பார்க் - விமர்சனம்
08 Aug 2024
முருகன் இயக்கத்தில், அமரா இசையமைப்பில், தமன்குமார், ஸ்வேதா டோரத்தி, பிளாக் பாண்டி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
தமிழ் சினிமாவில் அடிக்கடி வரும் பேய்ப் படங்களின் வரிசையில் வந்துள்ள மற்றுமொரு பேய்ப் படம். படத்தின் தலைப்பே பேய் எங்கிருக்கிறது என்பதை சொல்லிவிடுகிறது. முதல் பாதியில் ஒரு காதல் கதையாகவும், இரண்டாம் பாதியில் பேய்ப் படமாகவும் நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் முருகன்.
திருவண்ணாமலையில் எலக்ட்ரானிக்ஸ் கடை ஒன்றில் வேலை பார்ப்பவர் ஸ்வேதா டோரத்தி. அதே கடையில் டிஷ் ஆன்டெனாக்களைப் பொருத்துபவராக வேலைக்குச் செல்பவர் தமன் குமார். அதற்கு முன்பே ஸ்வேதாவைப் பார்த்து காதல் கொள்கிறார். சில பல முயற்சிகளுக்குப் பின் ஸ்வேதா மனதில் இடம் பிடிக்கிறார் தமன். இருவரும் அவர்களது பெற்றோர் சம்மதத்தில் திருமண நிச்சயமும் செய்து கொள்கிறார்கள். இந்நிலையில் அவர்களது உடலுக்குள் காதல் ஜோடி பேய் புகுந்து கொள்கிறது. சிலரைப் பழி வாங்க வேண்டும் என்று சொல்லி அடுத்தடுத்து சில கொலைகளையும் செய்கிறது அந்தப் பேய்கள். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தின் ஆரம்பம் முதல் இடைவேளை வரை தமன், ஸ்வேதா காதல் பற்றித்தான் கதை நகர்கிறது. காதல் நடிப்பில் இருவரும் குறை வைக்கவில்லை. ஸ்வேதா மிகவும் அழகாக இருக்கிறார். தமிழ் சினிமா இவரை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தமன் நடித்து கடைசியாக வந்த ‘ஒரு நொடி’ படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இந்தப் படத்திலும் குறை வைக்காமல் நடித்திருக்கிறார். இருவருக்குள்ளும் பேய் புகுந்த பின் ஆக்ரோஷமாய் நடித்திருக்கிறார்கள்.
தமன் நண்பராக பிளாக் பாண்டி, ஒரு சில காட்சிகளில் மட்டும் சிரிக்க வைக்கிறார். காதல் ஜோடி பேய்களுக்கு ஒரு பிளாஷ் பேக் உண்டு. முக்கிய வில்லனாக யோகி ராம் நடித்திருக்கிறார்.
அமராவின் பின்னணி இசை பரவாயில்லை. திருவண்ணாமலைதான் படத்தின் கதைக் களம். ஆனால், பார்க், சில தெருக்கள் என தனது ஒளிப்பதிவை செய்திருக்கிறார் பாண்டியன் குப்பன்.
கொஞ்சம் காதல், கொஞ்சம் மிரட்டல் என நகர்ந்தாலும் மேக்கிங்கில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். சில காட்சிகளும், கதாபாத்திரங்களும் சினிமாத்தனமாக உள்ளன.
Tags: park, thaman kumar, swetha dorathy