தமிழ் சினிமா ‘ஹீரோக்கள்’ பின்னால் மட்டுமே இருக்கிறது என்றுதான் பலரும் சொல்வார்கள். ஆனால், ‘ஹீரோயின்கள்’ கூடவும் ஆக்ஷனில் களமிறங்கி ஹீரோக்கள் ஹீரோயிசம் செய்வது போல ஹீரோயின்களும் ஹீரோயினிசம் செய்யலாம் என உணர்த்தியுள்ள ஒரு படம்.

முதலில் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும், படத்தின் ஹீரோவுமான விஷ்ணு விஷாலின் பெரிய மனதைப் பாராட்டியே ஆக வேண்டும். தன்னை விடவும் ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தில் நடித்து, அதைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் பாராட்டுக்குரியது.

இயக்குனர் செல்லா அய்யாவு ஒரு ‘கட்டா குஸ்தி’ வீராங்கனையின் கதையை, ஆணாதிக்க கதாபாத்திரங்களுடன், அவர்களை எதிர்த்து ஒரு பெண் சாதிக்கும் கதையை சுவாரசியமாகவும், கலகலப்பாகவும், சென்டிமென்ட்டாகவும் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். கடந்த சில வருடங்களாக விளையாட்டை மையப்படுத்திய படங்கள் அதிகம் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு பெண்ணின் உடல் வலிமையை, மன வலிமையைக் காட்டக் கூடிய விளையாட்டுப் படங்கள் இந்த அளவுக்கு திருப்திகரமாய் அமையும் அளவிற்கு வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

பெண் சுதந்திரம் என்பதைப் பேசிக் கொண்டிருக்கும் பலர் அதைச் செயல்படுத்துவதில்லை. ஆனால், ஒரு பெண்ணை சுதந்திரமாய் விட்டால் அவளால் எந்த அளவிற்கு சாதிக்க முடியும் என்பதை ஒரு எளிமையான படம் மூலம் சொல்லி புரிய வைத்திருக்கிறார்கள். 

பாலக்காட்டைச் சேர்ந்த கட்டா குஸ்தி வீராங்கனையான ஐஸ்வர்ய லெட்சுமிக்கு கல்யாணம் செய்து வைக்க அவரது வீட்டார் முடிவு செய்து பல மாப்பிள்ளைகளைப் பார்க்கிறார்கள். ஆனால், எதுவும் சரியாக அமையவில்லை. ஐஸ்வர்யாவின் சித்தப்பாவான முனிஷ்காந்த் அவரது நண்பரான கருணாசை பொள்ளாச்சியில் சந்திக்க நேரிடுகிறது. கருணாசின் அக்கா மகனான விஷ்ணு விஷாலுக்கும் பெண் தேடிக் கொண்டிருக்கிறார்கள். தன்னை விட அதிகம் படிக்காத பெண், நீளமான தலைமுடி உள்ள பெண் என கண்டிஷன் போட்டு பெண் தேடிக் கொண்டிருப்பவர் விஷ்ணு. அவரது வசதியைப் பார்த்து தனது அண்ணன் மகள் ஐஸ்வர்யாவைப் பற்றி பொய் சொல்லி விஷ்ணுவுக்குத் திருமணம் செய்து வைக்கக் காரணமாகிறார். திருமணத்திற்குப் பிறகுதான் ஐஸ்வர்யா பற்றிய உண்மை விஷ்ணு விஷாலுக்குத் தெரிய வருகிறது. மனைவியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க நினைத்தவருக்கு ஐஸ்வர்யா குஸ்தி வீராங்கனை எனத் தெரிய வந்ததும் அதிர்ச்சியாகிறார். அதன் பின் நடக்கும் ‘கலவரம்’ தான் படத்தின் மீதிக் கதை.

20 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர், அதிகம் படிக்காதவர், மாமா பேச்சைக் கேட்பவர், மனைவியை அடக்கி ஆள நினைப்பவர், குடித்துவிட்டு ஊரைச் சுற்றிக் கொண்டிருப்பவர் என ‘வீரா’ கதாபாத்திரத்தில் அப்படியே ‘பிட்’ ஆகியிருக்கிறார் விஷ்ணு விஷால். அவர் அப்படியென்றால் குஸ்தி வீராங்கனையாக இருந்தாலும் கணவருக்கு அடங்கி, ஒடுங்கி நடக்கும் ‘செம பிட்’ கதாநாயகியாக ஐஸ்வர்ய லெட்சுமி. தான் யாரென்பதை ஒரு சரியான இடைவேளைக் காட்சியில் கணவருக்கு அதிர்ச்சி கொடுத்து அவரைக் கலங்க வைக்கிறார். ‘பொன்னியின் செல்வன்’ பூங்குழலியைப் பார்த்தே பிரமித்துப் போன ரசிகர்கள் இந்த குஸ்தி வீராங்கனை கீர்த்தியைப் பார்த்து பித்துப் பிடித்தவர்களாகிவிடுவார்கள்.

கருணாஸ், முனிஷ்காந்த், காளி வெங்கட், ரெடின் கிங்ஸ்லி, கஜராஜ், ஹரிஷ் பெரடி என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் இயல்பாய் நடித்து ரசிக்க வைக்கிறார்கள்.

ஜஸ்டின் பிரபாகரன் பின்னணி இசை, ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு, அன்பறிவ் சண்டைக் காட்சிகள் இந்த ‘கட்டா குஸ்தி’க்கு கூடுதல் வலு சேர்ப்பவை. 

பெண்கள் சாதிக்க வயது, குடும்பம், குழந்தை எதுவும் தடையில்லை என்பதை உணர்த்தும் ஒரு படம். ஒவ்வொரு பெண்ணும் அவசியம் பார்க்க வேண்டிய படம். தங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களைக் கூட்டிக் கொண்டு ஆண்களும் சென்று பார்க்க வேண்டிய ஒரு படம்.