லாந்தர் - விமர்சனம்
22 Jun 2024
சாஜி சலீம் இயக்கத்தில், பிரவீண் இசையமைப்பில், விதார்த், ஸ்வேதா டோரத்தி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
கோவையில் டெபுடி கமிஷனராக இருப்பவர் விதார்த். அங்கு ஒரு நாள் இரவு நேரத்தில் யாரோ ஒருவர் அவர் எதிரில் வருபவர்களை கடுமையாகத் தாக்குவதாக போலீஸ் ஸ்டேஷனுக்குப் புகார் வருகிறது. அந்த நபர் யாரென்பதைத் தேடிக் கண்டுபிடிக்க விதார்த் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து செல்ல ஆரம்பிக்கிறார்கள். அதன்பிறகும் சிலர் தாக்கப்படுகிறார்கள். குற்றவாளியை நெருங்கும் போது சில அதிர்ச்சியான தகவல்கள் கிடைக்கின்றன. அந்த நபரைக் கைது செய்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
டெபுடி கமிஷனராக யதார்த்தமாக நடித்திருக்கிறார் விதார்த். காவல் துறை அதிகாரி வேடம் என்றாலே சினிமாவில் கம்பீரமாக, சினிமாத்தனமாகக் காட்டுவார்கள். ஆனால், இந்தப் படத்தில் ஒரு யதார்த்தமான அதிகாரியைக் காட்டியிருக்கிறார்கள். அவர் கீழே பணி புரியும் மற்ற போலீஸ்காரர்களைக் கூட மரியாதையாகவே நடத்துகிறார். இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தை சினிமாவில் பார்ப்பது அரிது.
விதார்த் மனைவியாக சில காட்சிகளில் மட்டும் நடித்திருக்கிறார் ஸ்வேதா டோரத்தி. படத்தில் கூடவே ஒரு கிளைக் கதையும் நகர்கிறது. இளம் தம்பதிகளான விபின், சஹானா கதாபாத்திரங்களை மையப்படுத்திய கதை அது. அவர்களையும் மையக் கதைக்குள் நாம் எதிர்பார்க்காத விதத்தில் இணைத்திருக்கிறார்கள்.
இரவு நேரக் காட்சிகள் தான் படத்தில் இடம் பெற்றுள்ளன. ஞானசவும்தார் அதற்காக தனிப்பட்ட லைட்டிங்குகளை வைத்து கோவை மாநகரை அதன் இயல்புடன் காட்டியிருக்கிறார். பிரவீணின் பின்னணி இசை பரவாயில்லை.
க்ரைம் திரில்லர் என்றாலே யூகிக்க முடியாத திரைக்கதை இருக்க வேண்டும். அப்படிப்பார்க்கையில் இந்தப் படத்தில் அது இருக்கிறது. அதே சமயம், மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்களின் தேர்வு சரியாக இல்லாமல் போனதால் அது படத்தின் தரத்தைக் குறைத்துள்ளது. இன்னும் முயற்சித்திருந்தால் பரபரப்பான த்ரில்லர் படமாக வந்திருக்கும்.
Tags: laandhar