7 ஜி - விமர்சனம்
05 Jul 2024
ஹரூண் இயக்கத்தில் சித்தார்த் விபின் இசையமைப்பில், சோனியா அகர்வால், ஸ்முருதி வெங்கட், ரோஷன் பஷீர், சித்தார்த் விபின், சினேகா குப்தா, சுப்பிரமணிய சிவா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
அடுக்கு மாடி குடியிருப்பில் சொந்த வீடு ஒன்றை வாங்கி அதில் ரோஷன் பஷீர், ஸ்முருதி வெங்கட் அவர்களது மகன் புதிதாகப் போகிறார்கள். ரோஷனின் அலுவலகத்தில் வேலை செய்யும் சினேகா குப்தா அவரை அடைய மாந்தீரிகம், சூனியம் உதவியுடன் ஒரு பொம்மையை அந்த வீட்டில் வைக்கிறார். ரோஷன் வேலை காரணமாக வெளியூர் செல்ல அந்த வீட்டில் மகனுடன் இருக்கும் ஸ்முருதியை அமானுஷ்ய சக்தி ஒன்று மிரட்டுகிறது. அந்த வீடு தன்னுடைய வீடு என்றும், அதில் யாரையும் அனுமதிக்க மாட்டேன் என்றும் சொல்கிறது. அந்த அமானுஷ்ய சக்தி யார், அதனிடமிருந்து தன்னையும், தன் மகனையும் ஸ்முருதி காப்பாற்றினாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஸ்முருதி வெங்கட் இதுவரை நடித்த படங்களில் அவருடைய நடிப்பில் எந்த ஏமாற்றத்தையும் கொடுத்ததில்லை. கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமாக நடிப்பார். அது போலவே இந்தப் படத்திலும் நடித்திருக்கிறார். அவருக்கான முக்கியத்துவம் படத்தில் இருக்கிறது. அதற்கேற்றபடி நடித்து தன் கதாபாத்திரம் பற்றியும் நடிப்பு பற்றியும் பேச வைத்திருக்கிறார்.
ஸ்முருதியின் கணவராக ரோஷன் பஷீர். ஒரு பக்கம் மனைவி, மற்றொரு பக்கம் அலுவலகக் காதலி என பாடல் காட்சிகளில் நடித்துவிட்டுப் போகிறார். ஒரு திருப்புமுனையான கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால். ரோஷனின் அலுவலகக் காதலியாக சினேகா குப்தா. சூனியம் வைத்து ஆசை நாயகனை அடையப் பார்க்கிறார்.
சித்தார்த் விபின் பின்னணி இசை பாடல்கள் சுமாராக அமைந்துள்ளன. த்ரில்லர் படங்களுக்கு மிரட்டலான இசையமைத்து கவர்ந்திருக்கலாம். இசையை விட அவரது வில்லத்தனமான நடிப்பு கவர்ந்திருக்கிறது.
அடுக்குமாடி குடியிருப்பு, அதில் ஒரு அமானுஷ்யம் என ஒளிப்பதிவாளருக்கு வேலை கொடுக்கும் கதைக்களம். ஒளிப்பதிவாளர் கண்ணா அதை சிறப்பாகச் செய்திருக்கிறார். விதவித கோணங்களில் அதைக் காட்டி பயத்தை கூடுதலாக்குகிறார்.
மந்திரம், மாந்திரீகம், சூனியம், அமானுஷ்யம் என இப்படியான பிளாக் மேஜிக் படங்களில் ரசிகர்களை பயமுறுத்துவதை சரியாகச் செய்தாலே போதும் ரசிகர்களைக் கவர்ந்துவிடலாம். அதில் ஓரளவிற்கு வெற்றியும் பெற்றிருக்கிறார்.
Tags: 7 g