மழை பிடிக்காத மனிதன் - விமர்சனம்

03 Aug 2024

விஜய் மில்டன் இயக்கத்தில், அச்சு ராஜாமணி, விஜய் ஆண்டனி இசையமைப்பில், விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், சரத்குமார், சத்யராஜ், தனஞ்செயா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

ஒரு அமைச்சரின் பழி வாங்கலால் தனது மனைவியை இழக்கிறார் சீக்ரெட் ஏஜன்ட் ஆன விஜய் ஆண்டனி. அவரது மேலதிகாரியும், மனைவியின் அண்ணனுமான சரத்குமார், விஜய் ஆண்டனியைக் காப்பாற்ற அவரை இறந்ததாகச் சொல்லி அந்தமான் தீவுகளில் உள்ள ஒரு இடத்தில் தங்க வைக்கிறார். தனது அடையாளத்தை மறைத்து வாழும் விஜய் ஆண்டனிக்கும், அந்த ஊரில் வட்டிக்கு பணம் கொடுத்து தொழில் செய்யும் தனஞ்செயாவுக்கும் இடையே மோதல் வருகிறது. இதனிடையே, விஜய் ஆண்டனி பற்றி உண்மை சரத்குமாரின் மேலதிகாரியான சத்யராஜுக்கும் தெரிகிறது. இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரு கதாநாயகனுக்கும், வில்லனுக்கும் இடையேயான மோதல் என்ற பழைய பார்முலா கதையாக இருந்தாலும் அதை புதிய வடிவத்தில் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் விஜய் மில்டன். அந்தமான் கதைக்களம் என்பதால் அதுவும் புதிதாக இருக்கிறது.

விஜய் ஆண்டனியின் தோற்றத்தில் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது. இருந்தாலும் அவருடைய வழக்கமான பாணியிலிருந்து கொஞ்சமும் விலகாமல் அப்படியே நடித்திருக்கிறார். ஆக்ஷ்ன் காட்சிகளில் மட்டும் வேறு ஒரு விஜய் ஆண்டனியைப் பார்க்க முடிகிறது.

விஜய் ஆண்டனி இடையே இருப்பது காதலா, நட்பா என புரிந்து கொள்ள முடியாதபடி அவர்களுக்கு இடையே ஒரு புரிதலை வைத்திருக்கிறார் இயக்குனர். கன்னட நடிகர் டாலி தனஞ்செயா தான் படத்தின் வில்லன். தமிழ் சினிமாவில் பல படங்களில் காட்டப்படும் அதே வழக்கமான வில்லன்.

சரத்குமார் சில காட்சிகளில் வந்து போனால், சத்யராஜ் ஓரிரு காட்சிகளில் வந்து போகிறார். இவர்களிருவரும் ஏதோ ஒன்றைச் செய்யப் போகிறார்கள் என எதிர்பார்த்து காத்திருந்தால் மிஞ்சியது ஏமாற்றமே. விஜய் ஆண்டனியின் நண்பராக பிருத்வி அம்பார், அவரது அம்மாவாக சரண்யா பொன்வண்ணன். ஆண்டனிக்கு ஆதரவாக இருக்கும் இரண்டு நல் உள்ளங்கள். போலீஸ் அதிகாரியாக முரளி சர்மா, கடைசியில் அவரும் வில்லனுடன் சேர்ந்து கொள்கிறார்.

விஜய் ஆண்டனி, அச்சு ராஜாமணி இருவரும் இசையமைத்திருக்கிறார்கள். அந்தமான் தீவுகளை தமிழ் சினிமாவில் நீண்ட காலத்திற்குப் பிறகு பதிவு செய்திருக்கிறார் விஜய் மில்டன்.

‘ரகசிய உளவாளிகள்’ என்று சொல்லப்படும் சீக்ரெட் ஏஜன்ட் கதை என ஆர்வத்துடன் அமர்ந்தால் ‘லோக்கல் தாதா’ கதையாக படம் அமைந்திருப்பது எதிர்பாராதது.

Tags: mazhai pidikkatha manithan, vijay antony, vijay milton

Share via: