அந்தகன் - விமர்சனம்
10 Aug 2024
தியாகராஜன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், பிரசாந்த், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
பிரசாந்த் ஒரு பார்வையற்ற பியானோ இசைக் கலைஞர். பணம் சம்பாதித்து லண்டன் சென்று பிரபலமாக வேண்டும் என்பதுதான் அவரது ஆசை. ஒரு சிறிய விபத்தில் பிரியா ஆனந்துடன் அவருக்கு நட்பு ஏற்படுகிறது. பிரியாவின் குடும்ப ஹோட்டலில் பியானோ கலைஞராகவும் சேர்கிறார். அந்த ஹோட்டல் வாடிக்கையாளரான சினிமா நடிகர் கார்த்திக்குடன் பழகுகிறார் பிரசாந்த். கார்த்திக் அழைப்பின் பேரில் அவருடைய திருமண நாளுக்கு அவரது வீட்டிற்கு பியானோ இசைக்கச் செல்கிறார் பிரசாந்த். அவரை வரவேற்கும் கார்த்திக்கின் மனைவி சிம்ரன் தரும் அதிர்ச்சியில் சிக்குகிறார் பிரசாந்த். கள்ளக் காதலால் கார்த்திக்கைக் கொலை செய்துள்ளார் சிம்ரன். இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
பார்வையற்றவராக நடிப்பது சாதாரண விஷயமல்ல. அதற்கென நடை, உடல் மொழி ஆகியவற்றைச் சரியாகச் செய்ய வேண்டும். அதிலும் இந்தப் படத்தின் கதாபாத்திரம் பார்வை தெரிந்தும், தெரியாமல் நடிக்கும் ஒரு கதாபாத்திரம். அதற்கேற்றபடியான காட்சிகள் படத்தில் உண்டு. அந்த சமாளிப்பு, சவால் ஆகியவற்றைச் சரியாகச் செய்திருக்கிறார் பிரசாந்த். சினிமாவில் விட்ட நீண்ட இடைவெளியை இந்தப் படத்தின் மூலம் திரும்பப் பெற்றுள்ளார். அந்த வரவேற்பை அப்படியே கொண்டு போவது அவருக்கு சிறப்பாக அமையும்.
வில்லித்தனமான கதாபாத்திரத்தில் சிம்ரன். நடிகர் கார்த்திக்கை ஆசைப்பட்டு திருமணம் செய்து கொண்டவர். இருந்தாலும் இன்ஸ்பெக்டர் சமுத்திரக்கனியுடன் கள்ளக் காதல். அதனால், சில கொலைகளைச் செய்ய வேண்டிய சூழல். அதற்கான ஒரே சாட்சியான பிரசாந்த்தை கொலை செய்ய முயற்சிக்கிறார். நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கத் தயாராகியுள்ள மற்றுமொரு முன்னாள் கதாநாயகி. தனது நடிப்பால் அக்கதாபாத்திரத்தைப் பேச வைத்துள்ளார்.
பிரசாந்த் மீது காதல் கொண்டு ஏமாந்து நிற்பவராக பிரியா ஆனந்த். உண்மையில் நடந்தது என்ன என்பது தெரியாமல் வீணாக சந்தேகப்பட்டு பிரசாந்தை விட்டுப் பிரிகிறார். இவர்கள் இடையிலான சில காதல் காட்சிகள் முதல் பாதியில் ரிலாக்ஸ் தருகின்றன. கார்த்திக் சிறிது நேரமே வந்தாலும் அவருடைய பழைய துடிப்பான நடிப்பைப் பார்க்க முடிகிறது.
இடைவேளைக்குப் பிறகு படம் த்ரில்லரோடு சேர்ந்து கொஞ்சம் காமெடியாகவும் நகர்கிறது. ஊர்வசி, யோகி பாபு, கேஎஸ் ரவிக்குமார் பங்கேற்கும் அந்தக் காட்சிகள் பி அன்ட் சி ரசிகர்களை அதிகம் கவரும். குறிப்பாக ஊர்வசி கலக்கியிருக்கிறார்.
பாடல்களில் ஏமாற்றியுள்ள சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையில் பியானோ இசையில் பிரமாதப்படுத்தியுள்ளார். ரவி யாதவ்வின் ஒளிப்பதிவில் அவருடைய அனுபவம் பேசுகிறது.
இதன் ஹிந்தி மூலமான ‘அந்தாதுன்’ படத்தைப் பார்த்தவர்கள் அதனுடன் இப்படத்தை ஒப்பிட்டுப் பேசுவார்கள். அந்தப் படத்தை நாம் பார்க்கவில்லை, இந்தப் படத்தைப் பார்த்த வரையில் சில குறைகள் தெரிந்தாலும் போரடிக்காமல் நகர்ந்து போகிறது படம்.
கண் தெரியாத ஹீரோ என்னென்னமோ செய்வார் என்று சினிமாத்தனம் இல்லாமல், ஒரு யதார்த்த ஹீரோ, அவரைச் சுற்றி சில கதாபாத்திரங்கள் என நெருடல் இல்லாமல் ரசிக்க வைக்கும் படமாக அமைந்துள்ளது.
Tags: andhagan, prashanth, thiagarajan, simran, priya anand