வாழ்வு தொடங்குமிடம் நீதானே - விமர்சனம்
30 Sep 2023
ஜெயராஜ் பழனி இயக்கத்தில், தர்ஷன் குமார் இசையமைப்பில், அர்ஷத், ஸ்ருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார் மற்றும் பலர் நடித்து ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள படம் இது.
தமிழ் சினிமாவில் பாலினம் சம்பந்தப்பட்ட படங்கள் வருவது மிகவும் அபூர்வம். திருநங்கைகள், திருநம்பியர், தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்களைப் பற்றி ஏதோ ஒரு சில காட்சிகள் மட்டுமே சில படங்களில் இடம் பெற்றதுண்டு. இந்தப் படத்தில் ‘லெஸ்பியன்’ எனப்படும் தன்பாலின ஈர்ப்பு கொண்ட இரண்டு இளம் பெண்களின் காதலைப் பற்றிச் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண் நிரஞ்சனா நெய்தியார். மிகவும் கட்டுப்பாடுடன் வளர்க்கப்பட்டவர். அவருக்குத் திடீரென திருமணம் செய்து வைக்க அவரது அப்பா ஏற்பாடு செய்கிறார். திருமணத்திற்கு முன்தின இரவில் வீட்டை விட்டு வெளியேறுகிறார். அதற்கு அவரைத் திருமணம் செய்து கொள்ள இருக்கும் இளைஞரே உதவுகிறார். நிரஞ்சனா வீட்டை விட்டு வெளியேறுவதற்குக் காரணம் அவர் மற்றொரு இளம் பெண்ணான ஸ்ருதி பெரியசாமி மீது வைத்துள்ள காதல். சில மாதங்களுக்கு முன்பு ஒரு வேலையாக நிரஞ்சனா வீட்டிற்கு வந்து தங்குகிறார் ஸ்ருதி. இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் ஈர்ப்பு கொண்டு காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இது பற்றி நிரஞ்சனாவின் அப்பாவிற்கும் தெரிய வந்ததும் தான் மகளுக்குத் திடீரென திருமண ஏற்பாடுகளை செய்கிறார். வீட்டை விட்டு வெளியேறிய நிரஞ்சனா அவரது ஈர்ப்புத் தோழியுடன் இணைந்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
பொதுவாக முஸ்லிம் குடும்பத்தில் வேறு மதத்தைச் சேர்ந்தவர்களைக் காதலிப்பதையே எதிர்க்கும் பண்பாடு கொண்டவர்கள். அப்படிப்பட்ட மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை தன்பாலின ஈர்ப்பாளராகக் காட்ட வேண்டிய அவசியமென்ன என்று தெரியவில்லை. இப்படி சர்ச்சைக்குரிய முஸ்லிம் கதாபாத்திரத்தை வைத்தால், அது சர்ச்சையாக படம் பற்றி பரபரப்பாகப் பேசுவார்கள் என்று தயாரிப்பாளரும், இயக்குனரும் நினைத்திருப்பார்களோ என்றுதான் தோன்றுகிறது.
முஸ்லிம் பெண்ணாக நிரஞ்சனா நெய்தியார், கொஞ்சம் பாயிஷ் பெண்ணாக ஸ்ருதி பெரியசாமி அவர்கள் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடிக்க முயற்சித்திருக்கிறார்கள். இருவரும் அவர்களது ஈர்ப்பிலும், காதலிலும் தீவிரமாக இருக்கிறார்கள் என்பதை வெளிக்காட்ட இருவருக்கும் முத்தக் காட்சியையும் வைத்திருக்கிறார் இயக்குனர். ஓடிடியில் வெளியாகவே இந்தப் படம் பற்றி பேச்சு அதிகமில்லை. தியேட்டர்களில் வெளியாகி இருந்தாலும் விவகாரம் வேறுவிதமாக மாறியிருக்கலாம்.
தன் பள்ளித் தோழியான நிரஞ்சனா மீது காதல் வைத்திருந்தாலும், ஒரு கட்டத்தில் அவரது வேறுவிதமான காதலையும் பக்குவத்துடன் ஏற்றுக் கொண்டு உதவி செய்யும் கதாபாத்திரத்தில் அர்ஷத். நிரஞ்சனாவின் அப்பாவாக நடித்திருப்பவரும் யதார்த்தமாக நடித்திருக்கிறார்.
டெக்னிக்கலாக படத்தின் தரத்தை இன்னும் உயர்த்தியிருக்கலாம். ஒளிப்பதிவு மிகவும் டல்லடிக்கிறது.
கிளைமாக்சை இப்படி முடித்தால்தான் எந்த சர்ச்சைகளிலும் சிக்க வாய்ப்பில்லை என படத்தை முடித்திருக்கிறார்கள். இப்படி ஒரு கதையை யோசித்தவர்கள் தைரியமான கிளைமாக்சையும் யோசித்திருந்தால் பாராட்டியிருக்கலாம்.
Tags: Vazhvu Thodangum Idam Neethane