வீராயி மக்கள் - விமர்சனம்

10 Aug 2024

நாகராஜ் கருப்பையா இயக்கத்தில், தீபன் சக்கரவர்த்தி இசையமைப்பில், வேல ராமமூர்த்தி, மாரிமுத்து, தீபா சங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

படத்தின் தலைப்பும், போஸ்டர்களுமே இது ஒரு கிராமத்துக் குடும்பக் கதை என்பதைப் புரிய வைத்திருக்கும். ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த நாம், இப்போது ஒரே குடும்பமாக இருந்தாலும் தனித் தனியாகத்தான் பிரிந்து வாழ்கிறோம். அப்படியே பிரிந்து வாழ்ந்தாலும் ஒருவருக்கொருவர் பாசத்துடன் வாழ வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார் படத்தின் இயக்குனர் நாகராஜ்.

அண்ணன் வேல ராமமூர்த்தி அவரது தம்பி மாரிமுத்து ஆகியோர் ஒரே தெருவில் எதிரெதிர் வீட்டில் வசிக்கிறார்கள். இருவரது குடும்பத்திற்கும் ஆகவே ஆகாது. வேல ராமமூர்த்தியின் மகன் சுரேஷ் நந்தாவுக்கு தனக்கு ஒரு அத்தை இருக்கிறது என்பது தெரிகிறது. அத்தைப் பெண் நந்தனாவைப் பார்த்ததுமே காதல் கொள்கிறார். அந்தக் காதல் பிரிந்து கிடக்கும் அவர்களது குடும்பத்தை இணைக்க ஊன்றுகோலாக இருக்கிறது. பிரிந்தவர்கள ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதை.

பல படங்களில் பார்த்த அதே கிராமத்து அப்பா கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி. ஆனால், அண்ணனுக்குரிய கர்வம், திமிர் ஆகியவற்றுடனேயே வலம் வருகிறார். இருந்தாலும் அவருக்குள் இருக்கும் பாசத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே இருக்கிறார். தமிழ் சினிமாவில் சமீபத்திய அப்பா நடிகர்களில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துவதில் முதன்மையானவர் வேல ராமமூர்த்தி.

அவரது தம்பியாக மறைந்த மாரிமுத்து. அண்ணன் மீதான கோபம், மனைவி சொல்லே மந்திரம் என இருப்பவர். இவரது மனைவியாக ‘வாயாடி’ என்ற பட்டத்தை தனது ஒவ்வொரு காட்சியிலும் வாங்கிவிடுகிறார். வேல ராமமூர்த்தியின் மனைவியாக குடும்பத்தின் பொறுப்பான மூத்த மருமகளாக நடித்திருக்கிறார் ரமா.

சுரேஷ் நந்தா பாசமான கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தை அப்படியே கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். அவரது காதலியாக நடித்திருக்கும் நந்தானவும் யதார்த்தமாக நடித்திருக்கிறார். தீபா சங்கர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களில் மிகை நடிப்பை வழங்குபவர். இந்தப் படத்தில் அந்த மிகை இல்லாமல் நடித்திருக்கிறார். அண்ணன்கள் தன்னை ஏற்றுக் கொள்ளக் கேட்கும் காட்சியில் கலங்க வைக்கிறார்.

கடைசி தம்பி ஜெரால்டு மில்டனுக்கு அதிக வேலையில்லை. வீராயி கதாபாத்திரத்தில் பாண்டி அக்கா நடித்திருக்கிறார். கணவன் இல்லாமல் தனது மக்களைக் காப்பாற்ற பெரிதும் கஷ்டப்படுகிறார். தனது மகன்கள், மகள் பிரிந்து போய்விடக் கூடாது என கலங்குகிறார்.

தீபன் சக்கரவர்த்தியின் பின்னணி இசை, பாடல்கள் படத்திற்குப் பலமாக அமைந்துள்ளது. விரைவில் தமிழ் சினிமாவில் இவருக்கான இடம் கிடைக்கும்.

அண்ணன், தம்பி, தங்கை பற்றிய பாசக் கதைகள் தமிழ் சினிமாவில் இதற்கு முன்பும் வந்ததுண்டு. இப்படத்தில் சில குறைகள் இருந்தாலும் உணர்வுபூர்வமான படமாகவும், பாசத்தின் பெருமையை உணர்த்தும் படமாகவும் இருப்பதால் வரவேற்று ரசிக்கலாம்.

Tags: veerayi makkal

Share via: