கூழாங்கல் - விமர்சனம்
29 Oct 2023
பிஎஸ் வினோத் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், கருத்தபாண்டியன், செல்லபாண்டி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
கிராமத்து மனிதர்களின் வாழ்வியலை இதற்கு முன்பு இப்படி யாரும் சொன்னதில்லை என்று வியக்க வைக்கிறது இந்தப் படம். 1 மணி நேரம் 15 நிமிடத்திற்குள் கதையின் நாயகன் கருத்தபாண்டியன், செல்லபாண்டி இருவரும் நடந்து செல்கையில் அவர்கள் பின்னால் நாமும் நடந்து போகிறோம் என்ற உணர்வைத் தந்துவிடுகிறார் இயக்குனர் வினோத்.
கோபித்துக் கொண்டு அம்மா வீட்டிற்குச் சென்ற தனது மனைவியை அழைத்து வர குடிகார கணவனான கருத்தபாண்டியன், அவரது மகன் செல்லபாண்டியுடன் செல்கிறார். அவர்கள் போகும் வழியில் நடப்பவை, மனைவி ஊருக்கு வந்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தின் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை கருத்தபாண்டியனும், செல்லபாண்டியனும் ஒரு பொட்டல் வெளியில் நடக்கிறார்கள், நடக்கிறார்கள், நடந்து கொண்டே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட வெயிலில் எத்தனை நாட்கள் இப்படி படமாக்கி இருப்பார்கள் என்பதை நினைத்தால் ஆச்சரியமாக உள்ளது.
கணவன், மனைவி இடையிலான கதை என்று மட்டும் பார்த்தால் கூடவே அப்பகுதியின் வறட்சியையும் பதிவிடுகிறார் இயக்குனர். கருத்தபாண்டியன், செல்லபாண்டி இருவரும் நிஜமான அப்பா, மகன் போல அவ்வளவு இயல்பாக நடித்திருக்கிறார்கள். அதிலும் அந்த சிறுவன் செல்லபாண்டிக்கு இதுதான் முதல் படமாம். 80 சிறுவர்களிலிருந்து அவனைத் தேர்வு செய்து நடித்திருக்கிறார்கள். அப்பாவைப் பார்ப்பதும், முறைப்பதும் என அசத்தியிருக்கிறான்.
கருத்தபாண்டியின் மனைவி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம். ஆனால், அவரைக் கடைசி வரை காட்டாமலேயே படத்தை நகர்த்தியிருப்பது திரைக்கதையின் ஆச்சரியம்.
விக்னேஷ் குமுலை, செ பார்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். நடிப்பவர்களை விட அவர்கள் பின்னாலேயே கேமராவைத் தூக்கிக் கொண்டு நடந்த இவர்களது அர்ப்பணிப்புக்கு ஒரு சல்யூட்.
படத்தில் நிறைய காட்சிகள் சைலன்ட் ஆக நகர்கிறது. ஓரிரு இடங்களில் மட்டுமே தன் இசையால் உணர்வுகளைக் கடத்துகிறார் யுவன்.
அடிக்கடி வரும் ஒரு மனிதனின் கோபம் எப்படி அடங்கிவிடுகிறது என்பதை வித்தியாசமாய் கொடுத்திருக்கிறார்கள்.
Tags: koozhangal, ps vinothraj, yuvan shankar raja, vignesh sivan, nayanthara