போட் - விமர்சனம்

03 Aug 2024

சிம்புதேவன் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், யோகி பாபு, கௌரி கிஷன், எம்எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

இரண்டாம் உலகப் போர் நடந்த 1943ல் நடக்கும் கதை. அப்போது இங்கு ஆட்சி நடத்தி வந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக, சென்னையில் விமானம் மூலம் குண்டு மழை பொழிய ஹிட்லர் ஆதரவுப் படைகள் தாக்குதல் நடத்திய சமயம். அப்படியான தாக்குதல் நாள் ஒன்றில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மீனவரான யோகிபாபு படகில் சிலர் ஏறி நடுக்கடலுக்குச் செல்கிறார்கள். வழியில் ஆங்கிலேயே அதிகாரி ஒருவர் அவர்களது படகில் ஏற நிலைமை மாறுகிறது. பாரம் தாங்காமல் படகில் ஓட்டை விழ, படகிலிருந்து மூவர் கடலில் குதித்தால் மட்டுமே மற்றவர்களும் உயிர் பிழைக்க முடியும் என்ற நிலை. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

அந்தக் கால கதையாக இருந்தாலும், இந்தக் காலத்திலும் இருக்கும் சில அரசியலை கதாபாத்திரங்கள் மூலமும், அவர்களது வசனம் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். பூர்வகுடிகளுக்கும் பிழைக்க வந்தவர்களுக்குமான கருத்து வேறுபாடுகளையும் சொல்கிறது படம்.

மீனவரான யோகி பாபு சென்னையைச் சேர்ந்த பூர்வகுடி. அவருடைய பாட்டி லீலாவும் படகில் இருக்கிறார். அவர்களோடு மற்ற மொழி பேசும் மக்களும் பயணிக்கிறார்கள். தெலுங்கு பேசும் மதுமிதா, மலையாளம் பேசும் ஷரா, மயிலாப்பூர் பிராமணர் சின்னி ஜெயந்த், அவரது மகள் கௌரி கிஷன், ஹிந்தி பேசும் ராஜஸ்தான் காரர் சாம்ஸ், இங்குள்ள மக்களை அடிமைப்படுத்த வந்த ஆங்கிலேயர் ஜெஸ்ஸி பாக்ஸ் ஆலன் ஆகியோருக்கு இடையேயா வாக்குவாதம், சிறு மோதல் என பயணிக்கிறது படம்.

இது ஒரு நகைச்சுவைப் படம் என எதிர்பார்த்து வருபவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். ஓரிரு வசனங்களைத் தவிர சீரியசான வசனங்களைப் பேசி நடித்திருக்கிறார் யோகி பாபு. மற்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்திருக்கிறார்கள். ஒரே படகில் கதை நகர்வதால் கொஞ்சம் நாடகத்தனமாக இருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

கடலில், ஒரே ஒரு படகில் முழு கதையும் நகரும் படம். வெவ்வேறு கோணங்களில் ஒரே படகு என்பதைத் தெரியாத விதத்தில் கடலில் நாமும் சேர்ந்து பயணிக்கும் உணர்வைக் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம். உணர்வுபூர்வமான காட்சிகளில் தேவையான பின்னணி இசையைத் தந்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

கருத்து ரீதியாக சில விஷயங்களை உணர்த்தினாலும் ஒரு படமாக படகுப் பயணத்தில் இருக்கும் சுவாரசியம் தென்படவில்லை என்பது குறை.

Tags: boat, yogi babu, chimbudevan

Share via: