கல்கி 2898 எடி - விமர்சனம்
28 Jun 2024
நாக் அஷ்வின் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
மகாபாரதக் கதையை மையமாக வைத்து, அதிலிருந்து சில கதாபாத்திரங்களை உருவி, அதை 6000 வருடங்களுக்குப் பிறகு ஒரு சயின்ஸ் பிக்ஷன் கதாபாத்திரங்களாக மாற்றி கற்பனை மிகுந்த காட்சிகளுடன் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் நாக் அஷ்வின். இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் மகாபாரதம், ராமாயணம் இன்றைய இயக்குனர்களின் கதை எழுதுதலுக்கான ஆதாரமாக இருக்கப் போகிறதோ ?.
மகாபாரதப் போரில் கிருஷ்ணரால் சபிக்கப்பட்டு இறவா வரம் பெறுகிறார் அஸ்வாத்தமன். அதோடு எதிர்காலத்தில் தன்னை காக்க வேண்டிய சூழலையும் அஸ்வாத்தமன் பெறுவார் என்று சொல்கிறார்.
6000 வருடங்களுக்குப் பிறகு 2898ம் ஆண்டு, உலகின் கடைசி நகரமான காசியில்,ஒரு ஆராய்ச்சிக்காக கர்ப்பிணிப் பெண்ணான தீபிகா படுகோனே பயன்படுத்தப்படுகிறார். அந்த இடத்திலிருந்து எப்படியோ தப்பிக்கிறார். அந்த நகரின் கீழே உள்ள பாழடைந்த கோவில் ஒன்றில் தவ நிலையில் இருக்கிறார் அமிதாப்பச்சன். அவர்தான் மகாபாரதக் கால அஸ்வாத்தமன். கிருஷ்ணரின் சாபப்படி இறக்காமல் இருக்கிறார். கிருஷ்ணர் சொன்னது போல தீபிகா படுகோனே வயிற்றில் கடவுள் வளர்கிறார் என்பதை உணர்கிறார். தப்பித்த தீபிகாவைத் தேடி ஒரு குழு புறப்படுகிறது. பணம் கொடுத்தால் எதையும் செய்யும் பிரபாஸும் தீபிகாவைத் தேடிப் போகிறார். அவர்களிடமிருந்து தீபிகாவை, அமிதாப் காப்பாற்றுகிறாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் அமிதாப்பச்சன்தான் படத்தின் கதாநாயகன். பிரபாஸ் ஏறக்குறைய இரண்டாவது கதாநாயகன் போலத்தான் வருகிறார். இவருக்கான காட்சிகளின் முக்கியத்துவம் குறைவுதான். ஹீரோயிசத்தில் பிரபாஸை விட அமிதாப் கதாபாத்திரம் உயர்ந்து நிற்கிறது. அதற்கேற்றபடி சண்டைக் காட்சிகளில் அசத்தியிருக்கிறார் அமிதாப். வளவளவென பேசிக் கொண்டு இருக்கும் கதாபாத்திரத்தில் பிரபாஸ். ஒருவேளை இரண்டாம் பாகத்தில் இவருக்கான முக்கியத்துவம் அதிகம் இருக்கலாம்.
படத்தின் வில்லனாக கமல்ஹாசன். மிக வயதான தோற்றத்தில் இரண்டே இரண்டு காட்சிகளில்தான் வருகிறார். இரண்டாம் பாகத்தில் இவருக்கும், பிரபாஸுக்கும் இடையிலான மோதல்தான் கதையாக இருக்கலாம்.
கர்ப்பிணிப் பெண்ணாக தீபிகா படுகோனே. ஹிந்திப் படங்களில் அசத்தல் அழகுடன், விதவிதமான ஆடைகளில் ரசிகர்களை ரசிக்க வைத்தவர். இந்தப் படத்தில் ஒரே ஒரு ஆடை, டல் மேக்கப் என களையிழந்து காணப்படுகிறார்.
மற்ற கதாபாத்திரங்களில் ஷேபனா, பசுபதி, சஸ்வதா சாட்டர்ஜி, அன்னா பென், பிரம்மானந்தம் என சிலர் வந்து போகிறார்கள். பிரபாஸ் ஓட்டும் பிரம்மாண்ட கார் புஜ்ஜிக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். மற்றொரு கதாநாயகி என சொல்லப்பட்ட திஷா படானி ஒரே ஒரு காட்சிக்குப் பின் காணாமல் போகிறார்.
விஷுவலாக ஒரு பிரம்மாண்டத்தைக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜோர்ட்ஜ ஸ்டோஜில்கோவிக். விஎப்எக்ஸ் காட்சிகள் மேலும் பிரம்மாண்டத்தைக் கூட்டியுள்ளன. சந்தோஷ் நாராயணன் அவருடைய இசையைப் பேச வைக்க வேண்டும் என்ற விதத்தில் உழைத்திருக்கிறார்.
பல ஹாலிவுட் படங்களின் காட்சிகளை மீண்டும் பார்க்கும் ஒரு உணர்வுதான் ஏற்படுகிறது. படத்தோடு ரசிகர்களை ‘கனெக்ட்’ செய்யும் விதத்தில் காட்சிகள் இருக்க வேண்டும். அப்படி ஒன்று கூட இல்லாதது ஏமாற்றமே. அதுவே படத்திற்கு மைனஸ் ஆகவும் அமைந்துவிட்டது.
Tags: kalki 2898 ad, prabhas, deepika padukone, amitabh bachchan, kamalhaasan, santhosh narayanan