ரயில் - விமர்சனம்
22 Jun 2024
பாஸ்கர் சக்தி இயக்கத்தில், ஜனனி இசையமைப்பில், குங்குமராஜ் முத்துசாமி, வைரமாலா, பர்வேஷ் மெஹ்ரு மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
‘வடக்கன்’ என்ற பெயரில் வெளிவர வேண்டிய படம். தணிக்கைக் குழு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் ‘ரயில்’ எனப் பெயர் மாற்றி வெளியிட்டிருக்கிறார்கள். படத்தில் பல இடங்களில் ‘வடக்கன்’ என்ற வசனம் இருப்பதால் அவை அனைத்தும் ‘கட்’ ஆகியுள்ளன.
தேனி அருகே உள்ள ஒரு கிராமத்தில் எலக்ரிசியன் ஆக இருப்பவர் குங்குமராஜ் முத்துசாமி. வைரமாலாவுடன் திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் எதிர் வீட்டில் குடியிருக்கும் வட மாநிலத்தைச் சேர்ந்த பர்வேஷ் மெஹ்ரு, வைரமாலாவை அண்ணி என அழைத்து அன்பாகப் பழகுகிறார். இதனால் ஆத்திரமடையும் குங்குமராஜ், பர்வேஷைக் கொல்ல நினைக்கிறார். ஆனால், பர்வேஷ் விபத்தில் திடீரென இறந்து போகிறார். அவர் இறப்பதற்கு முன்பு வைரமாலாவிடம் ஒரு பையைக் கொடுக்கிறார். இறுதிச்சடங்கு முடிந்த பின்பு தன் மகனின் 5 லட்சம் காணவில்லை என பர்வேஷ் அப்பா சொல்கிறார். அதை குங்குமராஜ் எடுத்திருப்பார் என சந்தேகம் வருகிறது. இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
அன்பையும், பாசத்தையும் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர். ஆனால், தமிழர்கள் எப்போதும் குடித்துக் கொண்டே இருப்பார்கள். வட மாநில இளைஞர்கள் தான் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறார்கள் என்ற எண்ணத்துடன் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்.
நாயகனாக நடித்திருக்கும் குங்குமராஜ், நிஜமான குடிகாரனாகவே நடித்திருக்கிறார். அவரது தோற்றம், உடல்மொழி அனைத்துமே நடிப்புக்குக் கை கொடுத்திருக்கிறது. அவரது மனைவியாக வைரமாலா. யதார்த்தமான கிராமத்துப் பெண்ணாக, இயல்பாக நடித்திருக்கிறார்.
பர்வேஷ் மெஹ்ரு இடைவேளை வரை மட்டுமே வருகிறார். ஓரளவிற்கு நடித்திருக்கிறார். குங்குமராஜ் நண்பராக இல்லை, இல்லை குடி நண்பராக ரமேஷ் வைத்யா நடித்திருக்கிறார். பர்வேஷ் பெற்றோராக நடித்திருப்பவர்களும் நிறைவாய் நடித்துள்ளனர்.
தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு படத்திற்கு பிளஸ் பாயின்ட். கதையின் தன்மை மாறாமல் அவரது காமரா பயணத்துள்ளது. ஜனனியின் பின்னணி இசைக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். பல காட்சிகள் சைலன்ட் ஆகவே நகர்கிறது.
‘அயோத்தி’ படம் போல மனிதம் பேசும் படமாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர். பர்வேஷ் இறுதிச் சடங்கை ஊரே சேர்ந்து செய்கிறது. அம்மாதிரியான மனிதாபிமான காட்சிகளுக்கு பாராட்டினாலும் தமிழர்களின் மாண்பைக் குறைப்பது போல ‘குடிகாரர்கள்’ என எடுத்திருக்கலாமா என்ற கேள்வியும் எழுகிறது.
Tags: rail