தமிழர்களின் பாரம்பரி வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஹேமந்த்.

சசிகுமார், பார்வதி அருண், ஜேடி சக்கரவர்த்தி மற்றும் பலர் நடிக்க இமான் இசையமைத்திருக்கும் படம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இரண்டு கிராமங்களான காரியூர், சிவனெந்தல் ஆகிய கிராமங்களுக்கு இடையில் பொதுவான கோயிலாக உள்ள கருப்பன் கோவிலை நிர்வகிப்பத்தில் காலம் காலமாக போட்டி இருந்து வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டி நடத்தி அதில் வெற்றி பெறுபவர்களுக்கே நிர்வாகம் என முடிவாகிறது. அப்பாவின் மரணத்தால் சென்னையில் விட்டு சொந்த ஊரான காரியூர் வருகிறார் குதிரை ஜாக்கி ஆன சசிகுமார். ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொண்டு தன் ஊருக்கு வெற்றி கிடைக்கப் போராடுகிறார். அதன்பின் என்ன நடந்தது என்பதுதான் மீதிக் கதை.

கிராமத்துக் கதை என்றாலே சசிகுமாருக்கு ‘டெய்லர் மேட்’ கதாபாத்திரமாக அமைந்துவிடும். இந்தப் படத்தில் ஆரம்பத்தில் சென்னையில் உள்ள குதிரை ஜாக்கியாக சிட்டி இளைஞனாக வந்து பின்னர் வில்லேஜ் இளைஞனாக மாறிவிடுகிறார். சசிகுமாரின் ஜோடியாக பார்வதி அருண்  யார் இவர் எனக் கேட்க வைக்கிறார். அந்த அளவிற்கு கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் காரி காளையை வளர்க்கும் மீனா கதாபாத்திரத்தில் முத்திரை பதித்துள்ளார். இது போன்ற நல்ல கதாபாத்திரங்களைத் தேர்வு செய்தால் தமிழில் முக்கிய இடத்தைப் பிடிக்கலாம்.

வில்லனாக ஜேடி சக்கரவர்த்தி, ஊர் பெரியவராக நாகி நீடு, சசிகுமார் நண்பனாக ரெடின் கிங்ஸ்லி மற்ற கதாபாத்திரங்களில் குறிப்பிட வேண்டியவர்கள்.

இமான் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பரவாயில்லை. கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு ஜல்லிக்கட்டுக் காட்சிகளில் கூடவே களமிறங்கியது போல உள்ளது.

இன்னும் சில அழுத்தமான, நெகிழ்வான காட்சிகள், பரபரப்பான திருப்புமுனைகள் இருந்திருந்தால் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கும்.