ஷாட் பூட் த்ரீ - விமர்சனம்

07 Oct 2023

அருணாச்சலம் வைத்யநாதன் இயக்கத்தில், ராஜேஷ் வைத்யா இசையமைப்பில், வெங்கட் பிரபு, சினேகா, யோகி பாபு, கைலாஷ், பிரணதி, பூவையார், வேதாந்த் வசந்த் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

ஐ.டியில் வேலை பார்க்கும் வெங்கட் பிரபு, சினேகா மகனான கைலாஷுக்கு நாய் ஒன்றை வளர்க்க வேண்டும் என்று ஆசை. அவனது பிறந்தநாளில் நண்பர்களான பிரணதி, வேதாந்த் நாய்க் குட்டி ஒன்றை பரிசாக அளிக்கிறார்கள். அந்த நாயுடன் அனைவருமே ஒன்றிப் போகிறார்கள். ஒரு நாள் அந்த நாய் திடீரென காணாமல் போய்விடுகிறது. நண்பர்கள் சேர்ந்து தேட ஆரம்பிக்கிறார்கள். அந்த நாய் கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

குழந்தைகளுக்கான முழுமையான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அருண். தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான படம் என்பது எப்போதாவது ஒரு முறைதான் வருகிறது. இந்தப் படத்தில் செல்லப் பிராணிகள் மீதான அன்பை மட்டும் காட்டாமல் சில சமூகக் கருத்துக்களையும் அழுத்தமாய் பதிய வைத்திருக்கிறார்.

கைலாஷ், பிரணதி, வேதாந்த் வசந்த், பூவையார் ஆகிய நால்வரும் நாயைத் தேட ஆரம்பித்ததும் படம் பரபரப்பாக நகர்கிறது. இடையில் தெரு நாய்களைப் பிடித்துக் கொல்லும் கொடூரத்தைப் பற்றியும் கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர். நண்பர்கள் நால்வருமே மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். 

தங்களது குழந்தைகளைக் கூட சரியாகக் கவனிக்காத இந்தக் கால பெற்றோர்களை கண்முன் நிறுத்தியிருக்கிறார் இயக்குனர். வெங்கட் பிரபு, சினேகா தங்களது மகன் மீது செலுத்தும் பாசத்தை விட வேலையின் மீதுதான் அதிக பாசமாக இருக்கிறார்கள். குடும்பத்திற்கும் நேரம் ஒதுக்க வேண்டும் என்பதை அழுத்தமாய் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். யோகி பாபு ஆட்டோ டிரைவராக நடித்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் காமெடி கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ராஜேஷ் வைத்யாவின் பின்னணி இசை முதல் படத்திலேயே முத்தாய்ப்பாய் அமைந்திருக்கிறது.

ஒரு எளிமையான கதையை எந்த ஒரு தேவையற்ற காட்சிகளும் இல்லாமல் அருமையாய் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அருண்.

Tags: Shot Boot Three, Arunachalam Vaidyanathan, Kailash Heet, Praniti Praveen, Poovaiyar, Rajhesh Vaidhya

Share via: