பிதா 23:23 - விமர்சனம்
27 Jul 2024
சுகன் இயக்கத்தில், நரேஷ் இசையமைப்பில், ஆதேஷ் பாலா, சாம்ஸ், அனு கிருஷ்ணா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
ஆதேஷ் பாலா, சாம்ஸ், மாரீஸ் ராஜா ஆகியோர் தொழிலதிபரான அருள்மணியைக் கடத்துகிறார்கள். அவரிடமுள்ள 25 கோடி ரூபாய் பணத்தைக் கொண்டு வந்து கொடுத்தால் அவரை விடுவதாக அவரது மனைவிக்கு போன் செய்கிறார்கள். அதே இரவில் தனது தம்பியைத் தேடி வந்த அனுகிருஷ்ணாவை சாம்ஸ், மாரீஸ் ராஜா ஒரு ஆசையில் கடத்திக் கொண்டு வருகிறார்கள். அக்கா அனுகிருஷ்ணாவைத் தேடி வரும் பத்து வயதான தம்பி அவர்கடமிருந்துத அக்காவைக் காப்பாற்ற முயற்சிக்கிறான். 25 கோடி பணத்தைக் கொண்டு வந்து கொடுத்து தனது கணவரைக் காப்பாற்ற முயற்சிக்கிறார் அருள்மணியின் மனைவி. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஊரில் திருவிழா நடக்கும் ஒரு நாள் இரவில் மட்டும் நடக்கும் கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற யூகிக்க முடியாதபடி படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் சுகன். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அடுத்தடுத்த திருப்பங்களைத் தந்திருக்கிறார்.
படத்தல் செய்யும் சிறு கூட்டத்தின் தலைவனாக ஆதேஷ் பாலா நடித்திருக்கிறார். வில்லத்தனமான நடிப்புதான் என்றாலும் கொஞ்சம் ஓவராகவே நடித்துத் தள்ளுகிறார். அவரது உதவியாளர்களாக சாம்ஸ், மாரீஸ் ராஜா ஏதோ செய்து சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார்கள்.
தம்பியைத் தேடி வந்து கடத்தல் குடும்பலிடம் சிக்கும் அப்பாவிப் பெண்ணாக அனு கிருஷ்ணா. கடத்தப்பட்ட அருள்மணிக்கு உதவி செய்யப் போய் மீண்டும் சிக்கலில் மாட்டுகிறார். அருள்மணியின் மனைவியாக ரெஹானா. அவரது கதாபாத்திரம் கடைசியில் செய்யும் செயல் அதிர்ச்சியான ஒன்று. அனுகிருஷ்ணா தம்பியாக நடித்திருக்கும் மாஸ்டர் தர்ஷியத் இயல்பாக நடித்திருக்கிறார்.
இப்படத்தை 23 மணி நேரம், 23 நிமிடங்களில் எடுத்த முடித்திருக்கிறார்கள். கோவில் திருவிழா காட்சிகளை பரபரப்பாக எடுத்திருக்கிறார்கள். வீட்டிற்குள் நடக்கும் காட்சிகள்தான் கொஞ்சம் நாடகத்தனமாக இருக்கிறது.
ஒரு படத்தை எடுக்க சில பல வருடங்கள் ஆகும் இந்தக் காலத்தில் 24 மணி நேரத்திற்குள் ஒரு படத்தை எடுத்து முடிப்பது சாதாரண விஷயமல்ல. அதனால் சில பல குறைகள் இருந்தாலும் மறந்து அந்த சாதனை முயற்சிக்காக ஒரு பாராட்டு தெரிவிக்கலாம்.
Tags: pitha