டீமன் - விமர்சனம்

23 Sep 2023

ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில், ரோனி ரபேல் இசையமைப்பில், சச்சின், அபர்ணதி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

இயக்குனர் ரமேஷ் புதுவிதமான பேய்க் கதையை எடுத்துக் கொண்டிருந்தாலும், திரைக்கதையில் இன்னும் சில மாற்றங்களைச் செய்து கொடுத்திருந்தால் இந்த ‘டீமன்’ நம்மை இன்னும் மிரட்டியிருக்கும். 

படம் ஒன்றை இயக்கும் வாய்ப்பு சச்சினுக்குக் கிடைக்கிறது. தனியாக தங்கியிருந்து படத்திற்கான வேலைகளைப் பார்ப்பதற்காக பிளாட் ஒன்றிற்கு குடி போகிறார். தூங்கும் போது அவருக்கு திடீரென பேய் கனவுகள் வருகிறது. முழித்து கண்ணாடியில் பார்த்தால் அவருடைய உருவம் வயதான கிழவனாகத் தெரிகிறது. நாளுக்கு நாள் அது அதிகமாகிறது. ஒரு கட்டத்தில்தான் அந்த பிளாட்டில் சில தற்கொலைகளும், கொலைகளும் அடுத்தடுத்து நடந்தது அவருக்குத் தெரிய வருகிறது. இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் ஆரம்பத்தில் இது ஒரு சினிமா இயக்குனரின் போராட்டம் பற்றிய படமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு வருகிறது. அதன்பின் நாயகி அபர்ணதியைப் பார்த்ததும் ஒரு காதல் கதையாக இருக்குமோ என்று எண்ண வைக்கிறது. ஆனால், திடீரென இது பேய்ப் படம் என திருப்பத்தைக் கொடுக்கிறார் இயக்குனர்.

படத்தின் கதாநாயகனாக சச்சின். இயக்குனர் கதாபாத்திரத்தில் பொருத்தமாய் நடித்திருக்கிறார். அபர்ணதி வீட்டிற்குச் சென்றே பெண் கேட்பது சுவாரசியம். ரொமான்சில் கலக்கப் போகிறார் என எதிர்பார்த்தால் ஹாரர் பக்கம் அவரது கதாபாத்திரத்தைத் திருப்பிவிட்டார் இயக்குனர். இருப்பினும் அதிலும் பயந்து நடுங்கி நடித்திருக்கிறார்.

சச்சின் தான் படம் முழுவதையும் ஆக்கிரமித்திருக்கிறார்கள். கதாநாயகி அபர்ணதி உட்பட மற்றவர்கள் வந்து போகிறார்கள் 

பேய்ப் படங்களில் பயப்படுவதற்குரிய இசையைத் தந்திருக்கிறார் இசையமைப்பாளர் ரோனி ரபேல். ஒரே பிளாட்டில் விதவிதமான கோணங்களைக் கொடுத்து தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆனந்தகுமார்.

பிளாஷ்பேக்கில் ஒரு திகில் கதையைச் சொன்னது போல மற்ற காட்சிகளையும் சொல்லியிருக்கலாம்.

Tags: demon ramesh palanivel, sachin, aparnathi

Share via: