மார்கழித் திங்கள் - விமர்சனம்
28 Oct 2023
மனோஜ் கே பாரதிராஜா இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், புதுமுகங்கள் ஷியாம் செல்வன், ரக்ஷனா, பாரதிராஜா, சுசீந்திரன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
பள்ளிப் பருவக் காதல், சாதி எதிர்ப்புக் காதல் என சில பல முறை தமிழ் சினிமாவில் பார்த்த கதையாக இருந்தாலும் அந்தப் படங்கள் சொல்லாத ஒரு பழி வாங்கல் கிளைமாக்சை படத்தில் வைத்து படம் பார்க்கும் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார் இயக்குனர் மனோஜ் கே பாரதிராஜா. இயக்குனராக தனது முதல் படத்தில் ‘பாஸ்’ ஆகியிருக்கிறார். ‘அப்பா நான் பாஸாயிட்டேன்,” என தனது அப்பா பாரதிராஜாவிடம் அவர் தாராளமாகச் சொல்லலாம்.
கிராமத்துத் தாத்தா பாரதிராஜா. அப்பா அம்மாவை இழந்த அவரது பேத்தி ரக்ஷனாவை வளர்ப்பவர் அவர்தான். பள்ளிப் படிப்பு முடிக்கும் போது காதலிக்கிறேன் என்று வந்து தாத்தாவிடம் சொல்கிறார் ரக்ஷனா. பேத்தியின் காதலுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் பேத்தியின் காதலன் ஷியாம் செல்வன் வீட்டிற்கே சென்று பேசி இருவரும் கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை பேசிக் கொள்ளாமல் இருந்தால் திருமணம் செய்து வைக்கிறேன் என்கிறார். ரக்ஷனா கல்லூரிப் படிப்புக்காக வெளியூர் செல்கிறார். படிப்பை முடித்து ஊருக்குள் வருபவர் காதலன் ஷியாம் செல்வனைக் காணாமல் தவிக்கிறார். அவரது காதலன் எங்கே போனார், காதலர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
பாரதிராஜா 40 வருடங்களுக்கு முன்பு இயக்கிய ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தைப் போல ஒரு டீன் ஏஜ் காதலுடன் இந்தப் படத்தில் இயக்குனராகக் களமிறங்கியிருக்கிறார் மனோஜ்.
பள்ளிக் கூட மாணவனாக ஷியாம் செல்வன், மாணவியாக ரக்ஷனா பொருத்தமான தேர்வு, கதாபாத்திரத்தையும், காட்சிகளையும் புரிந்து நடித்திருக்கிறார்கள். இடைவேளைக்குப் பின் ரக்ஷனா மீதே கதை நகர்வதால் அவரும் அந்த அழுத்தத்தை அச்சமில்லாமல் கொடுத்து நடித்திருக்கிறார்.
பாசக்கார தாத்தாவாக பாரதிராஜா. பேத்தியின் காதலுக்கு எந்த மறுப்பும் சொல்லாமல் சேர்த்து வைக்கிறேன் என்கிறார். ஆனால், கடைசியில் அவர்தான் அப்படி செய்தார் என்று தெரிய வரும் போது நம்ப முடியவில்லை. வழக்கமான கிராமத்து வில்லனாக சுசீந்திரன்.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் மனதில் இடம் பிடிப்பதை விட பின்னணி இசை இடம் பிடிக்கிறது.
மேலோட்டமான ஒரு கதையாக இருக்கிறது. இன்னும் அழுத்தமாக உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கலாம்.
Tags: margazhi thingal, bharathiraja, ilaiyaraja, manoj k bharathiraja