லியோ - விமர்சனம்

19 Oct 2023

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், பிரியா ஆனந்த் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு லோகேஷ், விஜய் கூட்டணி மீண்டும் இணைந்த படம் என்பதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு வெளியீட்டிற்கு முன்பாக அதிகமாகவே இருந்தது. வெளியீட்டிற்கு முன்பாக இது ஒரு லோகேஷ் படமாகவும் இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், படத்தைப் பார்த்த போது இது ஒரு விஜய் படமாக மட்டுமே இருக்கிறது என்பதுதான் ரசிகர்களின் கருத்தாகவும் உள்ளது. அந்த அளவிற்கு படத்தில் நடித்துள்ள மற்றவர்களுக்கு அதிக முக்கியத்துவம் இல்லாமல் படம் முழுவதையும் விஜய் மட்டுமே ஆக்கிரமித்திருக்கிறார்.

ஹிமாச்சல பிரதேசத்தில் காபி ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார் விஜய். அன்பான மனைவி, ஒரு மகன், மகள் என அழகான குடும்பம். விஜய்யின் காபி ஷாப்பில் வந்து தகராறு செய்யும் கொள்ளையன் மிஷ்கின் கூட்டத்தினரை சுட்டுக் கொன்றுவிடுகிறார் விஜய். நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு விடுதலை செய்யப்படுகிறார். ஆனால், அவரைத் தேடி போதைப் பொருள் கடத்தல்காரர் சஞ்சய் தத் வருகிறார். விஜய்யிடம் நீதானே எனது மகன் ‘லியோ’ எனக் கேட்கிறார். அவரது குடும்பத்தினருக்கும் தொல்லைகளைத் தருகிறார். தான் லியோ இல்லை என பார்த்திபன் என விஜய் எவ்வளவு சொல்லியும் சஞ்சய் தத் கேட்கவில்லை. இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

முதல் முறையாக தனது வயதுக்கேற்ற ஒரு கதாபாத்திரத்தில் விஜய் நடித்து ஆச்சரியப்படுத்துகிறார். தனது குடும்பத்தினரைக் காப்பாற்ற கொலைகளைக் கூட செய்யத் தயங்காதவராக இருக்கிறார். படத்தின் ஆரம்பத்திலேயே அந்த ‘ஹைனா’வை மடக்கிப் பிடிக்கும் காட்சியில் அவரது கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்பதைப் புரிய வைத்துவிடுகிறார் இயக்குனர். இடைவேளைக்குப் பின் பல அழுத்தமான காட்சிகள், பிளாஷ்பேக் என நகர்கிறது படம். அவற்றில் விஜய்க்கு நடிக்க நல்ல வாய்ப்பு. அவரும் அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

விஜய்யின் மனைவியாக த்ரிஷா. கலங்கி நிற்கும் கணவனுக்கு ஆதரவாக நிற்கும் ஒரு கதாபாத்திரம். விஜய்யின் மகனாக மேத்யூ தாமஸ், மகளாக இயல் இருவரும் மனதில் இடம் பிடிக்கிறார்கள். விஜய்யின் குடும்ப நண்பராக பாரஸ்ட் ஆபீசர் கதாபாத்திரத்தில் கௌதம் மேனன், அவரது மனைவியாக பிரியா ஆனந்த். 

வில்லன்களாக சஞ்சய் தத், அர்ஜுன். இருவருக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக இடைவேளைக்குப் பின் காட்சிகளை ஒதுக்கியிருக்கிறார்கள். முதலில் சஞ்சய் தத் கொஞ்சமாய் மிரட்ட, பின் அர்ஜுன் அதிகமாய் மிரட்டுகிறார். 

அனிருத் இசையில் ‘நா ரெடிதான்’ பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசையில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு பரபரவென இருக்கிறது. அன்பறிவ் ஸ்டண்ட் காட்சிகள்தான் படத்தின் ஹைலைட். படத்தில் பாதி சண்டைக் காட்சிகளாகவே இருப்பதால் அவர்களையும் இயக்குனர் பெயரில் சேர்த்துவிடலாம்.

மடோனா செபாஸ்டியன் கதாபாத்திரம் நமக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதிலிருந்தே சென்டிமென்ட்டை பில்ட்அப் செய்து படத்தை நகர்த்தியிருந்தால் இன்னும் உணர்வுபூர்வமாய் இருந்திருக்கும்.

 

Tags: leo, leo review, vijay, trisha, sanjay dutt, arjun, lokesh kanagaraj, anirudh,

Share via: