மார்க் ஆண்டனி - விமர்சனம்
16 Sep 2023
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையில், விஷால், எஸ்ஜே சூர்யா, ரித்து வர்மா மற்றும் பலர் நடித்துள்ள படம்.
நண்பர்களாக இருக்கும் இரண்டு தாதாக்களுக்குள் இருக்கும் பகை, 20 வருடங்களுக்குப் பிறகும் அவர்களது வாரிசுகளும் அதே போல, என இரண்டு தாதாக்களின் சண்டையில் ‘டைம் டிராவல்’ என்ற மேஜிக்கையும் புகுத்தி ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஆதிக்.
விஷால், எஸ்ஜே சூர்யா இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் தாதாக்கள். தனது தம்பியைக் கொன்றதற்காக விஷாலைக் கொல்கிறார் அவரது எதிரியான சுனில். 20 வருடங்களுக்குப் பிறகும் தனது நண்பனைக் கொன்ற சுனிலைப் பழி வாங்கத் துடிக்கிறார் சூர்யா. இறந்து போன விஷாலின் மகனான இரண்டாவது விஷால், தன் அப்பாவை வெறுப்பவர். இந்நிலையில் அவரிடம் ஒரு டைம் மிஷின் கிடைக்கிறது. அதை வைத்து தன் அப்பா தாதாவாக இருந்தாலும் நல்லவர் என புரிந்து கொள்கிறார். அதனால், அவரது அப்பாவை டைம் மிஷின் மூலம் உயிரோடு கொண்டு வருகிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஒரே படத்தில் நாயகனும் டபுள் ஆக்ஷன், வில்லனும் டபுள் ஆக்ஷன். 1975 மற்றும் 1995 ஆகிய காலகட்டங்களில் நடக்கும் கதை. 1975களில் விஷால், எஸ்ஜே சூர்யா இருவரும் நண்பர்களாகவும், தாதாக்களாகவும் இருக்கிறார்கள். 1995ல் மகன் விஷால் கார் மெக்கானிக்காக இருக்க, மகன் எஸ்ஜே சூர்யா அப்பா போலவே தாதாவாக நினைக்கிறார்.
விஷாலுக்குப் பெரிய திருப்புமுனையை இந்தப் படம் ஏற்படுத்திக் கொடுக்கும். மகன் விஷால் அமைதியாக நடிக்க, அப்பா விஷால் அதிரடி காட்டி நடித்திருக்கிறார். எஸ்ஜே சூர்யா இளமையான தாதா, வயதான தாதா இரண்டிலுமே அவரது வழக்கமான ஸ்டைலில் தூள் கிளப்பியிருக்கிறார்.
ரித்து வர்மா கொஞ்ச நேரமே வருகிறார். செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி, ஒய்ஜி மகேந்திரன், அபிநயா மற்ற கதாபாத்திரங்களில் கொஞ்சமாக வந்தாலும் கவனிக்க வைக்கிறார்கள்.
1975 மற்றும் 1995 கால கட்டங்களை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் கலை இயக்குனர் ஆர்கே விஜயமுருகன். அந்தக் காலப் படங்களைப் பார்த்த ஞாபகத்தை தனது ஒளிப்பதிவில் கொடுத்திருக்கிறார் அபிநந்தன் ராமானுஜம். ஜிவி பிரகாஷ் பின்னணி இசை படத்திற்குப் பலம். பாடல்களில் ‘ஆண்டனிடா’ பாடல் மட்டுமே அதிரடியாக உள்ளது.
தொலைபேசியை வைத்து டைம் டிராவல் கதை என்பது புதிதாக உள்ளது. பாடல்கள்தான் படத்திற்கு வேகத் தடை. விஷால், சூர்யா இருவருக்கு மட்டுமே படத்தில் அதிக முக்கியத்துவம் உள்ளது. இவைதான் சில குறைகள்.
Tags: mark antony, adhik ravichandiran, gv prakashkumar, vishal, sj surya, ritu varma