இந்தியன் 2 - விமர்சனம்
13 Jul 2024
ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
1996ல் வெளிவந்த ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகமாக வந்துள்ள படம். 28 வருடங்களுக்கு முன்பு மிகப் பெரும் வரவேற்பையும், வசூலையும் குவித்த ஒரு படம். அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்திற்கு உயர்த்திய ஒரு படம். அப்படிப்பட்ட ஒரு படத்தை இரண்டாம் பாகமாகக் கொடுக்கும் போது இன்னும் உயர்த்தி கொடுத்தார்களா என்று பார்ப்போம்.
முதல் பாகத்தில் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற அப்பா கதாபாத்திரமான சேனாபதி, தற்போது தைவான் நாட்டின் தைபே நகரில் வசித்து வருகிறார். இங்கு சென்னையில் சித்தார்த் அவரது நண்பர்களுடன் யு டியுப் சேனல் ஒன்றை நடத்தி, அதில் சமூக அக்கறையுடன் கூடிய வீடியோக்களைப் பதிவிடுகிறார். நாட்டைத் திருத்த இந்தியன் தாத்தா வந்தால்தான் நன்றாக இருக்கும் என அவர்கள் நினைத்து இந்தியன் தாத்தா மீண்டும் வர வேண்டும் என்று எக்ஸ் தளத்தில் டிரென்ட் செய்கின்றனர். அதைப் பார்த்து இந்தியன் தாத்தா மீண்டும் இந்தியா வருகிறார். ஊழல் அதிகாரிகள், கோடீஸ்வரர் ஒருவரைக் கொலை செய்கிறார் தாத்தா. அவர் திரும்ப வரக் காரணமாக இருந்த சித்தார்த் மற்றும் அவரது நண்பர்கள் வீட்டிலேயே ஊழல்வாதிகள் இருப்பது தெரிய வருகிறது. அதனால் பாதிக்கப்படும் அவர்கள் தாத்தாவை திரும்பப் போகச் சொல்கிறார்கள். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
விதவித தோற்றங்களில் வந்து வர்மக் கலை மூலம் சில கொலைகளைச் செய்து, மக்களுக்கும் அட்வைஸ் செய்து தன் பங்கிற்கு படத்தில் என்ன செய்ய முடியுமோ அதை சரியாகச் செய்திருக்கிறார் கமல்ஹாசன். இயக்குனர் ஷங்கரை முதல் பாகத்தில் நம்பி தன்னை இயக்க வாய்ப்பு கொடுத்தது போல, இந்தப் படத்திலும் நிறையவே நம்பியிருக்கிறார். ‘விக்ரம்’ படத்தின் மாபெரும் வரவேற்புக்குப் பிறகு வரும் கமல்ஹாசன் படம் என்பதால் இன்னும் கூடுதலாக கமல்ஹாசனின் ஹீரோயிசத்திற்கான காட்சிகளை வைத்திருக்கலாம்.
யு டியூப் சேனல் நடத்துபவராக சித்தார்த். அவரது நண்பர்களாக பிரியா பவானி சங்கர், ஜெகன் நடித்திருக்கிறார்கள். இந்தியன் தாத்தா சொன்னது போல தங்கள் வீட்டையும் சுத்தப்படுத்த நினைத்து பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். சமூகத்தைத் திருத்த வேண்டும், வீட்டை, நாட்டை திருத்த வேண்டும் என துடிக்கிறார்கள். சித்தார்த் காதலியாக ஓரிரு காட்சிகள் மட்டுமே வந்து போகிறார் ரகுல் ப்ரீத் சிங். இப்படியாக எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட மேலும் சிலரும் வந்து போகிறார்கள். ஒரு வேளை ‘இந்தியன் 3’யில் அதிகம் வருவார்கள் போலிருக்கிறது.
‘இந்தியன்’ முதல் பாகத்திற்கு ஏஆர் ரகுமான் இசை பெரும் பலம். அதில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களுமே அன்றைய கால கட்டத்தில் இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தவை. அவற்றைப் படமாக்கிய விதம் ஆகியவை இப்போதும் பேசப்படுபவை. அப்படியிருக்க, இந்த இரண்டாம் பாகத்தில் ரகுமான் இல்லாதது குறையாகவே உள்ளது. ‘தாத்தா வராரு’ பாடலில் மதிப்புக்குரிய தாத்தாவின் இமேஜைக் கெடுத்துள்ளார் அனிருத். பின்னணி இசையும் மிகச் சுமார்தான்.
படத்தின் நீளம், சில தேவையற்ற காட்சிகள். என்டர்டெயின்மென்ட் ஆக நகைச்சுவை, பாடல்கள் முதல் பாகத்தைப் போல இல்லாததும் படத்திற்கு மைனஸ். ஷங்கர் படம் என்றாலே வியக்க வைக்கும், இதில் ஷங்கர் ‘டச்’ படம் முழுவதும் இல்லை.
Tags: indian 2, shankar, kamalhaasan, anirudh, sidharth