஒன்றே போதும், வசனங்கள் கூடத் தேவையில்லை என்றும் அளவிற்கு மிரட்டிவிடுகிறார். எம்ஜெஆரிடம் ஒரு நடிகை நெருக்கமாகப் பழகிய  காரணத்தால் அந்த நடிகையையே நேரில் அழைத்து அவர் நடித்து படமாக்கப்பட்ட பிலிம்கள், அவர் பயன்படுத்திய ஆடைகள் ஆகியவற்றை தீயிட்டுக் கொளுத்தும் அந்த ஒரு காட்சி போதும் சமுத்திரக்கனியின் நடிப்புக்கு.

படத்தில் சில முக்கியமான துணை கதாபாத்திரங்கள் இருந்தும் மொத்தக் கதையும் ஜெயா, எம்ஜெஆர், ஆர்என்வி ஆகியோரைச் சுற்றியே நகர்கிறது. அப்படியிருந்தும் மற்ற கதாபாத்திரங்களில் ஜெயாவின் உதவியாளராக வரும் தம்பி ராமையா மற்றவர்களை விட கவனம் ஈர்க்கிறார்.  ‘ரோஜா’ படத்தில் அரவிந்த்சாமியின் ஜோடியாக நடித்த மதுபாலா, இப்படத்தில் அவரது மனைவி ஜானகியாக நடித்திருக்கிறார். சூப்பர் ஹிட்டாக ஓடிய ‘மைனே பியார் கியா’ ஹிந்திப் படத்தின் கதாநாயகி பாக்யஸ்ரீ, இப்படத்தில் ஜெயாவின் அம்மா சந்தியாவாக நடித்திருக்கிறார். ராதாரவி, பூர்ணா, ஜெயக்குமார், சண்முகராஜன் சில காட்சிகளில் வந்து போகிறார்கள். கருணா என்ற கதாபாத்திரத்தில் நாசர். இந்தக் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடு

ஜி.வி.பிரகாஷ்குமாரின் பின்னணி இசையும், பாடல்களும் 60, 70 காலகட்டங்களை இசையின் மூலம் கொண்டு வந்திருக்கிறது. கலை இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் ஒரு பீரியட் படத்திற்குண்டான உணர்வைக் கொடுக்க உதவியிருக்கிறார்கள்.

கற்பனைக்கும், நிஜத்திற்குமான தொடர்பை இந்தப் படத்தைப் பார்க்கும் போது ரசிகர்கள் நினைத்துப் பார்ப்பார்கள். படமாகப் பார்த்துவிட்டால் ரசிப்பார்கள், நிஜத்துடன் தொடர்புபடுத்திப் பார்த்தால் இதை சேர்த்திருக்கலாம், அதை சேர்த்திருககலாம் என பல கேள்விகளை எழுப்புவார்கள். யாரும் சர்ச்சையை ஏற்படுத்தக் கூடாது என்ற எண்ணத்தில் கதை, திரைக்கதை அமைத்திருக்கிறார்கள், அதுவே பிளஸ், அதுவே மைனஸ்.