800 - விமர்சனம்

07 Oct 2023

எம்எஸ் ஸ்ரீபதி இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், மதுர் மிட்டல், மகிமா நம்பியார், நாசர் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

இலங்கை கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற மலையகத் தமிழர் முத்தையா முரளிதரன். ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு அவர் ஆதரவு தந்ததில்லை என்ற குற்றச்சாட்டும், கிரிக்கெட் விளையாட்டில் பந்தை வீசாமல் எறிகிறார் என்ற குற்றச்சாட்டும் அவரது வாழ்க்கையில் சர்ச்சையாக அமைந்தவை. அந்த இரண்டு விஷயங்களை வைத்து இந்தப் படத்தைக் கொடுத்து முரளிதரன் மீதான இமேஜை மாற்ற முயற்சித்திருக்கிறார் இயக்குனர்.

1800களில் இலங்கை மத்தியப் பகுதியில் அமைந்துள்ள தேயிலை, இரப்பர், காபி தோட்டங்களில் வேலை செய்ய இந்தியாவிலிருந்து பல தமிழர்களை ஆங்கிலேயர்கள் கொண்டு சென்றனர். இந்தியாவிலிருந்து சென்றதால் அவர்களை இந்திய வம்சா வழியினர் என்றே இலங்கை அரசும், மக்களும் நடத்தினார்கள். வாழ்க்கையில் மிகவும் பின் தங்கியவர்களாகவே இருந்தார்கள். அவர்களிலிருந்து கஷ்டப்பட்டு உயர்ந்து இலங்கை கிரிக்கெட் அணியில் சேர்ந்து சாதனையாளராக மாறியவர் முரளிதரன்.

பள்ளி, கல்லூரி நாட்களில் கிரிக்கெட் விளையாடி சாதனை புரிந்து பின் இலங்கை கிரிக்கெட் அணியில் சேர்ந்து முக்கிய வீரராக வளர்ந்து வந்தவர் முரளிதரன். ஆனால், அவரது பந்து வீச்சு எறிவது போல உள்ளதாக ஆஸ்திரேலிய நடுவர் குற்றம் சாட்ட பெரும் சர்ச்சை உருவானது. அந்த சர்ச்சைகளை உடைத்தெறிந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்தவர் முரளிதரன். அவரது வாழ்க்கைப் பயணத்தை அழுத்தமாகவே கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

முரளிதரன் கதாபாத்திரத்தில் மதுர் மிட்டல் என்ற நடிகர் பொருத்தமாக நடித்திருக்கிறார். கிரிக்கெட் விளையாடுவதிலும், உணர்வுபூர்வமான காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். முரளிதரனின் நிஜ தோற்றத்திற்கு நெருக்கமாக அவரது தோற்றத்தை மேக்கப் மூலம் கொண்டு வர முயற்சித்துள்ளனர்.

முரளிதரன் கதாபாத்திரத்தைச் சுற்றியே படம் நகர்வதால் மற்ற கதாபாத்திரங்கள் சில காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார்கள். முரளிதரன் அப்பாவாக வேலராமமூர்த்தி, அம்மாவாக ஜானகி சுரேஷ், பத்திரிகையாளராக நாசர் ஆகியோர் சில காட்சிகளில் வந்தாலும் கவனம் பெறுகிறார்கள்.

படத்திற்காக பல மைதானங்களில் சென்று படமாக்கியிருக்கிறார்கள். சில காட்சிகள் விஎப்எக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் படத்தின் உருவாக்கம் பிரம்மாண்டமாகவே உள்ளது. அதற்கு ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவும், ஜிப்ரான் பின்னணி இசையும் பக்கபலமாக அமைந்துள்ளது.

ஈழத் தமிழர் போராட்டங்களுக்கு முரளிதரன் ஆதரவு தரவில்லை என்பதை காட்சியாகவே வைத்துள்ளார்கள். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபகாரனை முரளிதரன் சந்திக்கும் காட்சியை வைத்து அவரிடமே முரளிதரன் போருக்கு எதிராக தனது கருத்தைப் பதிவு செய்வதாகக் காட்சி இடம் பெறுகிறது.

இப்படம் ஆரம்பமாகும் போது நடிகர் விஜய் சேதுபதி, முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. அவர் நடித்திருந்தால் இந்தப் படம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும்.

Tags: 800, 800 the movie, 800 review, 800 movie review, muralidharan, muthaiah muralidharan

Share via: