கடத்தல் - விமர்சனம்
23 Sep 2023
சலங்கை துரை இயக்கத்தில், ஸ்ரீகாந்த் இசையமைப்பில், தாமோதர், விதிஷா, ரியா மற்றும் பலர் நடித்துள்ள படம்.
பதநீர் இறக்கும் தொழில் செய்பவர் தாமோதர். ஆனால், அவருடைய நண்பர்கள் கூலிக்காக கொலை செய்பவர்கள். அவர்களுடன் சேரக் கூடாது என தாமோதர் அம்மா சுதா மகனிடம் கண்டிப்பாகக் கூறுகிறார். அம்மாவின் பேச்சைக் கேட்டு மதுரைக்குச் செல்கிறார் தாமோதர். அங்கும் வரும் அவரது நண்பர்கள் பிரபல ரவுடி ஒருவரின் தம்பியைக் கொலை செய்துவிட்டு தப்பிவிடுகிறார்கள். தாமோதரைப் பிடிக்க வரும் கூட்டத்தில் வேறொரு ரவுடியின் தம்பியும் இருக்க அவரைத் தெரியாமல் கொலை செய்துவிடுகிறார் தாமோதர். பின் அங்கிருந்து தப்பித்து ஓசூர் செல்கிறார். அங்கு யாராலோ கடத்தப்பட்ட குழந்தை ஒன்றை மீட்கிறார். அக்குழந்தையை எப்படியாவது அவனது பெற்றோரிடம் சேர்க்க முயற்சிக்கிறார் இதன் பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
அறிமுக நடிகர் தாமோதர் ஆக்ஷன் காட்சிகளில் எந்தத் தயக்கமும் இல்லாமல் நடித்திருக்கிறார். அம்மா மீதான பாசமான காட்சிகளிலும் சமாளித்து விடுகிறார். காதல் காட்சிகள், டூயட் பாடுவதில் தடுமாறுகிறார்.
தாமோதரைக் காதலிக்கும் கதாநாயகிகளாக விதிஷா, ரியா இருவருமே அவரவர் கதாபாத்திரங்களில் குறிப்பிடும்படி நடித்திருக்கிறார்கள். இருவருக்கும் இன்னும் கூட காட்சிகளைக் கொடுத்திருக்கலாம்.
அம்மா கதாபாத்திரத்தில் சென்டிமென்ட்டில் உருக வைத்திருக்கிறார் சுதா. சிங்கம்புலி காமெடி செய்ய முயற்சித்து பொறுமையை சோதிக்கிறார். ரவுடிகளாக நடித்திருக்கும் வில்லன்கள், அவர்களது அடியாட்கள் பரபரப்பாக நடித்திருக்கிறார்கள்.
குழந்தை கடத்தல், கூலிக்குக் கொலை செய்யும் ஆட்கள், அவர்களை ஏவிவிடும் ரவுடி, எதிர்பாராமல் கொலை செய்து மாட்டிக் கெள்ளும் கதாநாயகன் என சில பல கதைகளை இணைத்து ஒரு ஆக்ஷன் படமாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர்.
Tags: kadathal, salangai durai