சந்திரமுகி 2 - விமர்சனம்
29 Sep 2023
பி.வாசு இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், ராகவா லாரன்ஸ், கங்கனா ரணவத், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், வடிவேலு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
2005ல் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகமாக இப்படத்தை எடுத்திருக்கிறார்கள். முதல் பாகத்தில் இருந்த வடிவேலுவின் முருகேசன் கதாபாத்திரம் மட்டுமே இந்தப் படத்தில் மீண்டும் வருகிறது. மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் புதிய கதாபாத்திரங்கள்.
கோடீஸ்வரியான ராதிகா குடும்பத்திற்குச் சொந்தமான மில் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு பெரிதும் பாதிப்படைகிறது. அதனால், ராதிகா குடும்பத்தினரை குல தெய்வ கோயிலுக்குச் சென்று வழிபடச் சொல்கிறார் அவர்களது குருஜி. காதலனுடன் ஓடிப் போன ராதிகாவின் மூத்த மகளின் குழந்தைகளும் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறார். ராதிகாவின் மகளும், மருமகனும் விபத்தில் இறந்து போனதால், அவர்களது குழந்தைகளை கார்டியனாக இருந்து பார்த்துக் கொள்கிறார் ராகவா லாரன்ஸ். அனைவரும் குலதெய்வம் உள்ள கிராமத்திற்குச் செல்கிறார்கள். அங்கு வடிவேலுவுக்குச் சொந்தமான பங்களாவில் தங்குகிறார்கள். அந்த பங்களாவில் சந்திரமுகியின் ஆவி தனது அமர்க்களத்தை ஆரம்பிக்கிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
முதல் பாகத்தைப் போலவே இந்தப் படத்திலும் நிறைய பேரை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் பி.வாசு. முடிந்த வரையில் அனைவருக்குமே முக்கியத்துவமான காட்சிகளை வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார். இருப்பினும் ராகவா, கங்கனா, லட்சுமி மேனன், வடிவேலு ஆகியோர் மற்றவர்களை விடவும் அவர்களது நடிப்பில் நம்மைக் கவர்ந்துவிடுகிறார்கள்.
குறிப்பாக பிளாஷ்பேக்கில் வரும் சரித்திரக் கதையில் ராகவா, கங்கனா இடையிலான போட்டிதான் இந்தப் படத்தின் ஹைலைட். தெலுங்கு பேசி நடித்தாலும் கங்கனா நம்மை அதிகம் கவர்கிறார். அவருக்கான ஆடை, மேக்கப் அவரது அழகை இன்னும் அழகாக்குகிறது. செங்கோட்டையனாக அதிரடி காட்டியிருக்கிறார் ராகவா.
ராகவாவுக்கு ஜோடியாக மகிமா நம்பியார். ஜோடி வேண்டும் என்பதற்காகவும், டூயட் பாடல் ஒன்று வேண்டுமென்பதற்காகவும் அவர் கதாபாத்திரத்தை சேர்த்திருக்கிறார்கள். ராதிகா, சுரேஷ் மேனன், சிருஷ்டி டாங்கே, சுபிக்ஷா, ரவி மரியா, விக்னேஷ் ஆகியோர் ராதிகா குடும்பத்தினராக நடித்துள்ளார்கள்.
ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி தெலுங்குப் பாடலில் ரசிக்க வைக்கிறார். மற்ற பாடல்களை இன்னும் ஹிட்டாக்கியிருக்கலாம்.
இடைவேளை வரை நகைச்சுவைக் காட்சிகளை இன்னும் அதிகப்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதற்கான ‘ஸ்கோப்’ இருந்தும் கவனம் செலுத்தாமல் விட்டுள்ளார்கள்.
Tags: Chandramukhi 2, raghava lawrence, mahima nambiar, kangana ranawat, vadivelu, keeravani