தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் அவ்வப்போது விவசாயத்தைப் பற்றிய படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு படமும் ஒரு கருத்தை மையப்படுத்தின.

இந்த ‘லாபம்’ படத்தில் ‘கூட்டுப்பண்ணை’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி கிராமத்து விவசாயிகள் அதன் மூலம் விவசாயம் செய்தால் நல்ல லாபத்தை அடையலாம் என்கிறார் படத்தின் இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன்.

ஒரு கிராமத்தில் விவசாயமும், ஆலைத் தொழில்களும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு நடக்கின்றன. விவசாயத்தை சார்ந்துதான் சர்க்கரை ஆலை, நூற்பாலை ஆகியவை இருக்கின்றன. விவசாயத்தை அழித்துவிட்டால் அந்த ஆலைகள் எப்படி செயல்படும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார் இயக்குனர்.

பல தொழில்களுக்கு மூலதனமாக விவசாயம்தான் இருக்கிறது என சிறு குழந்தைகளுக்கும் பாடம் எடுக்கும் விதத்தில் இந்தப் படத்திற்கான பல காட்சிகள் அமைந்துள்ளன.

இன்றைய தலைமுறையினர் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய ஒரு படம். பலருக்கும் அரிசி எப்படி வருகிறது என்பது கூடத் தெரியாது. அதற்காக விவசாயி எவ்வளவு கஷ்டப்பட வேண்டியுள்ளது என்பதைக் காட்டும் முக்கியமான படம் இது.

ஆறு வருடங்களுக்குப் பிறகு தன் ஊருக்கு வரும் விஜய் சேதுபதி, ஊரின் விவசாய சங்கத் தலைவர் ஆகி, மக்களை ஒன்று திரட்டி கூட்டுப்பண்ணை விவசாயத்தை செய்ய நினைக்கிறார். அவரது முயற்சிகளுக்கு முன்னாள் சங்கத் தலைவர் ஜெகபதி  பாபு மற்ற ஆலை அதிபர்களுடன் சேர்ந்து எதிராக செயல்படுகிறார். அவர்களை சமாளித்து விஜய் சேதுபதி வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

ஆரம்பக் காட்சியில் ஒரு நாடோடி போல ஊருக்குள் வருகிறார் விஜய் சேதுபதி. அப்படியிருப்பவர் போகப் போக ஊரிலுள்ள மக்களுக்கு விவசாயத்தின் உண்மையான லாப நிலை என்னவென்பதைப் புரிய வைக்க முயல்கிறார். ஜெகபதிபாபுவின் வில்லத்தனத்தால் திருட்டுப்பட்டம் கட்டப்பட்டு ஊரை விட்டு வெளியேறுகிறார். இருப்பினும் தன்னுடைய அதிரடியால் எப்படி ஊரையும், மக்களையும் காப்பாற்றுகிறார் என்பது கொஞ்சம் சினிமாத்தனமாக இருந்தாலும் ரசிக்க வைக்கிறது. ஆனால், காட்சிக்குக் காட்சி விஜய் சேதுபதி அறிவுரை வழங்குவது போல இருப்பதுதான் நெருடலாக உள்ளது.

படத்தில் கதாநாயகி என்பதற்காக ஸ்ருதிஹாசன். ஒரு பாடல் காட்சி, விஜய் சேதுபதியுடன் சில காட்சிகள் என அவர் வந்த வேலை முடிகிறது.

ஜெகபதி பாபு தான் மெயின் வில்லன். கிராமத்தில் ஒரு கார்ப்பரேட் வில்லன் போல இருக்கிறார். தனக்காக சில உள்ளூர் ஆலை அதிபர்களை ஆதரவு தெரிவிக்க வைத்து வில்லத்தனம் காட்டுகிறார்.

இமான் இசை சுமார் ரகம். ஒரு கிராமத்தைச் சுற்றிச் சுற்றி படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. கதைக்குத் தேவையான காட்சியமைப்புகள், தேவையற்ற பிரம்மாண்டங்கள் இல்லாதது ரசிக்க வைக்கிறது.

படம் முழுவதும் பல விஷயங்களை, கருத்துக்களை காட்சிக்குக் காட்சி வசனம் மூலமும், காட்சிகள் மூலமும் உணர்த்துகிறார் இயக்குனர். அவ்வளவையும் ஒரே படத்திற்குள் புரிந்து கொள்வது சாமானிய ரசிகனுக்கு சிரமம்தான்.