ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் - விமர்சனம்

11 Nov 2023

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா, நிமிஷா சஜயன் மற்றும் பலர் நடித்துள்ள படம்.

 

கார்த்திக் சுப்பராஜ் கடைசியாக இயக்கிய “ஜகமே தந்திரம், மகான்” படங்கள் தியேட்டர்களில் வெளியாகாமல் ஓடிடி தளங்களில் வெளியாகின. அந்த இரண்டு படங்களின் வரவேற்புக்கும் சேர்த்து இந்தப் படத்தில் ‘டபுள் எக்ஸ்’ வரவேற்பைப் பெற்றுவிட்டார்.

 

1975ம் வருடத்தில் நடக்கும் கதை. அப்பா ஆசைப்படி போலீஸ் வேலைக்குத் தேர்வாகியுள்ளார் கல்லூரியில் படிக்கும் எஸ்ஜே சூர்யா. ஆனால், சிலரைக் கொன்றதாக பொய் வழக்கில் கைதாகி சிறைக்குச் செல்கிறார். அரசியல் பின்னணி கொண்ட மதுரை ரவுடியான ராகவா லாரன்ஸைக் கொல்ல காவல் துறை ரகசிய திட்டம் ஒன்றைத் தீட்டுகிறது. அதற்காக போலீஸ் வேலைக்குத் தேர்வாக சிறையில் இருக்கும் சூர்யா அனுப்பப்படுகிறார். சினிமாவில் நடிக்கும் ஆசையில் இருக்கும் ராகவாவிடம் இயக்குனர் எனப் பொய் சொல்லி அவரிடம் செல்கிறார் சூர்யா. இருவரும் இணைந்து படம் எடுக்க ஆரம்பிக்கிறார்கள். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

 

முதல் பாதி முழுவதும் ராகவா லாரன்ஸ் பற்றிய ரவுடியிசம், அவரிடம் பொய் சொல்லி நெருங்கும் எஸ்ஜே சூர்யா என என்டர்டெயின்மென்ட் ஆக மட்டுமே படம் நகர்கிறது. ஆனால், இரண்டாது பாதியில் அப்படியே தடம் மாறி, மலை வாழ் மக்கள், இயற்கை வளம் என சமூக அக்கறைப் படமாக மாறிவிடுகிறது. 

 

மதுரை ரவுடி அல்லியன் சீசர் என்ற பெயரில் அதகளம் பண்ணியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். அவரது அதிரடியான ரவுடியிசம், அவரது தோற்றம், அவரது கதாபாத்திரம் அனைத்துமே ரசிக்க வைக்கிறது. ‘காஞ்சனா’ படங்களில் அவர் காட்டும் என்டர்டெயின்மென்ட்டை இந்தப் படத்திலும் காட்டியிருக்கிறார். அடுத்த பாகங்களிலும் அவரே நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக மாறி வருகிறார் எஸ்ஜே சூர்யா. ஹீரோ, வில்லன், குணச்சித்திரம், காமெடி என எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் அவருடைய முத்திரையைத் தனியாகப் பதித்து விடுகிறார். இந்தப் படத்தில் ஆர்பாட்டமில்லாத அழுத்தமான அமைதியான நடிப்பில் அசத்தியுள்ளார்.

 

ராகவா லாரன்ஸ் மனைவியாக நிமிஷா சஜயன். ஊரே பயந்து நடுங்கும் ராகவாவை அவர் மிரட்டுவது தனி ரகம். 

 

ராகவாவைக் கொல்ல திட்டம் போடும் டிஎஸ்பி ஆக நவீன் சந்திரா. சூர்யாவின் நண்பராக சத்யன். அமைச்சராக இளவரசு. சூர்யாவின் காதலியாக சஞ்சனா நடராஜன் என மற்ற கதாபாத்திர நடிகர்கள் சில காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார்கள்.

 

சந்தோஷ் நாராயணன் இசை படத்திற்குப் பெரும் பலம். அவருக்கான வாய்ப்புகளை படத்தில் பல இடங்களில் வைத்திருக்கிறார் இயக்குனர். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு 1970களை கண்முன் நிறுத்துகிறது. கலை இயக்குனர்கள் பாலசுப்ரமணியன், குமார் கங்கப்பன் குறிப்பிட வேண்டியவர்கள். 

 

படத்தின் நீளம் மிக அதிகம். இன்னும் சில லாஜிக்கலான கேள்விகள் எழுவது படத்தில் உள்ள குறைகள். மற்றபடி வேறு ஒரு ‘ரகமான’ சினிமா இந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.

Tags: jigarthanda double x, karthik subbaraj, raghawa lawrence, sj surya

Share via: