ரத்தம் - விமர்சனம்
06 Oct 2023
சிஎஸ் அமுதன் இயக்கத்தில், கண்ணன் நாராயணன் இசையமைப்பில், விஜய் ஆண்டனி, நந்திதா ஸ்வேதா, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
இதற்கு முன்பு இரண்டு பாகங்களில் வெளியான ‘தமிழ்ப் படம்’ இயக்கிய அமுதன் முதல் முறையாக க்ரைம் திரில்லர் பக்கம் சென்றிருக்கிறார். காமெடி மட்டுமல்ல க்ரைமும் அவருக்கு நன்றாகவே வந்துள்ளது.
வானம் என்ற பத்திரிகைய நடத்தி வருபவர் நிழல்கள் ரவி. அவரது மகனை திடீரென ஒரு நடிகரின் ரசிகன் குத்திக் கொலை செய்து விடுகிறான். மகனை இழந்த சோகத்தில் இருக்கும் நிழல்கள் ரவி, தனது பத்திரிகையை நிர்வகிக்க விஜய் ஆண்டனியை வற்புறுத்தி வரவழைக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு மனைவியி இழந்ததால் இந்த பத்திரிகை வேலையே வேண்டாமென ஒதுங்கியவர் விஜய் ஆண்டனி. மிகவும் பிரபலமான, திறமையான இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸ்ட் அவர். ‘வானம்’ பத்திரிகைக்கு வரும் விஜய் ஆண்டனி அந்தக் கொலைக்கான பின்னணியை ஆராயும் போது சில அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வருகிறது. அவை என்ன, கொலையாளி யார் என்பதை அவர் கண்டுபிடித்தாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஒரு பத்திரிகை அலுவலகத்தை நம் கண்முன் நேரடியாகவே கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர். அதற்காக ஒளிப்பதிவாளரும், கலை இயக்குனரும் அவருக்கு சரியாகக் கை கொடுத்திருக்கிறார்கள். பத்திரிகை வேலை என்பது சாதாரண வேலையல்ல அதில் எவ்வளவு சிரமமான விஷயங்கள் இருக்கிறது என்பதை சாமானியனுக்கும் புரிய வைத்திருக்கிறார்கள்.
தனக்குப் பொருத்தமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பதை வழக்கமாக வைத்திருப்பவர் விஜய் ஆண்டனி. இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரத்தில் செட்டிலாகி நடித்திருக்கிறார். அவருக்குள் இருக்கும் சோகம் நமக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
க்ரைம் எடிட்டர் ஆக நந்திதா ஸ்வேதா. பொருத்தமான தேர்வு, பொருத்தமான நடிப்பு. மகிமா நம்பியார் கதாபாத்திரத்தில் வைத்துள்ள சஸ்பென்ஸ் எதிர்பாராதது. ரம்யா நம்பீசனுக்கு அதிக வேலையில்லை.
கோபி அமர்நாத் ஒளிப்பதிவும், கண்ணன் நாராயணன் பின்னணி இசையும் ரத்தத்துடன் கலந்துவிட்டது.
ஒரு க்ரைம் திரில்லர், அதுவும் இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லர் என்றால் திரைக்கதையில் ஒரு பரபரப்பு இருக்க வேண்டும். அப்போதுதான் படம் விறுவிறுப்பாக நகரும். அதைப் புரிந்து கொண்டு படத்தில் சேர்த்திருக்கிறார் இயக்குனர். கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் கொஞ்சம் சினிமாத்தனம் எட்டிப் பார்த்துவிடுகிறது.
Tags: Raththam, Vijay Antony, Mahima Nambiar, Nandita Swetha, Ramya Nambeesan, CS Amudhan, Kannan Narayaan