ராயன் - விமர்சனம்
26 Jul 2024
தனுஷ் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், தனுஷ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
தனுஷ் நடிப்பில் 50வது படம், அவரது இயக்கத்தில் இரண்டாவது படம். தனுஷ் இயக்கும் படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைப்பது இதுவே முதல் முறை. இப்படி சில சிறப்புக்களுடன் வந்துள்ள ஒரு படம்.
தங்களது பெற்றோர் திடீரென காணாமல் போனால் சிறுவனாக இருந்த போதே தனது இரண்டு தம்பிகள், ஒரு தங்கை ஆகியோருடன் சொந்த ஊரை விட்டு சென்னைக்குச் செல்கிறார் தனுஷ். காலங்கள் கடந்த பின் இளைஞன் தனுஷ் சொந்தமாக ஒரு பாஸ்ட் புட் கடையை நடத்தி வருகிறார். முதல் தம்பி சந்தீப் கிஷன் குடிப்பது, ஊரைச் சுற்றுவது, காதலிப்பது என பொறுப்பில்லாமல் சுற்றுபவர். இரண்டாவது தம்பி காளிதாஸ் ஜெயராம் கல்லூரியில் படிப்பவர். ஒரே தங்கை துஷாரா விஜயன் வீட்டைப் பார்த்துக் கொள்கிறார். தான் உண்டு தன் கடை உண்டு என இருக்கும் தனுஷை ஆயுதம் ஏந்த வைக்கக் காரணமாகிறார் தம்பி சந்தீப். ஏரியாவின் தாதாக்களான எஸ்ஜே சூர்யா, சரவணன் ஆகியோர் இடையேயான மோதலில் தனுஷ் சிக்குகிறார். அதிலிருந்து வெளியே வந்தாரா, தனது தம்பிகள், தங்கைகளுக்கு எதுவும் நிகழாமல் பார்த்துக் கொண்டாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
எதிர்பார்க்காத நேரத்தில் நாயகன் இறங்கி வந்து அடிக்கும் அந்த ஹீரோயிசக் காட்சியை அருமையான ஒரு இடத்தில் வைத்து கைத்தட்டல் வாங்குகிறார் இயக்குனர் தனுஷ். அதற்கேற்றபடி ‘ராயன்’ அசத்த வேண்டிய காட்சிகளில் தனியாக ராஜ நடை நடந்து அதிரடியில் இறங்கியிருக்கிறார் நடிகர் தனுஷ். அதற்கேற்ற பின்பலமாக ஏஆர் ரகுமானின் பின்னணி இசை காட்சிக்குக் காட்சி அமைந்துள்ளது. அதை இந்த இடத்தில் குறிப்பிடுவதுதான் சிறப்பு. அறிமுகமான காலங்களில் பார்த்த தனுஷுக்கும் இத்தனை வருடங்கள் கழித்து இப்போது பார்க்கும் தனுஷுக்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது. ‘சுள்ளான்’ ஆக அதிரடி காட்டிய போது ரசிக்காதவர்கள் இப்போது ‘ராயன்’ ஆக அதிரடி காட்டும் போது ஆச்சரியப்படுவது உறுதி.
தனுஷுக்குப் பிறகு நடிப்பில் அசத்தியிருப்பவர் தங்கை துஷாரா விஜயன். ஏற்கெனவே ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் சென்னைப் பெண்ணாக தூள் கிளப்பியிருப்பார். இந்தப் படத்தில் கத்தியைத் தூக்கி சண்டை வேறு போடுகிறார். எந்தக் கதாபாத்திரம் வேண்டுமானாலும் கொடுங்கள், நடிப்பில் அசத்துவேன் என்கிறார் துஷாரா.
தமிழில் நாயகனாக நடித்தும் ரசிகர்களிடம் சென்று சேராமல் இருக்கும் சந்தீப் கிஷன், இந்தப் படம் மூலம் தன்னைப் பற்றிப் பேச வைத்துவிடுவார். அண்ணன் தனுஷை எதிர்த்துக் கேள்வி கேட்பதில் கொஞ்சமும் சளைக்காதவர். குடித்துவிட்டு கலாட்டா செய்வது, காதலி அபர்ணாவிடம் வம்பிழுப்பது என சரமாரியாக நடித்துத் தள்ளியுள்ளார்.
அண்ணன் பேச்சைத் தட்டாத தம்பியாக காளிதாஸ் ஜெயராம். ஆனாலும், அண்ணன்களுடன் சேர்ந்து சண்டை செய்யத் தயங்காதவர். இவரது கதாபாத்திரம் பின்னர் மாறுவது நம்ப முடியாத ஒன்றாக உள்ளது.
சேது என்ற தாதாவாக எஸ்ஜே சூர்யா. இவரும் தனுஷும் சந்திக்கும் அந்த ஒரு காட்சி ‘பயர்’ ஆக உள்ளது. சூர்யாவிடம் இன்னும் எதிர்பார்த்தோம். சரவணன் சில காட்சிகள் என்றாலும் நச் என்று நடித்திருக்கிறார்.
தனுஷ் குடும்பத்திற்கு ஆரம்பம் முதல் கடைசி வரை ஆதரவாய் இருக்கும் அன்பான அண்ணனாக செல்வராகவன். இப்படி ஒரு சிலர் இருந்தால் யாரும் பிழைப்பு தேடி எந்த ஊருக்கு வேண்டுமானாலும் போகலாம். சந்தீப் காதலியாக அபர்ணா பாலமுரளி. சந்தீப்பை விரட்டி விரட்டி காதலிக்கிறார். காவல் துறை அதிகாரியாக பிரகாஷ்ராஜ். ஆரம்பத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ஒரு கதாபாத்திரம். திரைக்கதை ஓட்டத்தில் வந்து, வந்து போகிறார். வரலட்சுமி, திலீபன், இளவரசு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நிறைவாய் நடித்திருக்கிறார்கள்.
ஏஆர் ரகுமான் இசை படத்திற்கு மிகப் பெரும் சப்போர்ட் ஆக உள்ளது. குறிப்பாக பின்னணி இசையால் பல காட்சிகள் உயிரோட்டம் பெறுகிறது. ‘வாட்டர் பாக்கெட் மற்றும் போகி’ பாடல்களில் ரகுமானின் ஆரம்ப கால உற்சாகம் தெரிகிறது. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு லைட்டிங்கிலும், கோணங்களிலும் ஆக்ஷன் படத்துக்குரிய மாஸை வெளிப்படுத்துகிறது.
இரண்டாம் பாதியில் திரைக்கதை இப்படி நகருமோ என்று நாம் யோசித்தால் வேறு பாதையில் நகர்கிறது. துரோகங்களுக்கான அழுத்தம் இன்னும் அதிகம் இருந்திருக்கலாம். கொலைக்காட்சிகளை இந்த அளவிற்கு ரத்த வெறியோது காட்டியிருக்கத் தேவையில்லை.
Tags: raayan, dhanush, dushara vijayan, sandeep kishan, kalidas jayaram, sj surya, ar rahman