லைசென்ஸ் - விமர்சனம்

05 Nov 2023

கணபதி பாலமுருகன் இயக்கத்தில், பைஜு ஜேக்கப் இசையமைப்பில், ராஜலட்சுமி செந்தில், அபி நட்சத்திரா,  ராதாரவி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார் ராஜலட்சுமி. அநியாயத்தைக் கண்டால் தட்டிக் கேட்பவர். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஒரு சிறுமிக்காகப் போரா ஆரம்பிக்கிறார். அதனால், அவருக்கு எதிர்ப்புகள் அதிகமாகிறது. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள துப்பாக்கி லைசென்ஸ் வாங்க முயற்சிக்கிறார். ஆனால், அவரது கோபமான குணத்தைப் பார்த்து அதை வழங்க மறுக்கிறார்கள். அதற்காக நீதிமன்றமும் செல்கிறார் ராஜலட்சுமி. அவருக்கு துப்பாக்கி வாங்க லைசென்ஸ் கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

நாட்டுப்புறப் பாடல்களைப் பாடும் பாடகியாக இருந்து விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தி பிரபலமானவர் ராஜலட்சுமி. இப்படம் மூலம் கதையின் நாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். ஆசிரியை கதாபாத்திரத்தில் பொருத்தமாக இருக்கிறார். இருந்தாலும் சில காட்சிகளில் ஓவராக நடித்திருக்கிறார். நடிப்பைக் கற்றுக் கொண்டால் குணச்சித்திர நடிகையாகவும் வலம் வரலாம். 

படம் முழுவதும் ராஜலட்சுமியைச் சுற்றி நகர்ந்தாலும் மற்ற கதாபாத்திரங்ளில் நடித்துள்ள ராதாரவி, அபி நட்சத்திரா, ஜீவானந்தம், கீதா கைலாசம் குறிப்பிடும்படி நடித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் பைஜு ஜேக்கப், ஒளிப்பதிவாளர் காசி விஸ்வநாதன் இயக்குனருக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்கள்.

பெண்கள் எதையும் சமாளித்து தைரியமாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை முன் வைத்திருக்கிறார் இயக்குனர். கொஞ்சம் தடுமாறினாலும் சமூக அக்கறையுடன் படத்தைக் கொடுத்திருக்கிறார்.

 

Tags: license, rajalakshmi senthil

Share via: