சில நொடிகளில் - விமர்சனம்

25 Nov 2023

வினய் பரத்வாஜ் இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி, யாஷிகா ஆனந்த், ‘புன்னகை பூ’ கீதா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

முழு படமும் லண்டனில், ஏறக்குறைய ஒரே வீட்டில் நடக்கும் ஒரு த்ரில்லர் கதை. லண்டனில் ஒப்பனை மற்றும் அழகு சிகிச்சை டாக்டர் ஆக பிரபலமாக இருப்பவர் ரிச்சர்ட் ரிஷி. திருமணமாகி மனைவி புன்னகை பூ கீதாவுடன் மகிழ்ச்சியாகவே இருக்கிறார். அவருக்கும் மாடலிங் பெண்ணான யாஷிகா ஆனந்த்துக்கும் இடையே தொடர்பு ஏற்படுகிறது. ஒரு இரவில் ரிச்சர்ட்டும், யாஷிகாவும் வீட்டில் தனிமையில் இருக்கும் போது யாஷிகா திடீரென இறந்துவிடுகிறார். பயத்தில் அவரது உடலை எடுத்துக் கொண்டு போய் புதைக்கிறார் ரிச்சர்ட். ஆனால், பத்திரிகையாளர் என்ற பெயரில் ஒரு பெண் வந்து ரிச்சர்ட்டை பிளாக்மெயில் செய்கிறார். அதன்பின் மனைவி கீதாவிடம் உண்மையைச் சொல்கிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கள்ளக் காதலால் வரும் விபரீதப் பிரச்சனை, பிளாக் மெயில் என்பது தமிழ் சினிமாவில் பல படங்களில் பார்த்த ஒன்று. இந்தப் படத்தை முழுவதுமாக லண்டனில் எடுத்ததைத் தவிர வித்தியாசமாக ஒன்றுமில்லை. செய்யாத தப்புக்காக தடுமாறும் கதாநாயகனை கடைசியில் தப்பு மேல் தப்பு செய்ய வைப்பது ஏன் எனத் தெரியவில்லை. ஆனாலும், கிளைமாக்சில் வரும் டிவிஸ்ட்கள் அனைத்துமே எதிர்பாராதவை.

ரிச்சர்ட் ரிஷி, யாஷிகா ஆனந்த், புன்னகை பூ கீதா ஆகிய மூவரைச் சுற்றியேதான் முழு படமும் நகர்கிறது. மூவருமே அவரவர் கதாபாத்திரங்களில் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள். கணவன், மனைவி இடையே இருக்கும் சென்டிமென்ட்டை வைத்து மனைவியிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள நினைக்கிறார் ரிச்சர்ட். கணவன் தவறு செய்தாலும் அதை கொஞ்ச நேரம் கோபப்பட்டு சண்டை போட்டுவிட்டு, பின் அவரைக் காப்பாற்றவே நினைக்கிறார். யாஷிகா கொஞ்ச நேரமே வந்தாலும் கவர்ச்சியில் தாராளமாய் நடித்திருக்கிறார்.

அழகான லண்டனைக் காட்டுவார்கள் என நினைத்தால் லண்டன் இருட்டைத்தான் அதிகம் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். 

கிளைமாக்ஸ் காட்சிகளில் இருக்கும் பரபரப்பை ஆரம்பம் முதல் வைத்திருந்தால் படத்தின் மொத்த நொடிகளையும் ரசித்திருக்கலாம்.

 

Tags: sila nodigalil

Share via: