ஆர் யூ ஓகே பேபி - விமர்சனம்

23 Sep 2023

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில், சமுத்திரக்கனி, அபிராமி, முல்லையரசி, அசோக் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

குழந்தை தத்தெடுப்பு பற்றிய சில விஷயங்களை மக்களும் தெரிந்து கொள்ளும் விதமாக எடுக்கப்பட்டுள்ள படம். தத்தெடுத்த தம்பதிகளுக்கும், தத்து கொடுத்த தாயாருக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டம்தான் படத்தின் கதை. இம்மாதிரியான யதார்த்தமான படங்கள் நம் தமிழிலும் வருவது ஆரோக்கியமான விஷயம்.

கேரளாவில் வசிக்கும் நடுத்தர வயது தம்பதியினர் சமுத்திரக்கனி, அபிராமி. அவர்கள் இருவருக்கும் குழந்தை இல்லாததால் சென்னையிலிருந்து ஒரு குழந்தையை தத்தெடுக்கின்றனர். ஒரு வருட காலமாக அந்த குழந்தையை சீராட்டி, தாலாட்டி அன்பு செலுத்தியவர்களுக்கு திடீர் அதிர்ச்சி வருகிறது. அந்தக் குழந்தையை தத்து கொடுத்த தாய் முல்லையரசி தன் குழந்தை தனக்கு மீண்டும் வேண்டுமென டிவி நிகழ்ச்சி மூலம் பிரச்சினையை ஆரம்பிக்கிறார். குழந்தைகள் நல கமிட்டி மூலம் அந்தக் குழந்தை சமுத்திரக்கனி, அபிராமியிடமிருந்து பிரிக்கப்பட்டு குழந்தைகள் நல இல்லத்தில் ஒப்படைக்கப்படுகிறது. இதன்பின் என்ன நடக்கிறது என்பது உணர்வுபூர்வமான முடிவாக அமைகிறது.

ஒவ்வொரு படத்திலும் கொஞ்சம் மிகையாக நடிக்கும் சமுத்திரக்கனி இந்தப் படத்தில் கதாபாத்திற்குத் தேவையான மிதமான நடிப்பை அளவாக வெளிப்படுத்தி ஆச்சரியப்பட வைக்கிறார். அவரது மனைவியாக அபிராமி, பெறாத குழந்தை மீது அவ்வளவு பாசம் வைக்கும் அம்மாவாய் அழ வைக்கிறார். பெற்ற குழந்தையை வளர்க்க வழியில்லாமல் தத்து கொடுத்துவிட்டு பின் பாசத்தால் துடிக்கும் இளம் தாயாக முல்லையரசி வியக்க வைக்கிறார். இப்படி சரியான நடிகர்களைத் தேர்வு செய்து படத்தையும் அழுத்தமாய் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் லட்சுமி.

மிஷ்கின், அசோக், வினோதினி, அனுபமா, ஆடுகளம் நரேன் ஆகியோர் சில காட்சிகளில் வந்தாலும் அவர்களது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

‘சொல்லாததும் உண்மை’ என்ற டிவி நிகழ்ச்சி மூலம் ஏழை மக்களின் குடும்ப வாழ்க்கையை எப்படியெல்லாம் டிவி நிறுவனத்தினர் படம் போட்டுக் காட்டுகிறார்கள் என்பதை ரசிகர்களுக்குப் புரிய வைத்து, தொகுப்பாளராகவும் நடித்திருக்கிறார் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன்.

உணர்வுபூர்வமான ஒரு படத்திற்கு இளையராஜா இசை என்றால் கேட்கவா வேண்டும். காட்சிகளின் தாக்கத்தை அவரது இசை இன்னும் ஒரு படி மேலே உயர்த்துகிறது.

மக்களுக்குத் தேவையானவற்றைக் கொடுக்கும் இம்மாதிரியான படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தால் சிறப்பு.


 

Tags: are you ok baby, lakshmy ramakrishnan, samuthirakani, abirami, ilaiyaraja

Share via: