ஜப்பான் - விமர்சனம்
11 Nov 2023
ராஜு முருகன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், கார்த்தி, அனு இம்மானுவேல், சுனில் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
ராஜு முருகன் - கார்த்தி முதல் முறையாக இணைந்த படம் என்பதால் சமூகக் கருத்தைப் பற்றிய படமாக வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அதற்கு மாறாக ஒரு கமர்ஷியல் படமாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.
கோவையில் ஒரு பிரபல நகைக் கடையில் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்படுகிறது. அந்த இடத்தில் பிரபல கொள்ளைக்காரனான ‘ஜப்பான்’ பற்றிய தடயம் இருக்கிறது. அதனால்தான், அவன்தான் கொள்ளை அடித்திருப்பான் என காவல் துறை தனிப் படைகளை அமைத்துத் தேடுகிறது. ஒரு கட்டத்தில் தன் பெயரை வைத்து வேறு யாரோ கொள்ளை அடித்துள்ளார்கள் என்பது ஜப்பானுக்குத் தெரிய வர, அவன் யார் எனக் கண்டுபிடிக்க ஜப்பானும் தேட ஆரம்பிக்கிறான். உண்மைக் குற்றவாளி யார் என்பதை ஜப்பான் கண்டுபிடித்தானா, ஜப்பான்தன் கொள்ளைக்காரன் என நினைக்கும் காவல் துறை அவனைக் கண்டுபிடித்தார்களா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
இயக்குனர் ராஜு முருகன், ‘ஜப்பான்’ கதாபாத்திர வடிவமைப் பற்றிச் சொன்னதை வைத்து இந்தப் படத்தில் தனக்கான தீனி இருக்கிறது என கார்த்தி நடிக்க சம்மதித்திருக்கலாம். படத்தில் அவர் எந்தக் குறையையும் வைக்கவில்லை. அந்தக் கதாபாத்திரத்தில் மாறுபட்ட நடிப்பை வழங்கியிருக்கிறார். வசன உச்சரிப்பை மட்டும் எதற்காக அப்படி வைத்தார்கள் என்பது மட்டும்தான் ஆச்சரியமாக உள்ளது.
கார்த்தியின் முன்னாள் காதலியாக அனு இம்மானுவேல். ஒரு பாடலுக்கும் சில காட்சிகளுக்கும் வந்து போகிறார்.
ஜப்பான்’ கார்த்தியைக் கண்டுபிடிக்க ஓடும் தனிப்படை போலீஸ் அதிகாரிகளாக சுனில், விஜய் மில்டன். காக்கிச்சட்டை அணியாக இருவருமே அந்த காக்கிச்சட்டைக்குரிய கம்பீரத்தையும், மிடுக்கையும் கொடுத்திருக்கிறார்கள். கார்த்தியுடன் எப்போதும் உடனிருக்கும் வலதுகரமாக வாகை சந்திரசேகர். மற்ற கதாபாத்திரங்களில் இவர்கள்தான் குறிப்பிட வேண்டியவர்கள்.
ஜிவி பிரகாஷ்குமார் பின்னணி இசையில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கிறார். பாடல்களில் ஒரு பாடலையாவது ஹிட்டாக்கி இருக்கலாம்.
இடைவேளை வரை கார்த்திக்கான முக்கியத்துவம் குறைவாக உள்ளது. இடைவேளைக்குக் கொஞ்சம் முன்பாகவும், இடைவேளைக்குப் பின்பு முழுவதுமாகவும் அவர் மீதுதான் படம் நகர்கிறது. ஒரு பரபரப்பான ஆக்ஷன் படத்துக்குரிய கதை, திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் ‘ஜப்பான்’ நாட்டைப் போலவே பிரமிக்க வைத்திருக்கும்.
Tags: japan, karthi, anu emmanuel, raju murugan, gv prakashkumar