டீன்ஸ் - விமர்சனம்
13 Jul 2024
பார்த்திபன் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், பார்த்திபன், யோகி பாபு ஆகியோருடன் புதுமுக சிறுவர், சிறுமியர் நடித்துள்ள படம்.
டீன் ஏஜ் வயதைத் தொட்ட ஒரே வில்லா பகுதியில் வசிக்கும் சில சிறுவர், சிறுமியர் தாங்கள் சின்னவர்கள் கிடையாது, தங்களுக்கும் எதையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டு என பேசிக் கொள்கிறார்கள். அந்தப் பேச்சின் முடிவில் ஒரு சிறுமியின் பாட்டி ஊருக்குச் சென்று, அங்கு பேய் இருப்பதாகச் சொல்லப்படும் இடத்திற்குப் போய் தங்கள் தைரியத்தை நிரூபிக்க முயல்கிறார்கள். போகும் வழியில் அடுத்தடுத்து சிலர் காணாமல் போகிறார்கள். அவர்கள் எங்கே போனார்கள், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
13 சிறுவர், சிறுமியர் ஒன்றாக பள்ளியை கட் அடித்துவிட்டு சென்னைக்கு அருகே உள்ள அந்த கிராமத்திற்குப் புறப்படுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குணாதிசயம் கொண்ட கதாபாத்திரங்கள். முடிந்தவரையில் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாக நடிக்க முயற்சித்திருக்கிறார்கள். சிலரது பேச்சுகள் மட்டும் வயதுக்கு மீறிய பேச்சாக உள்ளது.
படத்தின் கிளைமாக்சுக்கு முன்பாக, சயின்டிஸ்ட் ஆக வருகிறார் பார்த்திபன். அவர்தான் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க முயல்கிறார். ஆரம்பத்திலிருந்தே பேய் தான் அவர்களை ஏதோ செய்துவிட்டது என நம்மை நினைக்க வைத்து பின் அதை ‘சயின்ஸ் பிக்ஷ்ன்’ பக்கம் திரும்ப வைத்துவிட்டார். பேயாக இருக்குமோ என்று பயமுறுத்துவதை விட அது சுவாரசியமாக இருக்கிறது.
யோகிபாபு இடையில் இரண்டு காட்சிகளில் வந்து போகிறார். எதற்காக வந்தார், என்ன செய்தார் என்பது கேள்வி.
கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவு பரவாயில்லை. இமான் பின்னணி இசையில் தன் இருப்பைக் காட்ட முயற்சித்திருக்கிறார். விஎப்எக்ஸ் காட்சிகளை இன்னும் தரத்துடன் கொடுத்திருக்கலாம்.
ஒவ்வொரு படத்திலும் பார்த்திபன் புதிய முயற்சிகள் மேற்கொள்வார். அது அவரது முதல் படமான ‘புதிய பாதை’ படத்திலிருந்து தொடர்கிறது. இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் குழந்தைகளுக்கான ஒரு படமாகக் கொடுக்க வேண்டும் என்று மட்டுமே நினைத்திருக்கிறார்.
Tags: teenz, parthiban