டியூட், முழு என்டர்டெயின்மென்ட் படமாக இருக்கும் - இயக்குனர்

16 Oct 2025

தீபாவளி பண்டிகைக்கு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக 'டியூட்' உள்ளது. 

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருக்க இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் கீர்த்தீஸ்வரன் ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் அணுகியுள்ளார். மிகப்பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் 'டியூட்' திரைப்படம் நாளை அக்டோபர் 17 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஒரு இயக்குநர் படத்தை உருவாக்குவது மட்டுமல்லாது அந்தப் படத்தை சுற்றிலும் எந்தளவுக்கு எதிர்பார்ப்பை உருவாக்குகிறோம் என்பதிலும் படத்தின் வெற்றி அடங்கும். அந்த வகையில், படத்தில் இருந்து வெளியான முதல் பாடலான 'ஊரும் பிளட்டும்...' முதல் டிரெய்லர் வரை படம் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் மிகச்சரியாக கொண்டு சேர்த்துள்ளார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன். படம் வெளியாவதற்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் படம் ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் கீர்த்தீஸ்வரன்.

இதுகுறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது,

" என் மீது நம்பிக்கை வைத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. சினிமாத்துறையில் மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனமான மைத்ரி கோலிவுட்டில் பிளாக்பஸ்டர் திரைப்படமான 'குட் பேட் அக்லி' மூலம் அடியெடுத்து வைத்தது. அப்படி இருக்கையில் அவர்கள் தமிழில் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு அனுபவம் வாய்ந்த பெரிய இயக்குநர்களை தேர்ந்தெடுத்து இருக்கலாம். ஆனால், அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கை மிகப்பெரியது. இதற்கு நன்றி!" என்றார்.

மேலும் பேசியதாவது, "'டியூட்' திரைப்படத்தில் நாங்கள் பணிபுரிய தொடங்கியபோது அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் சென்றடையும் வகையில் படம் இருக்க வேண்டும் என்று விரும்பினோம். இளைஞர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினருக்கும் மிகப்பிடித்த ஹீரோவாக வளர்ந்து வருகிறார் பிரதீப். படத்தில் அவரது கதாபாத்திரம் முலம் ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன். பிரதீப்பும் அதை சரியாக புரிந்து கொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார்".

படம் பற்றி கேட்டபோது, "ரசிகர்களுக்கு  தீபாவளிக்கு சிறந்த பரிசாக எண்டர்டெயின்மெண்ட் பேக்கேஜாக 'டியூட்' இருக்கும். மமிதா பைஜூ, சரத்குமார் சார் என எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இதெல்லாம் சேர்ந்து நிச்சயம் 'டியூட்' திரைப்படம் முழுமையான எண்டர்டெயினராக இருக்கும்" என்றார்.

நகைச்சுவை, ஹீரோயிசம் மற்றும் எமோஷன் என உருவாகியுள்ள 'டியூட்' திரைப்படம் நாளை அக்டோபர் 17 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Tags: dude, pradeep ranganathan, mamitha baiju, keertheeswaran

Share via: