ஜமா - விமர்சனம்

03 Aug 2024

பாரி இளவழகன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், பாரி இளவழகன், அம்மு அபிராமி, சேத்தன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

தெருக் கூத்து கலைஞர்களை மையப்படுத்தி ஒரு சில படங்கள் வந்துள்ளன. இந்தப் படத்தில் தெருக் கூத்தில் பெண் வேடமிட்டு நடிக்கும் ஒருவரின் வாழ்வியலை யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறார் பாரி இளவழகன். அவரே இயக்கி, அவரே கதையின் நாயகனாக பொருத்தமாகவும் நடித்து படம் பார்த்தவர்களின் பாராட்டைப் பெறுகிறார்.

திருவண்ணாமலை மாவட்டம், பள்ளி கொண்டா பட்டு என்ற ஊரில் தெருக்கூத்து கலைஞர்கள் அடங்கிய ‘ஜமா’ ஒன்றை நடத்தி வருபவர் சேத்தன். அவரது குழுவில் பெண் வேடமிட்டு நடிப்பவர் பாரி இளவழகன். பாரியின் அப்பாவிடமிருந்து அரசியல் செய்து அந்த ஜமாவைப் பறித்தவர்தான் சேத்தன். இருந்தாலும் கூத்துக் கலை மீதுள்ள ஆர்வத்தில் சேத்தனை தனது குருவாக நினைக்கும் பாரிக்கு எப்படியாவது ஆண் வேடத்தில், அதுவும் மகாபாரத கதாபாத்திரமான அர்ஜுனன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. அந்த ஆசையை நிறைவேற்றித் தராமல் தடுக்கிறார் சேத்தன். அதனால் சொந்தமாக ஒரு ஜமா ஆரம்பிக்க வேண்டும் என முடிவெடுக்கிறார் பாரி. அதையும் தனது பலத்தால் தடுக்கிறார் சேத்தன். பாரியின் ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

சினிமாவில்தான் அரசியல் நிறைய உள்ளது. ஒருவரது வளர்ச்சியைப் பிடிக்காமல் பொறாமை குணம் கொண்ட சிலர் தடுப்பதாக செய்திகள் வரும். அவற்றில் உண்மையும் உண்டு. வளர்ச்சியைத் தடுப்பது, பொறாமைப்படுவது எல்லா துறையிலும் உண்டு. தெருக் கூத்துப் பின்னணியில் அந்த வளர்ச்சி, பொறாமை ஆகியவை எப்படி இருக்கும் என்பதை அழுத்தமாய் பதிவு செய்திருக்கிறார் பாரி.

தெருக் கூத்தில் பெண் வேடமிட்டு நடிப்பவர்களிடம் ஒரு பெண்மைத் தன்மை தானாகவே வந்துவிடும். அவர்களது பேச்சு, உடல் மொழியிலும் சிறிது மாற்றமிருக்கும். அவர்கள் எப்படி இருப்பார்களோ அதை அப்படியே தனது ‘கல்யாணம்’ கதாபாத்திரத்தில் கொண்டு வந்திருக்கிறார் பாரி. ஒரு அறிமுக நடிகர், இயக்குனரிடமிருந்து இப்படி ஒரு படைப்பா என வியக்க வைக்கிறார்.

பாரியை வளரவிடாமல் தடுக்கும் கூத்து வாத்தியாராக, ஜமாவின் உரிமையாளராக சேத்தன். என்ன ஒரு வில்லத்தனம், என தனது பார்வையாலும் நடிப்பாலும் பிரமிக்க வைக்கிறார். பாரியின் அம்மாவாக மணிமேகலை, கிராமத்துப் பாசமான தாயை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். பாரியின் அப்பாவாக பிளாஷ்பேக்கில் வந்தாலும் அந்த சிறிது நேரத்தில் தன்னைப் பற்றியும் பேச வைத்திருக்கிறார் ஸ்ரீகிருஷ்ண தயாள்.

பாரியை காதலிப்பவராக அம்மு அபிராமி. தனது அப்பா சேத்தனும், பாரியின் அப்பா கிருஷ்ணதயாளும் நண்பர்களாக இருந்த போது தனது படிப்பிற்காக பாரி செய்த உதவிக்கு மாற்றாக அவர் மீது காதல் கொள்கிறார். அம்மு மீது காதல் இருந்தாலும் அவரை விட்டு விலகியே நிற்கிறார் பாரி. படத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்திருப்பவர்களும் நம்மை அந்த கிராமத்திற்கே அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

படத்தில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது இளையராஜாவின் இசை. நடிகர் யார், இயக்குனர் யார் என்பது பற்றியெல்லாம் அவருக்குப் பிரச்சனை இல்லை. கதை என்ன, தனக்கான ஸ்கோப் என்ன என்பதை மட்டுமே பார்த்து இந்தப் படத்திற்கு ரசித்து ரசித்து இசையமைத்திருக்கிறார். கிராமத்து கதை என்றால் ஒளிப்பதிவு என்பது சினிமாத்தனமாக இருந்துவிடக் கூடாது. களத்தில், கதாபாத்திரங்களுடன் சேர்ந்து நகர வேண்டும். அப்படியான ஒளிப்பதிவைத் தந்துள்ளார் கோபால் கிருஷ்ணா.

இடைவேளை வரை தெளிவாக நகரும் திரைக்கதை, இடைவேளைக்குப் பின் கொஞ்சம் தள்ளாடுகிறது. அந்த நீண்ட காட்சிகளை இன்னும் சுருக்கியிருந்தால் படத்திற்கு நிறைவாய் இருந்திருக்கும். முதல் படம் என்பதால் சில சிறிய குறைகளை மறந்து நல்ல பதிவை, நமது கலையை நிறைவாய் பதிவு செய்த குழுவினரை மனதாரப் பாராட்டி வரவேற்போம்.

Tags: jama, pari elavazhagan, ilaiyaraaja, ammu abhirami

Share via: