இறுகப்பற்று - விமர்சனம்

06 Oct 2023

யுவராஜ் தயாளன் இயக்கத்தில், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில், விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா நாத், அபர்ணதி, சானியா ஐயப்பன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

கணவன், மனைவி உறவு என்பது எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்ற உளவியல் ரீதியிலான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். விவாகரத்து என்பது அதிகமாகி வரும் இந்தக் காலத்தில் திருமணமானவர்களும், ஆகப் போகிறவர்களும் இந்தப் படத்தைப் பார்த்தால் எப்படி விட்டுக் கொடுத்து வாழலாம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத் கணவன், மனைவி. மனைவியுடன் சண்டை போட்டு இயல்பான வாழ்க்கை வாழ வேண்டும் என நினைப்பவர் விக்ரம் பிரபு. ஆனால், சைக்யாட்ரிஸ்ட் ஆக இருப்பதால் அப்படியான ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுக்காமல் இருக்கிறார் ஷ்ரத்தா. விதார்த், அபர்ணதி நடுத்தரக் குடும்பத்து கணவன், மனைவி. அபர்ணதி குண்டாக இருப்பதால் அவரை விட்டுப் பிரிய வேண்டும் என நினைக்கிறார் அபர்ணதி. ஸ்ரீ, சானியா காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால், திருமணத்திற்குப் பிறகு அடிக்கடி சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இவர்கள் கவுன்சிலிங்கிற்காக ஷ்ரத்தாவிடம் செல்கிறார்கள். இவர்களை மாற்ற முயற்சிக்கும் வேளையில் விக்ரம் பிரபுவுக்கும், ஷ்ரத்தாவுக்குமே சண்டை வந்து பேசாமல் இருக்கிறார்கள். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இல்லற வாழ்க்கையை நன்றாகப் புரிந்து கொண்டு வாழும் தம்பதியராக விக்ரம் பிரபு, ஷ்ரத்தா. இருந்தாலும் ஏதோ ஒரு காரணத்திற்காக சண்டை போட்டு வழக்கமான ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர் விக்ரம் பிரபு. அவரிடம் சண்டையே போடக் கூடாதென ஒரு ‘மொபைல் ஆப்’ உதவியால் பல விஷயங்களைச் செய்கிறார் ஷ்ரத்தா. ஒரு கட்டத்தில் அதுவே அவருக்கு எதிரியாகிவிடுகிறது. ஒரு அப்பர் மிடில் கிளாஸ் தம்பதிகளாக ரொம்பவும் மெச்சூர்டாக நடித்திருக்கிறார்கள் இருவரும்.

ஒரு மிடில் கிளாஸ் தம்பதிகளாக விதார்த், அபர்ணதி. திருமணத்திற்குப் பின் மனைவி அபர்ணதி குண்டாகிவிட்டார் என்ற அற்ப காரணத்திற்காகவே அவரை விவாகரத்து செய்ய வேண்டுமெனத் துடிக்கிறார் விதார்த். இருந்தாலும் கணவனை சமாளித்து வாழ்க்கையைத் தள்ளிக் கொண்டு போகிறார் அபர்ணதி. விவாரகத்து கேட்க அழுத்தமான காரணம் இல்லை என்றாலும் இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இளம் காதல் திருமண ஜோடிகளாக ஸ்ரீ, சானியா ஐயப்பன். எப்போதும் எரிச்சலுடன் ஸ்ரீ, எப்போதும் சோகத்துடன் சானியா. காதலித்துத் திருமணம் செய்து கொண்டாலும் திருமணத்திற்குப் பின் எப்படியெல்லாம் சண்டை வரும் என்பதற்கு இவர்களது கதாபாத்திரங்கள் உதாரணம். இருவருமே அவரவர் கதாபாத்திரங்களில் இயல்பாய் நடித்திருக்கிறார்கள்.

ஜஸ்டின் பிரபாகரன் பின்னணி இசை, கோகுல் பினாய் ஒளிப்பதிவு பாராட்டப்பட வேண்டியவை.

படம் முழுவதும் சீரியஸ் ஆக நகர்வதுதான் சிறு குறை என்று சொல்லக் கூடிய ஒன்று. முழு எமோஷனல் படமாகவே ஆரம்பம் முதல் கடைசி வரை நகர்கிறது.

Tags: irugapatru, yuvaraj dhayalan, vikram prabhu, shradha srinath, vidharth, abarnathi, sree, saniya iyappan

Share via: