சற்குணம் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், அதர்வா, ஆஷிகா ரங்கநாத், ராஜ்கிரண், ராதிகா மற்றும் பலர் நடித்து வெளிவந்துள்ள படம்.

கிராமத்துக் குடும்பம், தாத்தா - பேரன் மோதல், கபடி விளையாட்டு என மீண்டும் கிராமத்துப் பக்கம் சென்றிருக்கிறார் இயக்குனர் சற்குணம். 

ஊரில் பல கபடி வீரர்களை உருவாக்கியவர் முன்னாள் கபடி வீரரான ராஜ்கிரண். அவரது இரண்டாது மனைவியின் மகனான ஆர்கே சுரேஷ் மரணத்திற்குப் பிறகு முதல் மனைவி குடும்பமும், இரண்டாவது மனைவி குடும்பமும் பிரிகிறது. சுரேஷின் மனைவி ராதிகா மகன் அதர்வாவுடன் அந்தக் குடும்பத்தை விட்டு தனியே வருகிறார். வளர்ந்து இளைஞனான அதர்வா தாத்தா மீதுள்ள பாசம், மரியாதையில் மட்டும் மாறாமல் இருக்கிறார். ஆனாலும், தாத்தா ராஜ்கிரண் அவரது முதல் மனைவி மகன்கள் அதர்வாவை வெறுக்கிறார்கள். இந்நிலையில் ராஜ்கிரண் குடும்பமும், அந்த ஊரும் எதிரெதிர் துருவங்களாகிறார்கள். அந்தக் குடும்பத்தின் கௌரவத்தைக் காப்பாற்ற அதர்வா முயற்சிக்கிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில் இதற்கு முன்பும் இயல்பாக நடித்து பெயரை வாங்கியவர் அதர்வா. இந்தப் படத்திலும் அதைச் சரியாகச் செய்திருக்கிறார். தாத்தா ராஜ்கிரண் குடும்பத்தினரின் பாசத்திற்காக ஏங்குவதில் நெகிழ வைக்கிறார். அதர்வா ஜோடியாக ஆஷிகா சில காட்சிகளில் மட்டும் வந்து போகிறார்.

குடும்பத்தின் மூத்த தலைவராக ராஜ்கிரண். ஒரு பக்கம் பேரன் அதர்வா, அவரது அம்மா பிரிந்து போன கோபம். பிறகு மற்றொரு பேரன் ராஜ் ஐயப்பாவின் திடீர் தற்கொலை. பின்னர் ஊராரின் பகை என அனைத்தையும் தாங்கும் நடிப்பு. 

மற்ற கதாபாத்திரங்களில் ராஜ்கிரணின் மூத்த மகனாக ஜெயப்பிரகாஷ், இரண்டாவது மகனாக துரை சுதாகர், மருமகனாக சிங்கம் புலி, மருமகளாக ராதிகா குறிப்பிடும்படி நடித்திருக்கிறார்கள்.

ஜிப்ரான் இசையில் பாடல்கள் ஏமாற்றினாலும் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது.

இடைவேளை வரை குடும்பக் கதையாக நகரும் படம், அதன்பின் கபடி விளையாட்டை மட்டும் மையப்படுத்திச் சென்றதால் சற்றே தடம் மாறிவிட்டது.