ஜோ - விமர்சனம்

25 Nov 2023

ஹரிஹரன் ராம் இயக்கத்தில், ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், பவ்யா ட்ரிகா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

கல்லூரிக் காலத்திற்கு நம்மை மீண்டும் அழைத்துக் கொண்டு போனது போன்ற உணர்வைத் தந்திருக்கிறார் இயக்குனர். நம்முடைய காதல் நிறைவேறாமல் போனாலும் நம்மை நேசிப்பவர்களின் காதல் எப்படியாவது கைகூடும் எனச் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

இஞ்சினியரிங் கல்லூரியில் படிக்கும் ரியோ ராஜ், கேரளாவைச் சேர்ந்த மாணவியான மாளவிகா மனோஜ் மீது பார்த்ததும் காதல் கொள்கிறார். சில தயக்கங்களுக்குப் பிறகு இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். படிப்பை முடித்துவிட்டுப் போன பின்பு இருவருக்கும் இடையே மோதலும் வருகிறது. அது உச்சகட்டத்தை அடைய ரியோ மீது கோபம் கொண்டு பிரிகிறார் மாளவிகா. அவருக்கு வேறு இடத்தில் திருமணம் நடத்த பெற்றோர்கள் முடிவு செய்ய தற்கொலை செய்து கொள்கிறார் மாளவிகா. காதலியின் மரணத்தால் தடுமாறி நிற்கும் ரியோவை எப்படியோ மீட்டு கொண்டு வருகிறார்கள். அதன்பின் அவருக்கும் பவ்யா ட்ரிக்காவுக்கும் திருமணம் நடக்கிறது. ஆனால், பவ்யா, ரியோவைப் பார்த்தாலே கோபம் கொள்கிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பது படத்தின் மீதிக் கதை.

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்து வெளிவந்த ‘96’ படத்திற்குப் பிறகு காதலால் நம்மை கட்டிப் போட முயற்சித்திருக்கிறார்கள் இப்படக் குழுவினர். ரியோ ராஜ் காதலிப்பதிலும், காதல் தோல்வியில் தவிப்பதிலும், பின் மனைவி மதிக்கவில்லை என்றாலும் வருத்தப்படாமலும் என ஒரே படத்தில் பல நிலைகளைக் கடக்கும் ஒரு கதாபாத்திரத்தில் இயல்பாய் நடித்திருக்கிறார்.

மாளவிகா மனோஜ் அவரது கதாபாத்திரத்தில் அவ்வளவு யதார்த்தமாய் நடித்து நம்மைக் கவர்கிறார். தமிழ் சினிமாவில் சீக்கிரமே நல்ல இடத்தைப் பிடிக்க வாழ்த்துகள். ரியோவின் மனைவியாக பவ்யா ட்ரிகா, போகப் போக அவரது கதாபாத்திரத்தில் தனித்துத் தெரிய ஆரம்பிக்கிறார்.

காதல் படம் என்றால் கதாநாயகனுக்கு நண்பர்கள் இல்லாமலா, இந்தப் படத்திலும் காதலுக்கு உதவி செய்யும் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.

சித்து குமார் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு மிகவும் பக்கபலமாய் அமைந்துள்ளது.

இம்மாதிரியான சிறப்பான படங்களை மக்களிடம் அதிகமாகப் புரமோஷன் செய்து கொண்டு போக வேண்டும். அதை இப்படக்குழுவினர் சரியாகச் செய்யவில்லை என்பது வருத்தமே. சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட வேண்டிய ஒரு காதல் படம், கவனிக்கப்படாமல் போய்விடக் கூடாது.

 

Tags: joe, hariharan ram, rio raj, malavika manoj

Share via: